மதுர பலன் தரும் மதுர காளியம்மன்


மதுர பலன் தரும் மதுர காளியம்மன்
x

சிறுவாச்சூரில் உள்ள இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கிலோ மீட்டர் முன்னதாக சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. நெடுஞ்சாலையிலேயே ஓர் அழகான வளைவு நம்மை வரவேற்கும். நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்தால் அருள்மிகு மதுர காளியம்மன் ஆலயம் காட்சி தரும்.

சுற்றிலும் மலைகளும், ஏரியும், தோப்புகளும், குளமுமாய் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சூழலில் அன்னை மதுர காளியம்மன் அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.

அன்னையின் திருக்கோலம்

அழகான முன் மண்டபத்தைக் கடந்து இடதுபுறம் திரும்பியதும் அன்னையின் கருவறையைக் காணலாம். கருவறையில் அன்னை அழகுடன், கம்பீரத்துடன் காட்சி தருகிறாள். ஆளுயரத்திற்கும் மேலாக ஒரு திரிசூலம் அவளது வலது தோளில் சாய்ந்து நிற்கிறது.

அன்னைக்கு நான்கு கரங்கள். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் அன்னை. அன்னையின் காலடியில் ஒரு சிம்மம் வாலை உயர்த்திக்கொண்டு பற்கள் எல்லாம் தெரிய கர்ஜித்த நிலையில் ஒரு காலைத் தூக்கி அறையக் காத்திருக்கிறது.

அன்னையின் தலையில் அழகிய கிரீடம். அன்னையின் முகத்தில் புன்னகை இல்லை. கண்களிலும் புன்னகையின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை.

தல புராணம்

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. அது ஓர் அற்புதமான காவியம். அந்தக் காவியத்தின் நாயகி கண்ணகி.

கற்புடைத் தெய்வமான கண்ணகி தன் கணவன் கொலையுண்டதை அறிந்தாள். தன் கணவனுக்கு அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி வெகுண்டு புயலாக மாறினாள். மன்னனிடம் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்தாள். தவறு செய்த மன்னன் இறந்தான். அவள் கோபம் குறையவில்லை. மதுரையை தன் கற்பின் வலிமையால் எரித்தாள். அப்போதும் அவள் சினம் தீரவில்லை. இந்த கண்ணகியே சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என கோவில் புராணம் கூறுகிறது.

மன அமைதியை இழந்த கண்ணகி வடக்கு நோக்கி இரவு பகலாக நடக்கத் தொடங்கினாள். ஒருநாள் இரவு சிறுவாச்சூர் வந்தடைந்தாள். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன். அந்த ஊரில் இருந்த செல்லியம்மன் ஆலயத்தில் அன்றைய இரவை கழிக்க எண்ணிய கண்ணகி அந்த ஆலயத்தில் தங்கினாள். அவள் அங்கு தங்க வேண்டாம் என செல்லியம்மன் கூற, காரணம் கேட்டாள் கண்ணகி.

தன்னை ஒரு மந்திரவாதி ஆட்டிப்படைப்பதாகவும் அவன் வரும் நேரத்தில் கண்ணகி அங்கிருந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறினாள்.

அந்த மந்திரவாதியை தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்த கண்ணகி, அன்று இரவு அங்கு தங்கினாள்.

செல்லியம்மன் சொன்னபடியே இரவு பெருத்த ஆரவாரத்துடன் கோவிலின் உள்ளே நுழைந்தான் மந்திரவாதி. அவனை வதம் செய்து, செல்லியம்மனைக் காப்பாற்றினாள் கண்ணகி.

தன்னை பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றிய கண்ணகியை அதே கோவிலில் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்ட செல்லியம்மன் தான் அருகில் உள்ள மலையில் வசிக்கும் தன் அண்ணனான பெரியசாமி கோவிலில் போய்த் தங்கிக் கொள்வதாகக் கூறினாள்.

சொன்னபடியே தனது கோவிலை கண்ணகியிடம் விட்டுவிட்டு மலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் செல்லியம்மன்.

மதுரையிலிருந்து வந்த கண்ணகியிடம் கோவிலை விட்டுச் சென்றதால் அது முதல் அந்தக் கோவில் மதுரை காளியம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், அப்பெயர் மருவி 'மதுர காளியம்மன்' கோவில் ஆனது.

தன்னை வேண்டுபவர்களுக்கு மதுரமான (இனிமையான) பலன்களைத் தருவதால் இந்த அம்மனுக்கு மதுர காளியம்மன் என்ற பெயர் வெகு பொருத்தமே என பக்தர்கள் கூறுகின்றனர்.

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன் பக்தர்களுக்கு திங்கட்கிழமை தான் காட்சி தருகிறாள். எனவே, இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் தங்குவதற்காக மலைக்கு சென்றுவிடுவதாக ஐதீகம். இந்த இரு நாட்கள் தவிர ஆலய சிறப்பு திருநாட்கள், திருவிழாக் காலங்களில் ஆலயம் திறந்திருக்கும்.

முதல் மரியாதை

மலைக்குப் புறப்படும் முன் செல்லியம்மன் மதுர காளியம்மனிடம் இக்கோவிலில் தனக்கு எப்போதும் முதல் மரியாதை தரப்பட வேண்டுமெனக் கேட்க, மதுரகாளியும் சரி என்கிறாள்.

எனவே, இன்றும் செல்லியம்மன் கேட்டதற்கு ஏற்ப பூஜையின்போது, தீபாராதனை காட்டும் போது முதலில் மலையை நோக்கி தீபாராதனை காட்டிவிட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மாவிளக்கு பிரார்த்தனை

அன்னைக்கு அங்கப் பிரதட்சணம் செய்வோர் ஏராளம். இந்த ஆலயத்தின் உள்ள மற்றுமொரு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு ஏற்றுதல்.

வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல், ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டு வந்து தண்ணீரில் ஊற வைத்து, இடித்து அங்கேயே மாவிளக்கு தயார் செய்கிறார்கள். பின்பு, அதனுடன் அன்னை சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இதற்காக ஆலயத்தின் உள்ளேயே தனியிடம் ஒதுக்கப்பட்டு, உரல்களும், உலக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. அரிசியை இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவு இடித்துத் தர பணியாட்களும் அங்கே உள்ளனர்.

குலதெய்வ வழிபாடு

பெருவாரியான குடும்பங்களுக்கு மதுர காளியம்மன் குலதெய்வமாக விளங்குகிறாள். எனவே, ஆலயத் திறப்பு நாட்களில் மக்கள் இந்த ஆலயத்திற்கு குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கோவிலின் வெளியே மரத்தடியில் பொங்கலிட்டுப் படைத்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

மதுர காளியம்மன் ஆலயத்தின் முன்புறம் ஐயனார், சோலை முத்துசாமி ஆலயம், சோலையம்மன் சன்னதிகளும், நாகர் சன்னதியும் புற்றும் உள்ளன.

பின்புறம் தெற்கே சிறிது தொலைவில் ஊர்சுத்தியான் கோவில் உள்ளது. கோவிலின் மேல்புற மேட்டில் பெரியசாமி ஆலயம் உள்ளது.

விருட்சமும் தீர்த்தமும்

மதுர காளியம்மன் ஆலயத்தின் தல விருட்சம் மருத மரமாகும். தீர்த்தம் ஈசானிய திசையில் உள்ள திருக்குளமாகும்.

ஆலயம் காலை 6.30 முதல் இரவு 8.30 வரை மேலே குறிப்பிட்ட நாட்களில் திறந்திருக்கும்.

திருச்சியில் இருந்தும் பெரம்பலூரில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு நிறைய பேருந்து வசதி உள்ளது.

அருள்மிகு மதுர காளியம்மனை தரிசிப்பதால் பில்லி சூன்யம் விலகும், குழந்தை பேறு கிட்டும். மனதில் எண்ணியபடி மதுரமான பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரார்த்தனைச் சீட்டு

மக்கள் தங்களது மனக் குறைகளையும், கவலைகளையும் ஒரு சீட்டில் எழுதி, அவைகள் தீர வேண்டி பிரார்த்தனை செய்து, அந்தச் சீட்டினை அன்னையின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். பின், அந்தச் சீட்டினை அருகே இருக்கும் பெரியசாமி கோவிலில் (கரை கோவில்) உள்ள சூலத்தில் கட்டிவிட்டால் கவலைகள் தீர்ந்து, நினைத்தது நடக்கும் என்று நம்புகின்றனர்.

திருவிழாக்கள்

ஆண்டு தோறும் சித்திரைத் திங்களில் அமாவாசைக்குப் பின் வரும் முதல் செவ்வாயன்று பூச்செரிதலுடன் தொடங்கி, அடுத்த செவ்வாயில் காப்புக் கட்டி, 13 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், திருத்தேர் முதலியன முக்கிய அம்சங்களாகும். பல்லாயிரக் கணக்கில் மக்கள் இவ்விழாக்களில் கலந்து கொள்வார்கள்.

மேலும் தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு நாட்கள், ஆடிப் பதினெட்டு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, மார்கழி மாதப் பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல், தைப் பூசம், மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

செல்லியம்மன் ஆலயம்

மதுர காளியம்மன் ஆலயத்திற்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் சென்றால் மலையடிவாரம் வருகிறது. மருத மரங்களும், புளிய மரங்களும் நிறைந்து பசுமையாகக் காணப்படுகிறது இந்த இடம். அருகே, சிற்றோடை ஒன்றும் உள்ளது. பெரியசாமி மலை என்பது இந்த இடத்தின் பெயர். மலையடிவாரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு மலையில் ஏறிச் சென்றால் செல்லியம்மன் ஆலயத்தைக் காணலாம். கரடு முரடான பாதை இது. ஏறிச் செல்வதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எந்த வாகனத்திலும் செல்ல இயலாது.

செல்லியம்மன் ஆலயம் திறந்த வெளியாய் உள்ளது. மேற்கூரையோ, சுற்றுச் சுவர்களோ எதுவுமே இங்கு கிடையாது. இங்கே செல்லியம்மனின் அண்ணன் பெரியசாமி உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருக்க, அருகே செல்லியம்மன் அமைதியே உருவாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.

அருகே, லாடசாமி, பெரிய கண்ணி ஐயா, கிணத்தடி ஐயா முதலிய தெய்வங்கள் சுட்ட மண்ணால் ஆக்கப்பட்ட திருமேனிகள் கொண்டுள்ளனர். சூலங்களும் நடப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

உயிர் பலி

செல்லி அம்மனுக்கு ஆடு பலியிடுவதாக வேண்டிக் கொண்டவர்கள், செல்லியம்மனின் முன்னே உள்ள இடத்தில் ஆடுகளை பலியிடுகின்றனர். பின், அந்த ஆட்டினை இரண்டு பேர் கழிகளில் கட்டி தூக்கிக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கி வரும் காட்சி சர்வசாதாரணமாக இங்கு காணக்கூடியது. எனவே, மலைமேல் நடந்து செல்லும்போது வழியில் திட்டு திட்டாய் ரத்தச் சுவடுகளையும், செல்லியம்மனின் முன்னே உள்ள திறந்த வெளியில் உறைந்த ரத்தத்தினையும் நாம் காணலாம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை

மலையடிவாரம் வருவதற்கோ, செல்லியம்மன் ஆலயம் வருவதற்கோ பெண்களுக்கு அனுமதி கிடையாது. எனவே, ஆண்கள் மலைக் கோவில் செல்லும்போது பெண்கள் மதுர காளியம்மன் கோவிலிலோ, அருகிலோ தான் தங்கிவிட வேண்டும்.

பிற ஆலயங்கள்

செல்லியம்மன் ஆலயத்திற்கு சற்று தொலைவில் ஆத்தடி குருசாமி கோவில் உள்ளது. கம்பப் பெருமாள் என அழைக்கப்படும் சன்னதி சிறிது தூரத்தில் தகரக் கொட்டகையுடன் உள்ளது.


Next Story