பக்தர்களை காக்கும் வெக்காளியம்மன்
வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா, பொங்கல் விழா, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அருள்மிகு வெக்காளியம்மன். தன்னை வழிபடும் பக்தர்களை குளிரும், மழையும், வெப்பமும், பாதிக்கக் கூடாது என்பதற்காக அவை அனைத்தையும் அன்னையே தன் சிரசில் தாங்கிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஆம், அழகிய கண்கவர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அன்னைக்கு மேலே கூரை கிடையாது. வானமே எல்லை என்பது போல் வானமே கூரையாய், திறந்த கூரையில், மழையையும் வெயிலையும் தாங்கிக் கொண்டு, தனது பக்தர்களின் துயர்களை களைந்துகொண்டிருக்கும் அன்னையின் திருக்கோலம் நம்மை சிலிர்க்க வைக்கக் கூடியது.
வானம் கறுக்கிறது. இடியுடன் கனமழை கொட்டுகிறது.நாம் கோவிலின் உள்ளே இருக்கிறோம், எப்படி? சலவைக்கல் பளபளக்கும் தளத்தில், சாரலின் நெடிகூட நம் மீது படாத வண்ணம் நின்று கொண்டு அன்னையை தரிசிக்கிறோம்.
ஆனால் அன்னையின் நிலை என்ன? பொழியும் மழை யாவும் அன்னையின் தலையில் வழிந்தோடுகிறது. அந்த இயற்கை சீற்றத்தின் இடையேயும் புன்னகை மாறாத அன்னையின் முகத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.
அம்மனின் திருக்கோலம்
அன்னை வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். அக்னி ஜூவாலையுடன் கூடிய கிரீடம். அதில் நாகம் உள்ளது. நம்மைக் கருணையுடன் நோக்கும் இருவிழிகள். கோரைப் பற்கள் இரண்டு இருந்தும் சீற்றம் இல்லை. சிரித்த முகம். சிவந்த வாய். நான்கு கரங்கள்.
மேற்கரங்களில் வலப்புறம் உடுக்கை, இடப்புறம் பாசம், கீழ்புறம் வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் கபாலம், வலக்காலை மடித்து வைத்து இடக்காலைத் தொங்க விட்டுள்ளாள் அன்னை. அரக்கனை அந்தக் கால் மிதித்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக அம்மன் வலது காலைத் தொங்க விட்ட நிலையில் அமைப்பதுதான் வழக்கம். இங்கே, மதுரையில் கால் மாறி நடனமாடிய நடராஜர் போல் கால் மாறி அமர்ந்திருக்கிறாள். அன்னையின் இடப்பாதம் அருகே சூலமும், இரு பாதங்களும் உள்ளன. கருவறையின் நான்கு மூலைகளில் பாதங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு
கோவிலின் உள் மண்டபம், சுற்றுப் பிரகாரம் ஆகியவை மழை மற்றும் வெயிலுக்குப் பாதுகாப்பானவை. ஆலயத்திற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. தெற்கில் கண்கவர் அலங்கார முகப்புடனும், வடக்கில் சிறிய ராஜ கோபுரத்துடனும் வாயில்கள் அமைந்துள்ளன.
பக்தர்கள் பெரும்பாலும் தெற்கு வாயில் வழியேதான் ஆலயத்தினுள் நுழைகின்றனர். ஆலயத்தில் நுழைந்ததும் மேற்கு பிரகாரத்தில் முதலில் இருப்பது வல்லப கணபதியின் சந்நிதியாகும். அடுத்து விசாலாட்சி உடனுறை விசுவநாதர் சந்நிதி உள்ளது. அடுத்து மயூர முருகர் வள்ளி, தேவசேனை சந்நிதியும், காத்தவராயன், பெரியண்ணன், மதுரை வீரன் சந்நிதிகளும் உள்ளன. அடுத்து உற்சவ அம்மன் சந்நிதி, பொங்கு சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
சனீஸ்வரரை வலம் வந்து வடக்குப் பிராகாரம் திரும்பினால் அம்மனுக்கு எதிரே நடப்பட்டுள்ள சூலமும், அதில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பிரார்த்தனை சீட்டுகளையும் காணலாம். வடகிழக்கு ஈசான்ய மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
தல புராணம்
பராந்தக சோழன் என்ற சோழ மன்னன் உறையூரை ஆண்ட போது சாரமா முனிவர் என்ற முனிவரும் வாழ்ந்து வந்தார். தாயுமானவரின் பக்தர் அவர். இறை வழிபாட்டுக்காகவே ஒரு நந்தவனத்தை நிறுவி, அதில் மலரும் பூக்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார்.
அந்த நந்தவனத்தில் இருந்த மலர்கள் களவாடப்படுவதையும், மகாராணியின் கூந்தலுக்காக மன்னரே ஆட்கள் மூலம் மலர்களைத் திருடுவதையும் அறிந்த முனிவர் மிகுந்த வேதனையடைந்தார்.
மக்களில் யாராவது தவறு செய்தால் மன்னனிடம் போய் முறையிடலாம். மன்னனே தவறு செய்தால் யாரிடம் சென்று முறையிடுவது? இறைவனிடம் சென்று தானே முறையிட முடியும்?. சென்றார் முனிவர். தாயுமானவரிடம் சென்று தன் குறையை முறையிட்டார்.
தன் பக்தனின் மனக் குறையைக் கேட்ட இறைவனுக்கு சீற்றம் வந்தது. கிழக்கு முகமாக திருக்கோலம் பூண்டிருந்த இறைவன், மேற்கு முகமாகத் திரும்பினார். அவர் கண்களில் தீப்பொறிகள் கிளம்பின. உறையூரில் மண் மாரி பொழியத் தொடங்கியது.
குடிமக்கள் ஊரைவிட்டு ஓடத் தொடங்கினர். மாட மாளிகைகள் மண்ணில் புதைந்தன. மக்களின் துயரை உறையூர் எல்லையில் எழுந்தருளியிருக்கும் அன்னை வெக்காளியம்மன் பார்த்தாள். தாயுமானவரின் சினம் தவிர்க்க, தண்ணொளி வீசும் முகத்துடன் இறைவன் முன் தோன்ற, மக்களைக் காக்கும் அன்னையின் அருளை இறைவன் உணர்ந்தார். அவரது சினம் குறைந்தது. மண் மாரியும் நின்றது.
மக்கள் கூட்டத்துடன் மன்னன் பராந்தக சோழனும், அரசி புவனமகாதேவியும் காவிரியை நோக்கி ஓடுமாறு அன்னை கட்டளையிட்டாள். மன்னனும் அரசியும் அவ்வாறே செய்தனர். காவிரிக் கரையில் மன்னன் குதிரையிலிருந்து கீழே விழுந்தான். மணலில் சிக்கி மாண்டான்.
அரசி காவேரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். கர்ப்பிணியான அரசியை உத்தமச்சேரி அருகே ஓர் அந்தணர் காப்பாற்ற, சில நாள்களில் அரசி ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை தான் பின்னாளில் சோழநாட்டை ஆண்ட கரிகால் பெருவளத்தான். கல்லணையைக் கட்டியதும் அவனே.
விழாக்கள்
பெண் பக்தர்களின் கூட்டம் இங்கு அலை அலையாய் வருவது வாடிக்கை. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாள்களில் இந்த ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பூச்சொரிதல் விழா, பொங்கல் விழா, நவராத்திரி விழா ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆலயத் திறப்பு
இத்திருக்கோவில் தினசிரி காலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. விசுவரூப வழிபாடு காலை 5.30 மணிக்கும், காலை வழிபாடு 6.15 மணிக்கும், உச்சி காலம் பகல் 12 மணிக்கும், உச்சி கால தீப ஒளி வழிபாடு பிற்பகல் 1 மணிக்கும், மாலை வழிபாடு 6.15 மணிக்கும், இரவு வழிபாடு இரவு 9 மணிக்கும் நடைபெறும்.
பேருந்து வசதி
இந்த ஆலயம் செல்ல திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. உறையூரில் நாச்சியார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சிறிது தொலைவு நடந்தால் ஆலயம் சென்றடையலாம்.
தன்னை நாடி வந்து வேண்டும் தனது பக்தர்களுக்கு வேண்டியதை எல்லாம் வேண்டியவாறே அன்னை அருள்மிகு வெக்காளியம்மன் வழங்குவாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.