பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சியா?


பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சியா?
x

அரசியல் அமைப்பு சட்டப்படி, எல்லா மாநிலத்திலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட அரசு இருந்தாலும், பெரிய அண்ணன் போல கவர்னரும் இருக்கிறார்.

அரசியல் அமைப்பு சட்டப்படி, எல்லா மாநிலத்திலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட அரசு இருந்தாலும், பெரிய அண்ணன் போல கவர்னரும் இருக்கிறார். ஆண்டாண்டு காலமாக கவர்னர், தேர்தல் முடிந்தவுடன் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, சட்டசபையை கூட்டி முதல் உரையாற்றுவது, அரசின் நிதி சார்ந்த ஆணைகளுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வது போன்ற பணிகளை ஆற்றுவார்.

கவர்னர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவி, அதற்கு ஒன்றும் பெரிய அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டாலும், கவர்னர் முட்டுக்கட்டை போட்டால் நிர்வாகத்தில் பல தடங்கல்கள் ஏற்படுவதுண்டு. தமிழ்நாட்டில் ஒப்புதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் 'நீட்' விலக்கு மசோதா அதற்கு ஒரு சான்றாகும். கவர்னருக்கும், அரசுக்கும் நல்ல சுமுக உறவு இருந்தால்தான், அரசு என்ற சக்கரம் சிக்கல் இல்லாமல் ஓடும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில், அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கசப்பான உறவே இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருக்கிறது. பகவந்த் மான் முதல்-மந்திரியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்தான் இப்போது பஞ்சாப் கவர்னராக இருக்கிறார். அவருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே நல்ல உறவு இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் அரசுக்கு எதிராக பெரும் கண்டன கணையை வீசியுள்ளார். அவர் முதல்-மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "என்னுடைய கடிதங்களுக்கு தொடர்ந்து பதில் வரவில்லையென்றால், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன், கிரிமினல் நடவடிக்கைகள் எடுப்பேன்" என்று எச்சரித்துள்ளார். "இதற்கு முன்பு நான் எழுதிய கடிதங்களில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதையும், போதை பொருள் விற்பனை தாராளமாக நடப்பதையும் குறிப்பிட்டு இருந்தேன். போதை பொருட்கள் பிரச்சினை மிக கடுமையாக இருக்கிறது. அரசு நடத்தும் மதுபான கடைகளில் கூட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. நான் கேட்ட தகவல்களுக்கு, வேண்டும் என்றே நீங்கள் பதில் அளிக்கவில்லை" என்றும் முதல்-மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சி சூடாக பதில் அளித்துள்ளது. பஞ்சாப்புக்கு பதிலாக மணிப்பூரிலும், அரியானாவிலும் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தட்டும் என்று கூறியுள்ளது. ஆக, பஞ்சாப் அரசாங்கத்துக்கு கவர்னரால் ஒரு அச்சுறுத்தல் வந்துவிட்டது. ஆனால், அரசியல் சட்டம் 356-ன் கீழ் ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவது என்பது, சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அவ்வளவு எளிதல்ல. என்றாலும், இதுபோல மாநில அரசுகளுக்கும், கவர்னர்களுக்கும் இடையே ஒரு விரிசல் ஏற்படுவதற்கு மத்திய அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ள 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய நல்ல பாதையை வகுத்துக்கொடுக்க வேண்டுமே தவிர இடையிலேயே கவிழ்க்கக்கூடாது.


Next Story