வியாபாரிகளுக்கு சமாதான திட்டம் !


வியாபாரிகளுக்கு சமாதான திட்டம் !
x

விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து விளை பொருட்களும், தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்களும், வியாபாரிகள் மூலம்தான் மக்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து விளை பொருட்களும், தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்களும், வியாபாரிகள் மூலம்தான் மக்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபாரிகள் விற்பனை செய்வதால் கிடைக்கும் தொகைக்கு, மத்திய-மாநில அரசுகள் வரி வசூலிக்கின்றன. தமிழ்நாட்டில் முதலில் விற்பனை வரி என்ற பெயரிலும், மதிப்பு கூட்டு வரி என்ற பெயரிலும் வியாபாரிகளிடம் வரி வசூலிக்கப்பட்டுவந்தது. பின்பு 1-1-2017 முதல் நாடு முழுவதும் சரக்கு சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

இந்த ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பாக விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக, இன்னும் ரூ.25 ஆயிரம் கோடி தொகை அரசுக்கு வியாபாரிகள் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 அப்பீல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 569 ஆகும். நிலுவையில் இருக்கும் வழக்குகளால் வியாபாரிகளுக்கும் கடும் சிரமம். தமிழக அரசின் வணிக வரித்துறைக்கும் மிகுந்த பணிச்சுமை. மேலும், அரசுக்கு இப்போதுள்ள நிதி சுமையில் வரவேண்டிய வரி நிலுவை வந்தால், மிக உதவியாக இருக்கும்.

இந்தநிலையை தவிர்க்க, வியாபாரிகளுக்கும், அரசுக்கும் இடையே சிரமம் இல்லாமல், இருவரும் தாவாக்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சமாதானமாக ஒரு தீர்வை காணும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் அதிகாரிகள் வகுத்து, சமாதான திட்டமாக தயாரித்து தாக்கல் செய்தனர். இந்த திட்டத்தை ஆய்வு செய்து சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததுடன், நேற்று முன்தினம் தொடங்கியும் வைத்தார். இந்த அறிவிப்பின்படி, வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் 95 ஆயிரத்து 502 சிறு வியாபாரிகளுக்கு பெரும் பலன் கிடைக்கும்.

இதுபோல, ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் என 4 வரம்புகளில் நிலுவைத்தொகை வைத்து இருப்பவர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சலுகையைப் பயன்படுத்தி வணிக வரி, வட்டி மற்றும் அபராத தொகையைக் கட்டினால், வழக்குகளில் இருந்து வெளிவரலாம். எடுத்துக்காட்டாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிலுவை வைத்து இருப்பவர்கள், மொத்த தொகையில் 20 சதவீதம் கட்டினால் போதும்.

மொத்தத்தில் அரசுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிக்கரம் நீட்டும் இந்த சமாதான திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இருவருமே பயனடையும் வகையில், நிர்வாக நடைமுறைகளை கள அதிகாரிகள் எளிதாக்கவேண்டும். வியாபாரிகளும் சட்டப்போராட்டத்தில் உழல்வதைத் தடுக்க, இந்த வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தை வியாபாரிகள் பயன்படுத்தி வரி பாக்கி என்ற வலையில் இருந்து மீண்டுவராமல் போய்விட்டால், தொடர்ந்து காலாகாலமாக நிலுவை சேற்றில் உழன்று, அடுத்த சந்ததிக்கும் கஷ்டமான நிலையை ஏற்படுத்திவிடும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். வியாபாரிகளுக்கும், அரசுக்கும் இடையேயான பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான சரியான திட்டம்தான், இந்த சமாதான திட்டம்.


Next Story