உக்ரைன் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு!


உக்ரைன் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு!
x
தினத்தந்தி 17 Sep 2022 5:32 AM GMT (Updated: 17 Sep 2022 5:50 AM GMT)

"பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை கண்டித்துள்ளார்" என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடந்தது.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்த பின்னர் இரு தலைவர்களும் சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும்.

ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறுகையில், "இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைபேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும்" என வலியுறுத்தினார்.

அதற்கு, "உங்கள் கவலைகள் பற்றி எனக்குத் தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று மோடியிடம் புதின் கூறினார்.

இந்த இரு தலைவர்கள் உரையாடல் குறித்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

"(பிரதமர்) மோடி உக்ரைனில் நடந்த போர் தொடர்பாக (ரஷிய அதிபர்)புதினை கண்டித்துள்ளார்" என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒரு அதிர்ச்சியூட்டும் பொது கண்டனமாக பிரதமர் மோடி புதினிடம் பேசினார்" என்று அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது. "இந்தியாவின் தலைவர் புதினிடம் இப்போது இது போருக்கான காலம் அல்ல என்று கூறுகிறார்" என்று நியூயார்க் டைம்ஸ் தனது தலைப்பில் கூறியது.

தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்களின் வலைப்பக்கத்திலும் இன்றைய தினம் இது முதன்மை செய்தியாக இருந்தது.


Next Story
  • chat