மயிலாடுதுறையை எட்டிய காவிரி நீர்


மயிலாடுதுறையை எட்டிய காவிரி நீர்
x
தினத்தந்தி 1 Jun 2022 12:56 PM GMT (Updated: 1 Jun 2022 1:11 PM GMT)

மயிலாடுதுறையை காவிரி நீர் எட்டியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:-

மயிலாடுதுறையை காவிரி நீர் எட்டியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணை திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக குறுவை பாசனத்துக்கான தண்ணீர் ஜூன் மாதம் 12-ந் ேததி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டது.

மயிலாடுதுறையை எட்டியது

இந்த நிலையில் கடைமடை பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கத்தை காவிரி நீர் எட்டியது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் யோகேஷ் மற்றும் விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

திருவாலாங்காடு மதகில் இருந்து காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்பாக மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

கடைமடை பகுதி

இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story