மல்லூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல்


மல்லூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல்
x

மல்லூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

இரும்பு வியாபாரி

மல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவருடைய மகன் ராமு (வயது 46). இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இதனிடையே ராமுவுக்கும், அவருடைய அத்தை மகன் ராஜா என்பவருக்கும் பூர்வீக சொத்தான வீடு சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், பிரச்சினைக்குரிய வீடு ராஜாவிற்கு சொந்தம் என கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீட்டில் வசித்து வந்த ராமுவின் பெற்றோரை வீட்டை காலி செய்யும்படி ராஜா நேற்று கூறியுள்ளார்.

செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த ராமு வீட்டில் இருந்து தனது பெற்றோரை காலி செய்ய கூடாது என்றும், வீடு தங்களுக்கே சொந்தம் எனக்கூறியும் மல்லூர் கந்தசாமி கோவில் தெரு பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லூர் போலீசார் ராமுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் பழைய இரும்பு வியாபாரி ராமுவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story