தலையங்கம்

கால்பந்து திருவிழாவில் நாமக்கல் முட்டை!


கால்பந்து திருவிழாவில் நாமக்கல் முட்டை!
30 Nov 2022 7:50 PM GMT

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. வருகிற 18-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டிகளை டெலிவிஷனில் காண்பதிலும், முடிவுகளை பத்திரிகைகள் படித்து தெரிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கிய நாள் முதல் இதுவரை இந்திய அணி கலந்துகொள்ளவில்லை என்பதும், இந்தியாவில் இந்த போட்டி நடத்தப்படவில்லை என்பதும், இந்திய மக்களுக்கு குறிப்பாக கால்பந்து ரசிகர்களுக்கு மனக்குறையாக இருந்து வருகிறது. ஆனால், போட்டியைக்காண நிறைய ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள். வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இருந்து தினமும் கோழி முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. விளையாட்டு வீரர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் நாமக்கல் முட்டையை ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை.

வழக்கமாக, நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு தினமும் 1½கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இப்போது உலக கால்பந்து போட்டி நடைபெறுவதால் தினமும் 2½ கோடி முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. நாமக்கல்லில் தினமும் 5½ கோடி முதல் 6 கோடி வரை முட்டைகள் உற்பத்தியாகின்றன. வழக்கமாக துருக்கி நாடுதான் கத்தாருக்கு அதிகளவில் முட்டை சப்ளை செய்துவந்தது. ஆனால், முட்டை உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது என்று கூறி தற்போது விலையை உயர்த்திவிட்டது. 360 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டியை நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யும்போது, அதன் விலை ஏறத்தாழ ரூ.2,400. அதாவது, 29 முதல் 30 வரையிலான அமெரிக்க டாலராகும். அதே முட்டை பெட்டிக்கு துருக்கி நிர்ணயித்த விலை ரூ.2,900 ஆகும். இந்த குறைவான விலைதான் நாமக்கல் முட்டைக்கு கத்தாரில் இருந்து ஆர்டரைப் பெற்றுத்தந்தது.

நாமக்கல்லில் ஏறக்குறைய 1,100 கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இந்தியாவில் தினமும் 31 கோடியே 59 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகின்றன. உலகில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தாற்போல, முட்டை உற்பத்தி அதிகமாக இருப்பது இந்தியாவில்தான். இந்தியாவிலும் முட்டை உற்பத்தி தொழில் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் முட்டை கோழிக்கெனவும், கறிக்கோழிக்கெனவும் தனித்தனியாக கோழிப்பண்ணைகள் உள்ளன. இது மிகவும் லாபகரமான தொழில். குறைந்த அளவு நிலத்தில் அதிகமான கோழிகளை விஞ்ஞான ரீதியில் வளர்த்தால் நிறைய முட்டைகள் தொடர்ந்து கிடைக்கும். ஒரு கோழி ஆயுளுக்கு 330 முட்டைகள் வரை இடும்.

கறிக்கோழியான பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணைகளில், கோழிக்குஞ்சை வளர்த்தால், 5 வாரத்தில் பெரிதாக வளர்ந்து கறிக்கு தயாராகிவிடும். உலகம் முழுவதிலும் முட்டையின் தேவை, கோழிக்கறியின் தேவை அதிகமாகி, உள்நாட்டிலும் நல்ல தேவை இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அங்கன்வாடியில் இப்போது குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவில் தினமும் முட்டைகள் வழங்கப்படுகின்றன. நல்ல தேவை இருப்பதால் கோழிப்பண்ணை தொழில் ஒரு நல்ல தொழில்.