தலையங்கம்

உதயமானார், உதயநிதி ஸ்டாலின்


உதயமானார், உதயநிதி ஸ்டாலின்
14 Dec 2022 7:51 PM GMT

கடந்த ஆண்டு மே மாதத்தில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததில் இருந்தே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கிணங்க அமைச்சர்களுக்கும், துறை செயலாளர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததில் இருந்தே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கிணங்க அமைச்சர்களுக்கும், துறை செயலாளர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்புகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்று கட்சியில் அனைவரும் கோரிக்கை விடுத்தும், அவருக்கு பல வகைகளில் தேர்வுகள் வைத்து இப்போது அமைச்சர் பொறுப்பில் அமர வைத்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நேற்று, அவருக்கு கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த துறைகளுக்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் மிக மிக பொருத்தமானவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இளைஞர் நலன் பொறுப்புக்கு அவர் புதியவர் அல்ல. 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதில் இருந்தே இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி மக்கள் பணிகளைச் செய்தார். மாநிலம் முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்கள் இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இளைஞர் நலனுக்கு என்னென்ன செய்யவேண்டும்? என நன்கு தெரிந்தவர், புரிந்தவர்.

இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நட்சத்திரமாக விளங்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பலதிட்டங்களை செயல்படுத்துவார் என்று பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன. விளையாட்டு மேம்பாட்டில் அவருக்குள்ள திறமை கடந்த ஜூலை 28- ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதிவரை சென்னையில் நடந்த 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியில் பளிச்சிட்டது. அதன், ஏற்பாட்டுக்குழு உறுப்பினராக செயல்பட்டு, இந்த போட்டியில் கலந்துகொண்ட 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் அனைவரையும் 'இப்படி ஒரு போட்டியை நடத்தமுடியுமா?', 'இப்படி ஒரு தொடக்க விழாவையும், நிறைவு விழாவையும் சிறப்பாக செயல்படுத்திட முடியுமா?', என்று வியக்கும் அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு 'அன்சங் ஹீரோ'வாக இருந்து செய்தவர்.

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவர், நிச்சயமாக தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்குவார் என்பது பதவியேற்றவுடன் அவர் அளித்த பேட்டியில் சொன்ன அறிவிப்புகளில் இருந்தே தெரிகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் பல திட்டங்கள் அவரால் ஒளிவிடும். தேர்தலுக்கு முன்பே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கெடுத்த உதயநிதி ஸ்டாலின், பல கிராமங்களில் திரளாக கூடியிருந்த மக்களுடன், அவர்களின் வழக்குமொழியிலேயே இயல்பாக பேசி அவர்களின் தேவைகளையெல்லாம் அறிந்தவர். எனவே மக்களுக்கு தேவையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், வறுமை ஒழிப்பு திட்டங்கள், கிராமப்புறங்களில் மக்களுக்கு இருக்கும் கடன்களை போக்க என்ன செய்யமுடியும்? என்பதற்கும் மக்களுடன் நேரடியாக பழகிய அவரது மக்கள் பணி வழிகாட்டும். இந்த துறைகளிலெல்லாம் நிச்சயமாக உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. அவரது களப்பணிகள் அவருக்கு துணை நிற்கும்.