தலையங்கம்

ஆசிரியர்களுக்கு பிறந்தநாள் பரிசு!


ஆசிரியர்களுக்கு பிறந்தநாள் பரிசு!
9 March 2023 8:14 PM GMT

கடந்த 55 ஆண்டுகளாக அரசியலையே தன் வாழ்க்கையாக கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1-ந்தேதி தன் 70-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கடந்த 55 ஆண்டுகளாக அரசியலையே தன் வாழ்க்கையாக கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1-ந்தேதி தன் 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் டெலிபோனில் பேசி வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான கட்சி தலைவர்கள், அதிகாரிகள், தொண்டர்கள் நேரில் பெருந்திரளாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சருக்கு எப்போதுமே மாணவர்கள், ஆசிரியர்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது, மாணவர்களுக்கு பலனளிக்கும் 'நான் முதல்வன்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 28.2.2023 அன்று தன் பிறந்தநாளை, முதலாவதாக சென்னையிலுள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில், அந்த மாணவர்களை 'கேக்' வெட்டச்சொல்லி, அவர்களுக்கு கேக்கை ஊட்டிவிட்டு கொண்டாடினார். அந்த குழந்தைகள் வாரி வழங்கிய வாழ்த்துகளை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.

1984-ம் ஆண்டில் இருந்து, ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், தன் பிறந்த நாளை இந்த மாணவர்களோடு கொண்டாடுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளன்று 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகளை உள்ளடக்கிய 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் படிக்கும் 50 ஆயிரத்து 306 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இந்த கருணை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 433 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 56 ஆயிரத்து 98 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம், அவர் பிறந்த நாள் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் பல நல்ல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.225 கோடி செலவில் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் 4 அற்புதமான திட்டங்களை அறிவித்துள்ளார். அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி, அதாவது 'டேப்லெட்' வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆசிரியர்கள் தங்களை மேலும் சிறப்பாக தயார்படுத்திக்கொள்வதற்கு இந்த 'டேப்லெட்' மிகவும் அத்தியாவசிய தேவையாகும். இனி நமது ஆசிரியர்கள் கைகளில் புத்தகங்கள், நோட்டுகளைக் கொண்டுவந்து கல்வி கற்பிக்கும் நிலைமாறி, டேப்லெட்டுடன் வரும் காட்சியை தமிழ்நாட்டில் காண முடியும்.

அடுத்த அறிவிப்பாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்களின் உடல்நலன் காக்கும் உன்னத திட்டமாகும். 3-வது அறிவிப்பாக, உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து, மாணவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களுடைய குழந்தைகளுக்கும் ஒரு உதவியை அவர் வழங்கியிருக்கிறார். 4-வதாக அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். தன் பிறந்தநாளன்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்ல பரிசுகளை வழங்கியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை மகிழ்ச்சியால் திக்கு முக்காட செய்துவிட்டார்.