தலையங்கம்

கோரிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின்; நிறைவேற்றினார் அமித்ஷா!


கோரிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின்; நிறைவேற்றினார் அமித்ஷா!
19 April 2023 7:49 PM GMT

தமிழக இளைஞர்களுக்கு, ‘எப்போதுமே மத்திய அரசாங்க பணிகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு கிடைக்கிறது,

தமிழக இளைஞர்களுக்கு, 'எப்போதுமே மத்திய அரசாங்க பணிகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு கிடைக்கிறது, தமிழ் தெரிந்த நமக்கு கிடைக்கவில்லையே...' என்ற அங்கலாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் இந்த தேர்வுகள் எல்லாம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடப்பதால், இந்தியை தாய் மொழியாக கொண்ட வடமாநில இளைஞர்கள் எளிதில் அந்த வேலைகளுக்கு தேர்வு பெற்று விடுகிறார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடனேயே இந்த குறையைப்போக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு, மத்திய ஆயுத போலீஸ் படையில் போலீஸ்காரர்களாக சேருவதற்காக 9 ஆயிரத்து 212 இடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இந்த தேர்வை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதவேண்டும் என்பதுதான்.

இந்த அறிக்கை வந்தவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார். உடனடியாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். இந்தி மொழி பேசுவோருக்கு சாதகமாகவும், தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிராகவும் இந்த தேர்வு இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணை தமிழ் உள்பட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும்போது, இந்த ஆட்சேர்க்கைக்கான கம்ப்யூட்டர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசு பணி தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது. எனவே தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் இந்த கம்ப்யூட்டர் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றங்கள் செய்யவேண்டும், மேலும் அனைத்து மத்திய அரசாங்க பணியாளர்கள் தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளில் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை உடனடியாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்றுக்கொண்டு, அதுதொடர்பான உடனடி மாற்றங்களை செயல்படுத்தும் ஆணைகளை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து உள்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுத போலீஸ் படையில் போலீஸ்காரர்கள் தேர்வு இந்தி, ஆங்கிலத்தோடு அசாம் மொழி, வங்காள மொழி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கணி ஆகிய 13 மொழிகளிலும் நடத்தப்படும். இதுபோல மத்திய அலுவலர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பணியாளர் தேர்வுகளையும் தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு பாதிப்பு என்றவுடன் உடனடியாக இதை மத்திய உள்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச்சென்றதால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாமல் 13 மொழிகளை பேசும் மாநில இளைஞர்களும் பயனடைந்து அவரை மனதில் போற்றுவார்கள், பாராட்டுவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல், அந்த மாநில மக்களும் நன்றியுடன் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

Related Tags :