தலையங்கம்

ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா பிரதமர் நரேந்திர மோடி?


ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா பிரதமர் நரேந்திர மோடி?
11 July 2023 7:53 PM GMT

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு குறைவான கால அவகாசமே இருப்பதால், அரசியல் கட்சிகளிடையே சூடு பிடித்துவிட்டது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு குறைவான கால அவகாசமே இருப்பதால், அரசியல் கட்சிகளிடையே சூடு பிடித்துவிட்டது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் எப்படியும் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற முனைப்பில், பல கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டுவருகிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அந்த தொகுதிகளில், 'பூத்' கமிட்டி அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.

தமிழக பா.ஜ.க.வில் ஒரு துடிப்பு தெரிகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்து தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல இருக்கிறார். நாள் தவறினாலும், அவரது அறிக்கை, பேட்டி வர தவறுவதில்லை. அவர் மட்டுமல்லாமல், டெல்லியில் இருந்து பல தலைவர்கள், மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து, பா.ஜ.க. அரசாங்கத்தின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூறுகிறார்கள். உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழ்நாட்டு விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கட்சி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

கடந்த மாதம் சென்னை வந்த அமித்ஷா, ஒரு பெரிய ஆச்சரியமான செய்தியை தெரிவித்தார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடந்த தென்சென்னை மக்களவை தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இது பா.ஜ.க.வால்தான் முடியும். கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து 2 பேருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை" என்று பேசியது, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். யாரை மனதில் வைத்து பேசுகிறார், அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ? என்ற விவாதம் வந்தபோது, இல்லை.. இல்லை.. நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவார் என்று அடித்து சொல்லியிருக்கிறாரே? என்ற கருத்தே பெரும்பான்மையாக வெளிவந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

11 மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய செயலாளர்களின் பிராந்திய ஆலோசனை குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் நம்பள்ளியில் நடந்தது. அப்போது, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "வரப்போகும் தேர்தலில் ஏதாவது ஒரு தென் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி போட்டியிடவேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளது" என்று கூறி, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் "எங்கு போட்டியிடலாம்" என்று கருத்து கேட்டபோது, பெரும்பான்மையினர், "ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர். இப்போது, ஆன்மிக பூமியான வாரணாசியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக பூமியான ராமேசுவரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பதும் ஒரு கருத்தாக இருந்தது.

அமித்ஷா சென்னையில் சொன்னதையும் இப்போது 11 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் கூட்டிப் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவது போலத்தான் தெரிகிறது. அப்படி அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. களத்தில் அனல் பறக்கும். உலகத்தின் பார்வையே தமிழ்நாட்டின் மீது இருக்கும்.