தலையங்கம்

எனது மனம்; எனது நாடு!


எனது மனம்; எனது நாடு!
8 Aug 2023 7:48 PM GMT

பிரதமர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், நாட்டு மக்களிடம் ரேடியோவில் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றுவது வழக்கம்.

பிரதமர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், நாட்டு மக்களிடம் ரேடியோவில் 'மனதின் குரல்' என்ற தலைப்பில் உரையாற்றுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பல செய்திகளை அவர் சொல்வது உண்டு. நாட்டில், பல பகுதிகளிலுள்ள சாதாரண மக்களின் சாதனைகளையும், அவர்களின் வேண்டுகோள்களையும் அவர் இந்த செய்தியில் சொல்வார். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், முதலாவதாக மரம் நடுதல், நீர்ப்பாதுகாப்பின் அவசியத்தை விளக்கினார். "சுதந்திரம் அடைந்த அமுத பெருவிழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகள் இப்போது மெருகேறியிருக்கிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், "இப்போதும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகளை உருவாக்கும் பணி நடந்துவருகிறது. ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தது 75 நீர்நிலைகளை உருவாக்கும் அல்லது புதுப்பிக்கும்" என்ற நல்ல செய்தியை அறிவித்தார்.

தமிழ்நாட்டில் வடவள்ளியை சேர்ந்த சுரேஷ் ராகவன், பல்வேறு தாவரங்கள்-விலங்குகளின் ஓவியங்களை தீட்டி ஆவணப்படுத்தியிருப்பதையும், கலையின் வாயிலாக இயற்கைக்கு சேவை புரிவதையும் வெகுவாக பிரதமர் பாராட்டியிருந்தது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது. இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டில் மேலும் ஒரு இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், "எனது மனம்; எனது நாடு" இயக்கம் தொடங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவை போற்றும் வகையில், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. அவர்களின் நினைவாக லட்சக்கணக்கான கிராமங்களில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும் என்று அவர் உறுதி அளித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு, அவர்கள் சொந்த ஊரில் கல்வெட்டு அமைக்கப்படும்போது, புகைப்படமும், செய்த தியாக வரலாறும் அதில் பொறிக்கப்பட்டு, வருங்கால சந்ததியும் அவர்களை நினைத்து பெருமைப்பட்டு வீரவணக்கம் செலுத்த வகை செய்யவேண்டும். என் மண்ணை சேர்ந்த இந்த வீரர், என் தேசத்துக்காக உயிர் தியாகம் செய்தார் என்று, அந்த ஊர் மக்கள் பெருமைப்படுவார்கள். மேலும், நாட்டின் மூலை முடுக்கிலுள்ள குக்கிராமங்களில் இருந்து 7,500 கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு, அமுத கலச யாத்திரையாக டெல்லிக்கு கொண்டு வரப்படும். மண் மட்டுமல்லாமல், மரக்கன்றுகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இந்த அமுத கலச யாத்திரையில் கொண்டுவரப்படும். இவ்வாறு 7,500 அமுத கலசங்களில் கொண்டுவரப்படும் மண்ணையும், செடிகளையும் சேர்த்து, டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவு சின்னம் அருகில் அமுத பூங்காவனம் அமைக்கப்படும்.

"ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பதன் அடையாளமாக, இந்த அமுத பூங்காவனம் திகழும் என்று மிகவும் உணர்ச்சி பொங்க பிரதமர் பேசினார். இதுமட்டுமல்லாமல், கடந்த சுதந்திர தினத்தன்று வீடுகள்தோறும் தேசிய கொடி பறக்க விடப்பட்டதுபோல, இந்த ஆண்டும் எல்லோருடைய வீடுகளிலும் மூவர்ண கொடியை பறக்கவிடவேண்டும், இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும் என்று சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது. எனது மனம்; எனது நாடு.