தலையங்கம்

சென்சார் சான்றிதழில் மாற்றம்


சென்சார் சான்றிதழில் மாற்றம்
3 Oct 2023 8:00 PM GMT

சினிமா திரையிட சென்சார் போர்டு வழங்கும் சான்றிதழ்களில் உள்ள பிரிவுகளில், கூடுதலாக 3 பிரிவுகள் வருகின்றன.

சினிமா திரையிட சென்சார் போர்டு வழங்கும் சான்றிதழ்களில் உள்ள பிரிவுகளில், கூடுதலாக 3 பிரிவுகள் வருகின்றன. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுத்தாலும், ஒரு பெரிய தடையை தாண்டினால்தான் திரையிட முடியும். படம் எடுத்து முடித்த பிறகு திரைப்பட தணிக்கை சான்றிதழ் வாங்கினால்தான், தியேட்டருக்கு அனுப்ப முடியும்.

தமிழ் படங்களை பொருத்தமட்டில், சென்னையில் உள்ள திரைப்பட சான்றிதழ் அலுவலகத்தில் ஒரு மண்டல அதிகாரி, உதவி மண்டல அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதுதான் சென்சார் போர்டு என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் மண்டல சென்சார் போர்டு அதிகாரியாக பாலமுரளி ஐ.ஏ.எஸ்.-ம், உதவி மண்டல அதிகாரியாக முத்துகிருஷ்ணனும் இருக்கிறார்கள். ஒரு படத்தின் டிரெய்லர் திரையிடப்படவேண்டும் என்றாலும், இந்த சான்றிதழ் வாங்கவேண்டும். டிரெய்லரை மண்டல அதிகாரி அல்லது உதவி மண்டல அதிகாரி மற்றும் ஒரு உறுப்பினர் பார்த்து சான்றிதழ் அளித்தால்தான் டிரெய்லரை திரையிட முடியும்.

முழு படமும் ரிலீசாகும் முன்பு, திரைப்பட சான்றிதழ் வாங்கி, அதை படத்துடன் தொடக்கத்தில் இணைத்தால்தான் திரையிடலாம். அந்த சான்றிதழை வழங்க மண்டல அதிகாரி அல்லது உதவி மண்டல அதிகாரியுடன் 4 உறுப்பினர்கள் உட்கார்ந்து படத்தைப் பார்ப்பார்கள். 4 உறுப்பினர்களில் கண்டிப்பாக 2 பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஒருவர் வரவில்லையென்றாலும், கோரம் இல்லையென்று கூறி ரத்து செய்துவிடுவார்கள். சென்சார் விதிகள் கண்டிப்பானவை. கெட்ட வார்த்தைகள் வந்தாலோ, ரத்தம் பீறிட்டு வருவது, மார்பக கோடுகள் தெரிவது, உதட்டோடு உதடு தொட்டு முத்தமிடும் காட்சிகள், உடல் தெரிய குளிக்கும் காட்சிகள், கற்பழிப்பு காட்சிகளை பட்டவர்த்தனமாக காட்டுதல், மதங்களை, கடவுள்களை இழிவுபடுத்தும் காட்சிகள், கடும் வன்முறை காட்சிகள், அரை அல்லது முழு நிர்வாண காட்சிகள் என்பது போன்ற குழந்தைகளை பாதிக்கும் காட்சிகளுக்கு 'கட்' கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த படத்துக்கு குடும்பத்தோடு ஒன்றாக பார்க்கும் வகையிலும், தடையில்லாமல் எந்த வயதினரும் பார்க்கும் வகையிலாக இருந்தால், 'யு' சான்றிதழ் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பார்க்கலாம் என்றால் 'ஏ', அதாவது 'அடல்ட்ஸ் ஒன்லி' என்ற வயது வந்தவர்களுக்கான படம் என்ற சான்றிதழும், எல்லோரும் பார்க்கலாம் ஆனால் 12 வயதுக்கு குறைந்தவர்கள் அந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர் தீர்மானிக்கவேண்டும். அப்படி வந்தால் பெரியவர்களுடன்தான் சென்று பார்க்கலாம் என்ற வகையில், 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இப்போது இந்த யு/ஏ பிரிவுடன் மேலும் கூடுதலாக 3 பிரிவுகளை இணைக்க சினிமா சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 7 வயதானவர்களும் பார்க்கக்கூடிய படமாக இருந்தால் 'யூ ஏ 7 +', 13 வயதுள்ளவர்கள் பார்க்கக்கூடிய படமாக இருந்தால், 'யு ஏ 13 +', 16 வயதுள்ளவர்கள் பார்க்கக்கூடிய படமாக இருந்தால் 'யு ஏ 16+' என்ற சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கின்றன. வெறுமனே வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்றிதழ் கொடுக்காமல், 7, 13, 16 வயதுக்கு மேல் என்று தனித்தனியாக பிரித்து பார்த்து சான்றிதழ் வழங்கப்படும். இந்த சட்டத்திருத்தத்துக்காக விதிகள் வகுக்கப்படுகின்றன. அநேகமாக, 3, 4 மாதங்களில் அமலுக்கு வந்துவிடும்.