தலையங்கம்

செல்போன்கள் ஒட்டுக்கேட்பா?


செல்போன்கள் ஒட்டுக்கேட்பா?
1 Nov 2023 8:28 PM GMT

மக்கள் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒன்றிணைந்த சாதனமாக திகழ்வது செல்போன்கள்தான்.

மக்கள் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒன்றிணைந்த சாதனமாக திகழ்வது செல்போன்கள்தான். நேரில் பேச முடியாத தகவல்கள் செல்போன்கள் மூலமே பேசப்படுகின்றன. இதுபோல செல்போன்கள் வாயிலாகவே குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப், இ-மெயில் மூலம் தகவல்களும் அனுப்பப்படுகின்றன. 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. செல்போன்களில் பேசுவது, தகவல்கள் அனுப்புவது எல்லாம் ரகசியமாகவே இருக்கும், வேறு யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரத்தில், இப்போது வந்து இருக்கும் செய்திகள் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுகின்றனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

செல்போன் வைத்து இருப்பவர்களில், உயர்ந்த பல நவீன தொழில்நுட்பம் வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம், விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று "ஆப்பிள் ஐபோன்களை'' வாங்குகிறார்கள். இந்த ஐபோன்களில் எல்லா சேவைகளுமே தெளிவாக இருக்கும். ஆனால் இப்போது அமெரிக்க நிறுவனமான இந்த ஆப்பிள் ஐபோன் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களது ஐபோனை அரசு ஆதரவு பெற்ற தாக்குதல்காரர்கள் குறிவைக்கலாம். உங்கள் செல்போனில் சட்டவிரோதமாக நுழைந்து சில தகவல்களை பெற முயற்சிக்கலாம். உங்களது ரகசிய தகவல் பரிமாற்றங்கள், ஏன் கேமரா, மைக்ரோபோன்களைக்கூட அவர்களால் அணுக முடியும் என்று அந்த எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட பலரை குறிவைத்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைவிட்டது. இந்த எச்சரிக்கை செய்தி வந்தவுடன் கடும் கண்டனங்கள் கிளம்பின. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "நாங்கள் அனுப்பிய எச்சரிக்கை செய்திகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட அரசு ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்புகளையும் காரணமாக கூற முடியாது. அரசு ஆதரவு பெற்ற அமைப்பினர் அதிக நிதி உதவி பெறுபவர்களாகவும், அதிநவீன தொழில்நுட்பத்தை கையாள்பவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் முழுமையற்ற எச்சரிக்கை நுண்ணறிவு சிக்னல்களை மட்டுமே சார்ந்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. சில எச்சரிக்கை செய்திகள் தவறானவையாகக் கூட இருக்கலாம். எனவே எச்சரிக்கை செய்திகளை வெளியிடுவதற்கான காரணம் பற்றிய முழுமையான தகவலை எங்களால் வழங்க முடியாது'' என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த எச்சரிக்கை செய்தியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்த எச்சரிக்கை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும், இதற்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைப்பு தர வேண்டும், 150 நாடுகளில் உள்ள தனி நபர்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி வந்து இருக்கிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசாங்கம் விசாரணை நடத்தப் போகிறது என்பது வரவேற்புக்குரியது. ஆனால் தனிநபர் சுதந்திரம், அவர்களின் அந்தரங்க சுதந்திரம் என்பது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசாங்கத்தாலோ, வேறு எந்த அமைப்புகளாலோ எந்த ஒரு பங்கமும் வந்து விடக்கூடாது. அவர்களுடைய பேச்சுகளோ, தகவல் பரிமாற்றங்களோ யாராலும் ஒட்டுக்கேட்கப்படக்கூடாது. ஆப்பிள் ஐபோன் போன்ற செல்போன் கம்பெனிகளும் தங்கள் சாதனங்களில் இருந்து இவ்வாறு பேச்சோ, தகவலோ வேறு எந்த அமைப்புகளாலும் ஊடுருவி எடுத்துக்கொள்ள முடியாத அளவு தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்.