தலையங்கம்

ஏற்பட்ட சோதனையும், மேற்கொண்ட சாதனையும்!


ஏற்பட்ட சோதனையும், மேற்கொண்ட சாதனையும்!
30 Nov 2023 7:43 PM GMT

கடந்த மாதம் 12-ந்தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை பெருத்த உவகையுடன் கொண்டாடப்பட்டது.

கடந்த மாதம் 12-ந்தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை பெருத்த உவகையுடன் கொண்டாடப்பட்டது. எல்லோரும் தங்கள் வீடுகளில், ''உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி'' என்று மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், அதேநாளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த 41 தொழிலாளர்களும், 'உன்னைக்கண்டு நான் வாட, என்னைக்கண்டு நீ வாட, கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி' என்று கலங்கிக்கொண்டு நாம் உயிர்ப்பிழைப்போமா? என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களையும் இணைக்கும் வகையில் ''சார் தாம்'' என்று இந்தியில் கூறப்படும் நெடுஞ்சாலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கொள்ளப்பட்ட சுரங்கப்பாதை திட்டத்தில்தான் நிலச்சரிவு ஏற்பட்டது. உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரிக்கு 106 கி.மீ. சுற்றிச்செல்லவேண்டிய நிலையை, 26 கி.மீ. தூரத்தில் செல்வதற்கான மாற்று ஏற்பாடாக, சில்க்யாரா-தண்டல்கான் இடையே மலையைக் குடைந்து 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 2 கி.மீ. தூரம் வரையில் பணி முடிந்தநிலையில், தீபாவளி தினத்தன்று அதிகாலை 5 மணிக்கு நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட மண்சரிவால் சுரங்கம் மூடப்பட்டுவிட்டது. 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கித்தவித்தனர். அவர்களை எப்படியும் உயிருடன் மீட்க அரசின் அத்தனை துறைகளும் களத்தில் இறங்கியது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ், இந்த மீட்பு பணிக்காக அந்த இடத்துக்கு விரைந்து வந்தார். அவரோடு நாட்டிலுள்ள 19 முன்னணி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களும், விஞ்ஞானிகளும் களத்தில் இறங்கினர். குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு, மருந்து, கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டன. போன் வசதி அளிக்கப்பட்டு குடும்பத்தினரோடு பேச வசதி செய்யப்பட்டது. ஆனாலும் நாட்கள் கடந்தன. அமெரிக்க தயாரிப்பான ``ஆகர்'' எந்திரம் மூலம் துளையிடும்போது பிளேடு உடைந்தது. ஒருபுறம் அந்த பிளேடை அகற்றும் பணி நடந்தபோது, மாற்று வழிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த 41 பேரையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே, நாட்டினர் அனைவரும் எண்ணி அவர்கள் உயிருடன் மீட்கப்பட பிரார்த்தனை செய்தனர். அதன்பின்னர், தடைசெய்யப்பட்டுள்ள ``எலி வளை'' சுரங்கம் தோண்டும் பணியை பயன்படுத்த 24 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் அயராத முயற்சியால் 17 நாட்கள் வெளிஉலகையே காணாமல் இருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். உயிர் தப்பி வெளியே வந்த நாள்தான் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி. இந்தியாவே அவர்கள் மீட்கப்பட்டது கண்டு பெருமகிழ்வு கொள்கிறது.

இமயமலையில் அடிக்கடி இவ்வாறு நிலச்சரிவு ஏற்படுகிறது. இமயமலை உலகின் இளமையான மலை. நிலைத்தன்மையற்றது. அங்கு தொடர்ந்து நடக்கும் பணிகளால் அடிக்கடி நிலநடுக்கம், நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி, இமயமலையில் நிலஅமைப்பின் தாங்கும் திறன் குறித்து முழுமையான, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசாங்கம் அமைத்து, அந்த குழுவும் ஏற்கனவே ஆய்வுகளை தொடங்கியுள்ளது. அந்த குழுவின் ஆய்வு முடிவு அறிக்கையைப்பெற்ற பிறகும், இப்போது வந்துள்ள சர்வதேச நிபுணர்களைப்போல இந்த பணிகளில் திறன்பெற்ற நிபுணர்களின் பரிந்துரையைப்பெற்ற பிறகுமே, எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை தொடங்கவேண்டும். இயற்கையை ரொம்பவும் அவதிக்குள்ளாக்கக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.