100 நாட்களில் 24 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணம்
முதல்கட்ட பயணமாக 100 நாட்களில் 24 நாடுகளை பார்வையிட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் யோகேஷ் அலேகாரி.;
உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிகமாகவே இருக்கிறது. குழுவாக பயணம் செய்வதை விட தனிமை பயணம் செய்வதற்கு விரும்புகிறார்கள். பஸ், ரெயில், விமான போக்குவரத்தை சார்ந்திருக்காமல் மோட்டார் சைக்கிளையே உற்ற தோழனாக பாவித்து சவாரியை தொடங்கி விடுகிறார்கள்.
அப்படி மோட்டார் சைக்கிள் சாகச பிரியராக வலம் வருபவர்களுள் ஒருவர் யோகேஷ் அலேகாரி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் கடந்த 7 வருடங்களாக மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை வலம் வந்து கொண்டிருந்தவர் நேபாளம், பூட்டான், மியான்மர், வியட்நாம், கம்போடியா என அண்டை நாடுகளுக்கும் மோட்டார் சைக்கிளிலேயே சென்று திரும்பி இருக்கிறார்.
உலக நாடுகளை ஒவ்வொன்றாக சுற்றிப்பார்த்துக்கொண்டிருந் தவருக்கு உலகம் முழுவதையும் மோட்டார் சைக்கிளிலேயே வலம் வந்துவிட வேண்டும் என்ற ஆசை பிறந்திருக்கிறது. முதல்கட்ட பயணமாக 100 நாட்களில் 24 நாடுகளை பார்வையிட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநில தினமான அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி மும்பையின் இந்தியா கேட் பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு நேபாளம் சென்றடைகிறார். பின்பு விமானத்தில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு சவுதி அரேபியா செல்கிறார். அதன் பிறகு மோட்டார் சைக்கிளிலேயே ஈரான், துருக்கி, கிரீஸ், இத்தாலி, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஜெர்மனி, லக்சம்பர்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் வழியாக பயணம் செய்து இறுதியில் லண்டனை சென்றடைய திட்டமிட்டுள்ளார்.
''மோட்டார் சைக்கிளிலேயே பல நாடுகளுக்கு சென்று வந்த பிறகு உலக சுற்றுப்பயணம் செல்வது எனது கனவாக இருந்தது. எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம், மோட்டார் சைக்கிளிலேயே செல்வதற்கு சாத்தியமான சூழல் இருக்கிறதா? அதற்கு அங்கு நிலவும் சீதோஷண நிலைமை ஒத்துக்கொள்ளுமா? போன்ற விஷயங்களை இறுதி செய்துவிட்டு லண்டன் வரை செல்வதற்கு தீர்மானித்தேன். இந்த பயணத்தின்போது 24 நாடுகள் வழியாக செல்ல இருக்கிறேன்.
அப்போது 3 கண்டங்களையும் கடந்து செல்வேன். சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எனது மோட்டார் சைக்கிள் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த பயணத்திற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பல்வேறு நாடுகளுக்குள் செல்வதற்கு விசா தேவை. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். மோட்டார் சைக்கிளை சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. எப்படியாவது 100 நாட்களுக்குள் பயணத்தை முடித்துவிட முடிவு செய்திருக்கிறேன்'' என்பவர் உலக நாடுகளுக்கு பயணம் செல்ல ஆசைப்படுபவர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
''வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும்போது மாறுபட்ட வானிலை, சுற்றுச்சூழலை சமாளிக்க வேண்டி இருக்கும். அதற்கு உடலை பழக்கப்படுத்துவதற்கு உடற்பயிற்சி செய்தாக வேண்டும். உள்ளூர் உணவுகளை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சினை ஏற்பட்டு பயணம் அசவுகரியமாகிவிடும். திட்டமிட்டபடி பயணத்தை தொடருவதில் சிக்கல் நேரும். உணவை விட பழங்களையும், தண்ணீரையும் உட்கொள்வதுதான் முக்கியமானது. அவை மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப உடலை செயல்பட வைத்துவிடும்'' என்கிறார்.
யோகேஷ் லண்டனில் பயணத்தை நிறைவு செய்ததும் மொராக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு தனது பயணத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார். பின்பு ஸ்பெயினில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் திரும்ப இருக்கிறார்.