பாரீஸ் ஒலிம்பிக்கில் சேலையில் மிளிரப்போகும் இந்திய வீராங்கனைகள்!

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2024-07-09 00:33 GMT

சென்னை,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். நீண்ட நெடிய வரலாறும், கலாசார பின்னணியும் கொண்ட ஒலிம்பிக் 1896-ம் ஆண்டில் முதல்முறையாக கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்தது. அன்று முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலகின் அத்தனை நாடுகளும் சங்கமித்து விளையாடுவதால், ஒலிம்பிக் போட்டிக்கு தனி மவுசு உண்டு. போட்டியில் வெற்றி வாகைசூடி பெறும் பதக்கம் நாட்டின் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக்கில் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு நிகழ்வு கண்கவர் தொடக்க விழா. அந்தவகையில், பிரான்ஸ் நாடு ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மைதானத்திற்கு வெளியே சென் நதியில் தண்ணீர் மீது படகுகளை பாய்ந்து வரச்செய்து தொடக்க விழாவை வித்தியாசமாக நடத்துகிறது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புக்கும் படகுகளே பயன்படுத்தப்பட இருக்கிறது.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக இடம்பெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், தங்கள் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் உடைகளை அணிந்துகொண்டு கம்பீரமாக வலம்வருவார்கள். ஒலிம்பிக் தொடக்க விழாக்களில் எப்போதும் இந்திய வீரர், வீராங்கனைகள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து வருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2021-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் குர்தாவுடன் மேலாடையாக பிளேசர்ஸ் அணிந்து இருந்தனர். ஆனால், நடைபெறப்போகும் பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் நமது மங்கைகள் பாரம்பரிய உடையான சேலைக்கு மீண்டும் மாற இருக்கிறார்கள். 2016-ல் பிரேசில் நாட்டில் நடந்ததற்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் அணிவகுப்பில் புடவையில் ஜொலிக்கப்போகிறார்கள்.

இந்திய வீரர்கள் குர்தா, பைஜாமாக்கள் அணிய உள்ளனர். பருத்தியால் நெய்யப்பட்ட இந்த 2 உடைகளும் சந்தன நிறத்தை கொண்டது. இந்த நிறம் கோடை கால வெப்பத்தையும், மின் விளக்கு வெளிச்சத்தின் வெப்ப கதிர்வீச்சையும் உள்வாங்கிக் கொண்டு சவுகரியத்தை உணரச் செய்யும். 2 உடைகளின் ஓரங்களும் இந்திய நாட்டின் தேசியக்கொடியின் மூவர்ண நிறத்தை கொண்டது. வீரர்கள் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், அசோக சக்கரத்தை குறிப்பிடும் வகையில் நீல நிறத்தில் இருக்கும். இந்திய ஒலிம்பிக் சின்னத்தின் முத்திரையும் உடைகளில் இடம் பெற்றிருக்கும். இது தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல், கலாசார பாரம்பரியத்தையும் பறைசாற்றும். வழக்கமாக அணியும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இலச்சினை கொண்ட நீலநிற பிளேசரை இந்த முறை வீராங்கனைகள் அணிய மாட்டார்கள். இதற்கு பதிலாக வீராங்கனைகள் அணியும் ஜாக்கெட்டில் அந்த இலச்சினை இருக்கும்.

தொடக்க விழாவில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக்கொடியை முன்னால் ஏந்திச் செல்ல, வீராங்கனைகள் சேலை அணிந்து மிடுக்காக நடைபோடுவதை காண்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடந்ததில்லை. 2036-ம் ஆண்டு நடத்தும் வாய்ப்புக்காக இப்போதே ஆயத்தப் பணிகள் தொடங்கியிருப்பது, இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்