உலகின் தனிமை வீடு

Update: 2023-04-11 17:38 GMT

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின்சார பயன்பாடு முற்றிலும் இல்லாமல் தனிமையில் ஒரு வீடு இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதுவும் தொலைதூர தீவு ஒன்றில் நான்கு பக்கமும் கடல் சூழ்ந்த பகுதிக்கு மத்தியில் அந்த வீடு அமைந்திருக்கிறது. அப்படியென்றால் கடலுக்கு நடுவில் மணல் மேட்டின் மீது அந்த வீடு இருப்பதாக கருதிவிடாதீர்கள்.

கடலுக்கு நடுவே பிரமாண்டமாக இருக்கும் மலை முகடுக்கு நடுவே பசுமை படர்ந்த சூழலில் அழகுற வீற்றிருக்கிறது. தீவு தேசமான ஐஸ்லாந்தையொட்டி அமைந்திருக்கும் எல்லியாயே தீவில் இந்த தனிமை வீடு அமைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு கெடுதலும் ஏற்படாத வகையில் இயற்கையின் சாயலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அழகுற இந்த வீடு காட்சி அளிக்கிறது. இந்த வீட்டை பற்றி அவ்வபோது கட்டுக்கதைகள் பரவிய வண்ணம் உள்ளன. 2020-ம் ஆண்டில், இந்த வீடு கோடீஸ்வரர் ஒருவரால் கட்டப்பட்டதாக வதந்தி பரவியது. அவர் அணு ஆயுத யுத்தம் ஏற்பட்டால் இங்கு சென்று குடியேறிவிடலாம் என்ற எண்ணத்தில் கட்டியதாக கூறினார்கள்.

ஆனால் கொரோனா காலகட்டத்தில்தான் இந்த வீடு மிகவும் பிரபலமாகிவிட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தனிமையில் வசிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த வீட்டில் குடியேறினால் எந்த பிரச்சினையும் இல்லை, தனிமை சூழலில் கொரோனா பயமின்றி நிம்மதியாக வாழலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். சிந்தனையாளர்கள் மற்றும் தனிமையில் வாழ விரும்புபவர்களுக்கு இந்த வீடு புகலிடமாக விளங்கும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த வீடு மட்டுமல்ல அது அமைந்திருக்கும் தீவும் தனிமையில்தான் இருக்கிறது. அதன் அருகில் சில தீவுக்கூட்டங்கள் உள்ளன. தனிமை தீவில் தனிமை வீடு என்பதால் இந்த வீட்டை பற்றி சுவாரசியமான தகவல்கள் அடிக்கடி வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட மத சிந்தனையாளர் ஒருவர் இந்த தீவில் வசித்ததாக மற்றொரு வதந்தி பரவியது. இந்த தனிமை வீட்டுக்கும் ஐஸ்லாந்து பாடகர்-பாடலாசிரியர் பிஜோர்க்குக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு வதந்தி பரவியது. அவர் அந்த வீட்டை வாங்கி விட்டதாகவும், அதில் வசிப்பதாகவும் தகவல் பரவியது. இதில் எதுவும் உண்மையில்லை.

அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த வீடு, எல்லியாயே வேட்டையாடுதல் அசோசியேஷன் மூலம் 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது வீடு என்று அழைக்கப்பட்டாலும் லாட்ஜ் என்ற பெயரையே தாங்கி நிற்கிறது.

110 ஏக்கர் (சுமார் 44.51 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ள இந்த தீவு, மக்கள் வசிப்பிடமாக இல்லாவிட்டாலும் அழிந்து வரும் பறவை இனங்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. இங்கு பபின் என்ற பறவைகள் அதிகம் வாழ்கின்றன. வேறு சில பறவை இனங்களும் உலவுகின்றன.

மனித தொந்தரவு இல்லாததால் அவை இந்த தீவு வீட்டை சுற்றி சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்