லண்டனில் பெண்கள் நடத்தும் புடவை அணிவகுப்பு

உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்கள் பலரும் புடவை அணியும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பண்டிகை, திருவிழா காலங்களில் தவறாமல் புடவை அணிந்து இந்திய கலாசாரத்தை வெளிநாட்டு மண்ணில் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள்.

Update: 2023-07-30 04:10 GMT

புடவையை மையப்படுத்திய நிகழ்வுகளையும் அரங்கேற்றுகிறார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் பெண்கள் ஒன்று கூடி லண்டனில் புடவை அணிந்து விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த உள்ளனர். தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி 'புடவை வாக்கத்தான்' என்ற பெயரில் நடக்கும் இந்த அணிவகுப்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கிறார்கள். இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பெரும்பாலான பெண்கள் புடவை அணிந்து வந்திருந்தனர்.

இதுகுறித்து பிரிட்டிஷ் புடவை பெண்கள் குழுவின் தலைவரான திப்தி ஜெயின் கூறுகையில், ''இந்த ஆண்டு லண்டனின் முக்கிய இடங்களான டிராபல்கர் சதுக்கம், பார்லிமெண்ட் சதுக்கம் போன்ற இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி புடவை வாக்கத்தான் என்ற நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

லண்டன் தெருக்களில் புடவை அணிந்து தலை நிமிர்ந்து நடக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இதற்காக 500-க்கும் மேற்பட்ட பெண்களை கொண்ட குழுவை ஒன்றிணைக்க அதிக நேரம் ஆகவில்லை. பெண்கள் பலரும் தாமாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அணியும் புடவை ரகங்களை பன்முகத்தன்மையுடன் காட்சிப்படுத்த தயாராக உள்ளனர்'' என்கிறார்.

1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி கொல்கத்தாவின் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய சுதேசி இயக்கத்தை நினைவு கூரும்விதமாக தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் அங்கமாக லண்டனில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் மற்றொரு குழுவின் செய்தி தொடர்பாளர் ரஷ்மி மிஸ்ரா கூறுகையில், ''நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். அந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக 'புடவை வாக்கத்தான்' இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் அதிகம் அறியப்படாத திறமையான கைவினைஞர்களுக்கு நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளோம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துணைக்கண்டத்தில் இருந்து கைவினை நெசவுகளை காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் பிராந்திய, கலாசார மற்றும் மொழிப் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பெண்களை ஒன்றிணைக்கும் விதமாக இந்த 'புடவை வாக்கத்தான்' அமையும்.

அதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த பெண்களும் தங்கள் பிராந்தியத்துடன் தொடர்புடைய புடவை அணிந்து பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்துவார்கள். சுதேசி இயக்கத்தின் பிறப்பிடமான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண்கள் டாகாய் ஜம்தானி, புலியா, சாந்திபுரி டான்ட், பலுச்சாரி, ஸ்வர்ணசூரி, பிஷ்ணுபுரி, காந்தா உள்பட பல்வேறு நெசவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்'' என்கிறார்.

கர்நாடகாவை சேர்ந்த கன்யா, ''இல்கல், மோல்கால்முரு, மைசூரு சில்க் போன்ற பலதரப்பட்ட நெசவுகளின் தாயகமாக கர்நாடகம் விளங்குகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த 40 பெண்களை ஒருங்கிணைத்து மைசூரு பட்டுப்புடவை உள்பட மாநிலத்தின் வெவ்வேறு நெசவு புடவைகளை காட்சிப்படுத்துவோம்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்