மீண்டும் தன்னை நிரூபிப்பாரா பூரி ஜெகன்னாத்

சினிமா உலகில் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சில இயக்குனர்களின் படங்களில், எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி ஒரு சினிமா இயக்குனர்தான், பூரி ஜெகன்னாத்.;

Update:2023-05-28 18:05 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருந்து வரும் இவர், தனது வெற்றிப் பயணத்தில் 25 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் தெலுங்கில் உருவான பல படங்கள், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, சக்கைபோடு போட்டுள்ளன.

2000-ம் ஆண்டில் பவன் கல்யாணை தன்னுடைய முதல் கதாநாயகனாக வைத்து, 'பத்ரி' என்ற படத்தை இயக்கினார். கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமைந்தது. அந்தப் படம் பவன் கல்யாணை, தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணிக்கு கொண்டுபோய் நிறுத்தியது.

தெலுங்கில் தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் ரவிதேஜா. இவர் சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இப்படியே இருந்தவருக்கு 1999-ம் ஆண்டு 'நீ கோசம்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் நன்றாக இருந்த போதிலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு வெளியான 'இட்லு ஷ்ரவாணி சுப்ரமணியம்' என்ற படத்தில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். காதல் கதையாக உருவான இந்தப் படம், 'இப்படியும் கதாநாயகன் இருக்கிறார்' என்ற ரீதியில் ரவிதேஜாவை, தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.

தொடர்ச்சியாக 'இடியட்' என்ற படத்திலும் ரவிதேஜாவை கதாநாயகனாக நடிக்கவைத்தார் பூரி ஜெகன்னாத். இந்தப் படம் காதல் மற்றும் அதிரடிப் படமாக அமைந்தது. இங்கிருந்து தொடங்கிய நடிகர் ரவிதேஜாவின் வெற்றிப்பயணம் கடந்த 23 ஆண்டுகளாக பல வெற்றிப் படிக்கட்டுகளை ஏறச் செய்து, அவரை தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது. அவரது ரசிகர்களின் மனதில் 'மாஸ் மகாராஜ்' என்ற பட்டத்துடன் திகழச் செய்திருக்கிறது. 'இடியட்' படம் தமிழில் 'தம்' என்ற பெயரில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

2003-ம் ஆண்டு ரவிதேஜாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கினார் பூரி ஜெகன்னாத். 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம், அதிரி புதிரி வெற்றியை கொடுத்தது. இந்தப் படம், ஜெயம் ரவி நடிப்பில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் ஆகும்.

தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களைக் கொடுத்த காரணத்தால், அந்த காலத்திலேயே முன்னணி நடிகராக இருந்த நாகர்ஜூனாவை இயக்கும் வாய்ப்பு, பூரி ஜெகன்னாத்துக்கு கிடைத்தது. அவரை வைத்து 'சிவமணி' என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. இதற்கிடையில் தன்னுடைய முந்தைய படமான 'பத்ரி'யை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். 'ஷார்ட்: த சேலன்ஞ்' என்று பெயரில் எடுக்கப்பட்ட அந்தப் படமும் பாலிவுட் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில் நாகர்ஜூனாவை மீண்டும் இயக்கும் வாய்ப்பு, பூரி ஜெகன்னாத்துக்கு வந்தது. இந்த முறை அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். நாகர்ஜூனா நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளிவந்த 'சூப்பர்' என்று பெயரிடப்பட்ட அந்தப் படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஒரு சில தோல்வி படங்களைக் கொடுத்தால் அந்த இயக்குனர் மீது விழும், அதே விமர்சனம்தான் பூரி ஜெகன்னாத் மீதும் விழுந்தது. 'பூரி ஜெகன்னாத்திடம் இருந்த சரக்கு அவ்வளவுதான். இனி மேல் அவரது படங்கள் ஓடாது' என்பது போல் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களிடமும் பேச்சுக்கள் பரவலாக எழுந்தது.

ஆனால் சினிமாவிற்குள் நுழைந்த காலத்தில் இருந்தே பூரி ஜெகன்னாத்திடம் ஒரு பழக்கம் உண்டு. அவர் இயக்கும் படங்களில் ஒன்றிரண்டு தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து விட்டால், துவண்டு விடாமல் மீண்டும் ஒரு படத்தை இயக்குவார். அந்த வெற்றி யாரும் எதிர்பார்க்காத வகையில் பல தரப்பட்ட ரசிகர்களும், சினிமா உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையிலான வெற்றியாக இருக்கும்.

அப்படி பல தோல்விகளுக்குப் பிறகு, அவர் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம்தான் 'போக்கிரி'. இந்தப் படத்தில் நடித்திருந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, 'நிஜம்', 'நானி', 'அர்ஜூன்' என்று தொடர்ச்சியாக மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்திருந்த தருணம் அது. மகேஷ்பாபு, பூரி ஜெகன்னாத் இருவருக்குமே ஒரு வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் வெளியான 'போக்கிரி' படம், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

தீப்பிடிக்கும் வேகத்தில் அமைந்திருந்த இப்படத்தின் திரைக்கதையும், அலட்டிக்கொள்ளாத மகேஷ்பாபுவின் நடிப்பும் படத்தின் வெற்றியை உறுதி செய்தது. இந்தப் படத்தை 'போக்கிரி' என்ற அதே பெயரிலேயே தமிழில் ரீமேக் செய்திருந்தனர். விஜய் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த அளவுக்கு விஜய்யின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரின் வெற்றிப் பாதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். இவரது இயக்கத்தில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அல்லு அர்ஜூன் (தேசமுதுரு), (இதர்அம்மாயிலதோ), பிரபாஸ் (புச்சிகாடு), கோபிசந்த் (கோலிமார்), நிதின் (ஹார்ட் அட்டாக்), ஜூனியர் என்.டி.ஆர். (டெம்பர்) என்று பலரும் நடித்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன்... இசைக்காக ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரணை, 'சிறுத்தா' என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் செய்தவரே, பூரி ஜெகன்னாத் தான்.

56 வயதான நிலையிலும் தெலுங்கின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான 'லைகர்' படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. விஜய்தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா மூவியாக வெளியான இந்தப் படம், அதன் தயாரிப்பு செலவில் 25 சதவீதத் தொகையைக் கூட வசூலிக்கவில்லை. 100 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வெறும் ரூ.20 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. அப்படியொரு தோல்வியை பூரி ஜெகன்னாத்தின் எந்தப் படமும் பெற்றதில்லை.

'லைகர்' படத்தின் தோல்வி, பூரி ஜெகன்னாத்தின் மீது மீண்டும் மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியது. 'அவருக்கு வயதாகி விட்டது. இப்போதைய டிரெட்ண்டுக்குத் தகுந்தாற்போல் படம் இயக்குவதில் அவர் சறுக்கலை சந்தித்துள்ளார். இனி அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதே நல்லது' என்பது போன்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்றாற்போல் கிட்டத்தட்ட சுமார் 10 மாதங்களாக அமைதி காத்து வந்த பூரி ஜெகன்னாத், கடந்த சில நாட்களுக்கு முன், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவரான ராம் பொத்தனேனி நடிப்பில் வெளியான படம் 'ஐஸ்மார்ட் சங்கர்'. பூரி ஜெகன்னாத் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாகத்தான் பூரி ஜெகன்னாத் அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'டபுள் ஐஸ்மார்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'லைகர்' தோல்வியில் இருந்து பூரி ஜெகன்நாத்தும், 'வாரியார்' திரைப்பட தோல்வியில் இருந்து மீள ராம் பொத்தனேனிக்கும் ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றியை 'டபுள் ஐஸ்மார்ட்' கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்