தாய்மொழியில் ஏன் மருத்துவக்கல்வியைக் கற்க வேண்டும்?
மருத்துவக்கல்வியை ஏன் தாய்மொழியில் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கல்வியியல் கழகத்தின் மொழியாக்க குழு ஒருங்கிணைப்பாளர் ச.குமரவேல் விளக்கம் அளிக்கிறார்.
தாய்மொழியில் கல்வி பயிலுவதன் மூலமே மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை கூடுதலாக மெருகேற்றிக்கொள்ள முடியும் என்ற கருத்தை கல்வியலாளர்கள் முன் வைக்கிறார்கள். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உலகெங்கும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில் மருத்துவக்கல்வியை ஏன் தாய்மொழியில் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி (பேராசிரியர் - தலைவர், எலும்பியல் துறை) மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் மொழியாக்க குழு ஒருங்கிணைப்பாளர் ச.குமரவேல் விளக்கம் அளிக்கிறார்.
தாய்மொழியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
இதுவரை வரலாற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதும், அவற்றை வெளியிடுவதும் தாய் மொழியிேலயே நிகழ்ந்துள்ளன. ஐன்ஸ்டீன் ஒருபோதும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதியதோ அல்லது பேசியதோ இல்லை. அவரது கட்டுரைகள் ஜெர்மன் மொழியில்தான் எழுதப்பட்டன. மேரி கியூரியின் படைப்புகள் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டன. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) போன்ற அனைத்து ஜப்பானிய ஆய்வுகளும் அவர்தம் தாய் மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அறிவு மரத்தை (Knowledge Tree) வளர்க்க- மாணவர் தான் கற்று அறிந்த முந்தைய அறிவின் அடிப்படை சரியானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவர் தற்போது கற்பதை, முன்னர் கற்றதோடு பொருத்தி வேகமாகவும், சரியாகவும் மதிப்பிட முடியும். பொருள் புரிந்து கற்போருக்கு ஆரம்பத்தில் சிக்கல்கள் இருந்தாலும் இறுதியில் அவர்கள் சிறந்த வளர்ச்சி அடைவர்.
மருத்துவக் கல்வியில் கற்றல் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களே பெரும்பாலும் மருத்துவ(எம்.பி.பி.எஸ்) படிப்பில் சேர்கிறார்கள். அவர்களில் கணிசமான மாணவர்கள் அப்படிப்பின் ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் படித்து முடிப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் சிக்கல் எங்கே உள்ளது? பாடத்திட்டம் கடினமானது என்று சிலரும், தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் மாணவர்களிடையே வேறுபாடுகள் உள்ளன என்று சிலரும் கூறுகின்றனர். அதற்கு சாத்தியமான தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.
தாய்மொழியில் மருத்துவக் கல்வி ஏன் தேவை?
ப்ளூம் (Bloom) என்னும் உளவியலாளர், கற்றலை, பல நிலைகள் கொண்ட ஒரு பிரமிடைப் போல் உருவகப்படுத்தி இருக்கிறார். அடிப்பகுதியில் இருக்கும் கற்றல் நிலை, மனப்பாடம் செய்து நினைவில் கொள்வதாகும். அதற்கு அடுத்த நிலை, அந்த ஓசையை சொல்லாக புரிந்து கொள்வதாகும். அச்சொல்லைப் பயன்படுத்துவதும், பின்பு பயன்படுத்தியதைப் பகுப்பாய்வதும், அதை மேலும் மதிப்பிடுவதும் அடுத்தடுத்த நிலைகளாகும். பிரமிட்டின் உச்சி பகுதியில் இருக்கும் நிலை, புதியனவற்றை உருவாக்குவதாகும்.
தற்கால மருத்துவக்கல்வி முறை ஆங்கில மொழியில் உள்ளது. அதைப் பயிலும் மாணவர்களிடம் எலும்புகள் மற்றும் உடற்பாகங்களைக் குறிக்கும் (கிரேக்க, லத்தீன்) சொற்களின் பொருள் (எடுத்துக்காட்டு: பாப்லிட்டியஸ் - popliteus) என்னவென்று கேட்டால், அது அந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒரு எலும்பு அல்லது தசை என கூறுவார்களே தவிர, அவற்றின் பெயர் காரணம் கூறத்தெரியாது. அதாவது தற்கால மருத்துவ மாணவர்கள் மேற்சொன்ன பெயர்களின் பொருள் புரியாமலேயே அதன் "ஓசை"யை படித்து அவற்றை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் - மாணவர்களது அறிவோ, கற்றல் திறனோ வளர வாய்ப்பு இல்லை.
பெரும்பான்மையான மருத்துவக் கலைச்சொற்கள் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் இருப்பதால் - ஆங்கில வழியில் (English medium) படித்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் கூட மேற்சொன்ன கலைச்சொற்களின் பொருள் புரியாமல்தான் படிக்கிறார்கள். அவர்களில் சிலர், அவ்வாறு படிக்கும் பொழுது, கற்றல் துணையாக ஆங்கிலத்தில் உள்ள மருத்துவ சொல் அகராதிகளை பயன்படுத்தி அச்சொற்களைப் புரிந்து கொண்டும் படிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இவ்வாறு படிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
எந்த ஒரு உடற்பகுதியைப் பற்றியும் அல்லது அதன் நோயைப் பற்றியும் பாடம் எடுக்கும் போது, வகுப்பு முடிந்த பின் அப்பாடத்தை புரிந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஆசிரியர்கள் மாணவர்களின் தாய்மொழியில் (தமிழில்) எளிமைப்படுத்தி விளக்குவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இவ்வகைக் கற்பித்தல் வெளிப்படையாக முறைப்படுத்தப்படவில்லை.
நெட்டுருப்போட்டு மனப்பாடம் செய்யும் முறையை (Rote Memory) தவிர்க்க முடியாத நிலை இருக்கிறது. இது பொருள் புரியாமல் மனப்பாடம் செய்து படிக்கும் முறையாகும். குறிப்பாக சிக்கலை தீர்க்கும் முறையிலான கற்றலில் (Problem Based Learning), பாடம் புரியாமல் விடை அளிப்பது சாத்தியமே இல்லை. முன்பு கூறியது போலவே வெகு சில மாணவர்களே பொருளறிந்து கற்க முற்படுகின்றனர். கல்வித் திட்டங்களின் நேரக்கட்டுப்பாடும், விரிவான கற்றலுக்கு தடையாக இருக்கிறது.
தமிழில் மருத்துவக் கல்வி குறித்த பொதுக் கண்ணோட்டம் என்ன?
தாய்மொழியில் மருத்துவ கல்வி கற்பதை எதிர்ப் பவர்கள், அதற்கான காரணங்களாக இரண்டு விஷயங்களை கூறுகிறார்கள். ஒன்று: தாய்மொழியில் கற்ற விஷயங்களை அந்த மாணவர் உலகெங்கும் இருக்கும் மற்ற மொழி பேசுபவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வார்? அவர்களுடன் தொடர்பு கொள்வதில் தடை இருக்குமல்லவா?
மேலும் பல்கலைக் கழகத் தேர்வுகளை நன்றாக எழுத முடியுமா? இரண்டு: அன்றாடம் மாறிக் கொண்டு இருக்கும் நவீன உலகில் அந்த மாணவர் எவ்வாறு தனது தொழில் அறிவை புதுப்பித்து கொள்வார்? அது சாத்தியமாகுமா? என்பது போன்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள்.
இந்த கேள்விகளுக்கான பதில், தாய் மொழியில் படிப்பதால் ஏற்படும் அசாத்திய புரிதலை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதுதான். தாய் மொழி வழி மருத்துவக் கல்வியை எதிர்ப்பவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளாததால் இதுபோன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள். தாய் மொழியில் புரிந்து படிக்கும்போது எவருடனும் கற்ற விஷயங்களை பற்றி சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.
தற்போது தமிழ்நாடு அரசால் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தநூல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சொற்களின் - அருகருகே அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்த முறை தேர்வுகளிலும், கட்டுரை எழுதுவதிலும் மாணவர்களுக்கு உதவும்.
குறிப்பாக முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் மொழிபெயர்த்து வழங்கப்படும் உலகத்தரம் வாய்ந்த கிரேயின் உடற்கூறியல் பாடப்புத்தகத்தில், தமிழில் பாகங்கள் குறிக்கப்பட்டப் படங்களுடன் உரைகளை மாணவர் படித்துப் புரிந்து தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்வின் பின்னாளில் அவற்றைப் பயன்படுத்தவும் தயாராகிவிடுகிறார்.
தமிழ்நாடு அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன?
முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள சிறந்த நூல்கள், தொடர்புடைய பதிப்பகங்களோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகின்றன. இது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்து இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அத்துடன் தமிழ் படிக்கத் தெரிந்த அனைத்து மருத்துவ மாணவ-மாணவிகளுக்கும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
தாய்மொழி கற்றலுக்கு வேறு என்ன பரிந்துரைகள் செய்யலாம்?
1. பட்ட மற்றும் பட்டமேற்படிப்புக்கான மருத்துவப் பாட நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
2. மருத்துவத்தை கற்பிக்கும் மொழியாக தமிழே இருத்தல் வேண்டும்.
3. பல்கலைக்கழகத் தேர்வுக்கான கேள்விகளைத் தமிழில் வடிவமைத்தும் தேர்வுகளைத் தமிழிலேயே நடத்தல் வேண்டும்.
4. மருத்துவ மாநாடுகளில் பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான நிகழ்நேர விளக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
5. அனைத்து ஆய்விதழ்களின் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும்
6. பார்த்தல், கேட்டல், செயல்பாட்டு முறை போன்ற பல்வேறு வகையில் கற்பவர்களுக்கு தமிழ்வழி கற்பித்தல் கற்றல் முறைகளை திட்டமிட வேண்டும்.
இந்த விஷயங்களை நடைமுறைப்படுத்தினால் நன்கு ஆழமான கற்றல் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ விஞ்ஞானிகளையும் நாம் பெறலாம்.
தாய்மொழியில் பாடம் கற்றால் என்ன மாற்றம் ஏற்படும்?
தாய்மொழியில் பாடங்களை கற்கும் பொழுது, புரிந்து கொள்வது என்பது வாசித்த நொடியில் இருந்தே தொடங்கிவிடும். அதாவது அடுத்த சில கணங்களிலேயே நேரடியாக கற்றல் பிரமிடின் இரண்டாம் நிலைக்கு மாணவர் சென்றுவிடுகிறார். புரிந்து கொண்டவற்றை பயன்படுத்துவது எளிது அல்லவா? ஆகவே அவர் கற்றல் பிரமிடின் மூன்றாம் நிலைக்கும் விரைவாக சென்றுவிடுவார். பின் பயன்படுத்தியதைக் கொண்டு பகுத்தாய்ந்து புதிய விஷயங்களை உருவாக்குவது எளிது. அதாவது கற்றல் பிரமிடின் ஆக உயர்ந்த நிலைக்கு மாணவர் செல்வது எளிது. ஆகவே தான் தொழிற்கல்வி குறிப்பாக மருத்துவக்கல்வி தாய்மொழியில் இருத்தல் இன்றியமையாதது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.