கிரீன் டீ பருகும் போது...
கிரீன் டீ பருகுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். ஆனால் அதனை சரியான நேரத்தில் பருகுவது முக்கியமானது. இல்லாவிட்டால் நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவித்துவிடும். அதனால் கிரீன் டீ பருகும்போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து பார்ப்போம்.
காலையில் பருகாதீர்கள்:
வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகுவது தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள டானின்கள் வயிற்றில் எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். வாயு தொல்லை, அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே வெறும் வயிற்றில் கிரீன் டீ அருந்துவதை தவிர்த்துவிட வேண்டும். உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு கிரீன் டீ பருகுவது சரியானது.
அதிகம் பருகாதீர்கள்
கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். அதில் இருக்கும் காபின் அமைதியின்மை, இதயத்துடிப்பு அதிகரிப்பது மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்காக கிரீன் டீ உட்கொள்வதாக இருந்தால் குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ பருகுவது நல்லது.
தூங்கும்போது கூடாது
தூங்குவதற்கு முன்பு கிரீன் டீ பருகுவது தூக்கத்தையும் பாதிக்கும். அதில் உள்ள காபின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். நிம்மதியாக ஓய்வெடுக்க அனுமதிக்காது. தூக்கம் கண்களை தழுவாமல் விழிப்பு நிலையிலேயே வைத்திருக்க செய்துவிடும்.
இரவு கூடாது
இரவு உணவு உட்கொண்ட பிறகு கிரீன் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள டானின், உணவில் உள்ள சத்துக்களை ஜீரணிக்க உதவாது. குறிப்பாக உடலில் இருக்கும் துத்தநாகம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாது. இதே நிலை தொடர்ந்தால் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். அதனால் இரவு உணவு உட்கொண்டதும் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.