லெஹங்கா அணிவது ஒரு கலை!

‘லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.

Update: 2023-09-24 08:23 GMT

பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன. சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.

''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும். எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது. நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்தப் பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.

''பொதுவாகவே தென்னிந்தியப் பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு. மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான். அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம். சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப் புடவை கிடைத்துவிடும்.

ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும். அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்