வேலை நெருக்கடியை குறைக்கும் வழிமுறைகள்

Update:2023-08-06 12:13 IST

வேலையில் எதிர்கொள்ளும் சவால்களை சுமுகமாக கடந்து செல்வதற்கு உடலளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியான சூழலுக்குள் சிக்காமல் எளிதாக மீண்டுவர முடியும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றிவருவது பிரச்சினைகளில் இருந்து சட்டென்று மீண்டுவர உதவும். வாழ்க்கையையும் வசந்தமாக்கும்.

* தினமும் மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது சில நிமிடங்கள் நடப்பதாக இருக்கலாம். புத்தகம் படிப்பதாக இருக்கலாம், உங்களுக்கு பிடித்தமான விஷயம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தினமும் அந்த மூன்று விஷயங்களையும் தவறாமல் பின்பற்றி வர வேண்டும். ஓரிரு நாட்கள் வேறு மூன்று விஷயங்களை பின்பற்றலாம். பின்பு எல்லாவற்றையும் சுழற்சி முறையில் பின் தொடர்ந்து வரலாம். அப்படி தினமும் 3 விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விலக்கி வைக்க உதவும்.

* திட்டமிடுதலும் அவசியமானது. ஏதாவது ஒன்றை திட்டமிட்டு அதனை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்ட வேண்டும். அந்த திட்டம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அது இலக்கை விரைவாக எட்டுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும்.

* எந்த வேலை செய்தாலும் 25-5 நிமிடம் என்ற சுழற்சியை பின்பற்ற வேண்டும். அதாவது முதல் 25 நிமிடங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடம் அந்த வேலைக்கு இடைவெளி கொடுத்துவிட்டு வேறு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் சலிப்பை போக்கும். இடைவெளி எடுக்கும் சமயத்தில் மனதை ஆசுவாசப்படுத்தும் செயல்முறையில் ஈடுபடுவது சிறப்பானது.

* சின்ன சின்ன வேலைகளை பிறகு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். அவை சில நிமிடங்களில் முடிந்துவிடும் வேலையாக இருக்கும். அதனை தள்ளிப்போடுவது வேலை சுமையை அதிகப்படுத்திவிடும். தேவையற்ற நெருக்கடிகளையும் ஏற்படுத்திவிடும்.

* உடற்பயிற்சி செய்வதற்கும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிது தூரம் நடக்கலாம். இருந்த இடத்தில் இருந்தே கை, கால்களை நீட்டியபடி இலகுவான பயிற்சிகளை செய்யலாம். அதுவும் மனதை சாந்தப்படுத்தும்.

* வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் அறையாக இருந்தாலும் சரி தினமும் மூன்று நிமிடங்கள் அதனை சுத்தம் செய்வதற்கு ஒதுக்க வேண்டும். அப்படி சுத்தம் செய்வதும், பொருட்களை ஒழுங்குபடுத்து வதும் அந்த இடத்தில் அமர்ந்தபடி சிறப்பாக செயல்பட தூண்டும். மற்றவர்கள் மத்தியிலும் நற்பெயரை பெற்றுத்தரும்.

* எப்போதும் ஒரு நோட்பேடை கைவசம் வைத்திருந்திருங்கள். அன்று செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை முடித்துவிட்டோமா என்பதை 'டிக்' செய்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். புதிய யோசனைகள் மனதுக்குள் எழுந்தால் அதனை உடனே எழுதி வையுங்கள். அது பின்னாளில் ஏதாவதொரு வகையில் பயனுள்ளதாக அமையும்.

* எப்போதும் கடினமான பணியை முதலில் செய்யுங்கள். அந்த வேலையை முடித்துவிட்ட திருப்தி, நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வழிவகை செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்