ரூ.12 லட்சம் செலவில் பராமரிக்கப்படும் 'வி.வி.ஐ.பி. மரம்'

மரக்கன்று நடுவதை விட அதை பராமரித்து வளர்ப்பது சவாலான விஷயம்.

Update: 2023-07-30 04:18 GMT

குறிப்பிட்ட நேரத்திற்குள் தண்ணீர் ஊற்றி இலைகள் வாடாமலும், நோய் தாக்குதலுக்கு ஆளாகாமலும், கால்நடைகளால் பாதிப்பு நேராமலும் பாதுகாக்க வேண்டும். அதற்கு அதிக செலவு என்பது மனித உழைப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு மரத்தை பராமரிப்பதற்கு 12 லட்ச ரூபாய் செலவாகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அந்த மரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சலாமத்பூரில் வளர்கிறது. அந்த மரத்திற்கு அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா? புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்துடன் தொடர்புடையதாக இந்த மரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுதான் காரணம். புகழ்பெற்ற பவுத்த தலமான சாஞ்சியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, இந்த மரம்.

2012-ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே இந்த மரக்கன்றை நட்டார். இலங்கையில் இருந்துதான் இந்த மரக்கன்றும் கொண்டு வரப்பட்டது. புத்த மத ஆசிரியர் சந்திர ரதன் என்பவரின் கருத்துப்படி, இந்த மரம் புத்த கயாவில் புத்தர் ஞானம் பெற்றதை குறிப்பிடுகிறது.

அந்த மூல மரத்தின் ஒரு பகுதியை பேரரசர் அசோகரின் மகள் சங்கரமித்ரா இலங்கைக்கு எடுத்துச் சென்று அனுராதபுரத்தில் நட்டதாக கூறப்படுகிறது. அந்த மரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்று சலாமத் பூரில் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது.

புத்தருடன் தொடர்புடைய புனித மரமாக கருதப்படுவதால் இந்த மரத்தை பராமரிப்பதற்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. 24 மணி நேரமும் விசேஷ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக நான்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா 26 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

அதன்படி மாத ஊதியமாக இவர்களுக்கு மட்டுமே ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதர பராமரிப்பு செலவு என மரத்திற்கான மொத்த பாதுகாப்பு செலவாக ஆண்டுதோறும் 12 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குகிறது.

இந்த மரத்தின் ஒரு இலை கூட வாடி விடக்கூடாது என்பதில் நான்கு பாதுகாவர்களும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அரசு விடுமுறை, பண்டிகை காலங்கள் உள்பட அனைத்து காலகட்டங்களிலும் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் தொடருகிறது.

கால்நடைகள், மனிதர்கள் உள்பட அனைத்து தரப்பிலும் இருந்து மரத்தை யாரும் தொடாமல் பாதுகாக்க 15 அடி உயர இரும்பு வலையும் நிறுவப்பட்டுள்ளது. மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சாஞ்சி நகராட்சி மூலம் பிரத்யேக தண்ணீர் டேங்கர் நிறுவப்பட்டுள்ளது. அதனை கொண்டு மரத்தின் நுனி இலைகள் கூட பிரஷ்ஷாக இருக்குமாறு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்கள்.

வேளாண்மைத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதா? என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த செயல்முறைகள் அனைத்தும் மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.

இந்த மரம் பண்டைய வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதுடன் ஆன்மிகத்தின் அடையாளமாக திகழ்கிறது. விசேஷ பாதுகாப்பு அளிக்கப்படுவதால் 'வி.வி.ஐ.பி மரம்' என்ற அடைமொழியை தாங்கி நிற்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்