வாழ்க்கை துணையை மகிழ்விக்கும் விஷயங்கள்
பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.
'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும்.
தன் நலம் பேணாமல் குடும்பத்தினர் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் சுபாவம் கொண்டவர்கள் குடும்பத் தலைவிகள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது பரிசுகளோ, இனிப்பு பண்டங்களோ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது தங்கள் நலனில் குடும்பத்தினர் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைக்கும். மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அவர்களை தூண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. ஒப்பனை விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒப்பனை செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்கவலை அவர்களிடம் இருக்கும். அவர்கள் செய்யும் எளிய ஒப்பனையை பாராட்டினாலே குஷியாகிவிடுவார்கள். 'உன்னுடைய ஹேர் ஸ்டைல் வழக்கத்தைவிட ஸ்டைலாக இருக்கிறது, உன் முகமும் இன்னைக்கு பொலிவாக இருக்கிறது' என்று பாராட்டுவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.
* புது ஆடை உடுத்தும்போது கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் மேலோங்கும். அதனை புரிந்து கொண்டு 'இந்த ஆடை உனக்கு சூப்பராக இருக்கிறது, உன் வயதும் கொஞ்சம் குறைந்துவிட்டது போன்று தோன்றுகிறது' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
* திருமணமான பிறகு உடல் எடை சற்று அதிகரிப்பது இயல்பானதுதான். பெண்கள் பலர் அதனை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைக்கும் முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும். உடல் எடையை இன்னும் குறைப்பதற்கான பயிற்சிகளில் தீவிரமாக களமிறங்கிவிடுவார்கள். உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதையும் அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று மேற்கொள்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
* உண்மையான வயதை காட்டிலும் வயதை சற்று குறைத்து பேசுவதும் பெண்களை உற்சாகப்படுத்தும்.
* வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் பயணம் மேற்கொள்வதும் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். விடுமுறை காலங்களில் ஓரிரு நாள் வெளி இடங்களுக்கு சென்று வரும்படியான சுற்றுலா பயணங்களை திட்டமிடுங்கள். அவர்களின் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் சென்றிருந்த இடமாக அது இருந்தால் இன்னும் சந்தோஷமடைவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலமாகிவிடுவார்கள்.
* பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.