75 நாள் சவாலுக்காக அதிக தண்ணீர் பருகி அவதிப்பட்ட பெண்மணி

Update:2023-08-13 07:55 IST

தினமும் தண்ணீரை போதுமான அளவுக்குத்தான் பருக வேண்டும். அதிகம் பருகுவது ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு சாட்சியாகி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுவிட்டார், மிச்செல் பேர்பர்ன். கனடாவை சேர்ந்த இவர் டிக்டாக் பிரபலம்.

'75 ஹார்டு' என்ற சவாலில் பங்கேற்றவர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகி இருக்கிறார். அதன் தாக்கமாக உடலில் சோடியம் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சில உடல் உபாதைகளும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளவைத்துவிட்டது.

75 நாட்கள் நடைபெறும் இந்த சவாலில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். தலா 45 நிமிடங்களுக்கு இரண்டு உடற்பயிற்சியை முடிக்க வேண்டும். ஒரு கேலன் தண்ணீர் பருக வேண்டும். தினமும் ஒரு புத்தகத்தில் 10 பக்கங்களை படிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்த சவாலில் அடங்கி இருக்கின்றன.

இவற்றுள் ஒரு கேலன் தண்ணீர் என்பது 4 லிட்டர் தண்ணீர் அல்லது 16 கப் தண்ணீருக்கு சமம். ஒருவர் தினமும் 11-15 கப் தண்ணீர் பருகு வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் பருகி வர வேண்டும். ஆனால் மிச்செல் ஒருசில மணி நேரத்திற்குள்ளாகவே 4 லிட்டர் வரை தண்ணீர் பருகி இருக்கிறார். அப்படி ஒரே சமயத்தில் அதிக தண்ணீரை பருகியது நீரிழப்பு பிரச்சினைக்கு வழிவகுத்துவிட்டது. ரத்தத்தில் சோடியத்தின் செறிவு அசாதாரணமாக குறைந்து சோடியம் குறைபாட்டுக்கும் காரணமாகிவிட்டது.

''கூடுதலாக சில கப் தண்ணீர் பருகிவிட்டேன். அது கூட பரவாயில்லை. தண்ணீரை விரைவாக உட்கொண்டதுதான் பிரச்சினைக்கு காரணம். அளவுக்கு அதிகமாக பருகியதால் அந்த நீர் விஷமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்'' என்கிறார், மிச்செல்.

75 நாட்களுக்கான சவாலில் 12-வது நாளில் மிச்ெசலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடலில் சோடியம் குறைபாடு ஏற்படுவது ஹைபோநெட்ரீமியா என்று குறிப்பிடப்படுகிறது. உடலில் சோடியம் குறைந்து, தண்ணீர் அதிகமாக இருக்கும்போது செல்கள் வீங்கி பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குமட்டல், வாந்தி, தலைவலி, குழப்பம், ஆற்றல் இழப்பு, சோர்வு, எரிச்சல், அமைதியின்மை, தசை பலவீனம், வலிப்பு போன்றவை சோடியம் குறைபாடு ஏற்படுவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இவற்றுள் ஒருசில அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

75 ஹார்ட் எனப்படும் இந்த கடினமான சவாலை பெண் தொழில்முனைவோர் ஆன்டி பிரிசெல்லா பிரபலப்படுத்தி இருக்கிறார். 75 நாட்கள் இந்த சவாலை பின்பற்றுவது தன்னம்பிக்கை, சுய மரியாதை, விடாமுயற்சி, துணிச்சல் உள்பட பல்வேறு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவும் என்றும் சொல்கிறார்.

இந்த கடினமான சவாலை மேற்கொண்ட மிச்செல், அதிக தண்ணீர் பருகியதுதான் அவரது உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்