ஓய்வை வெறுக்கும் 74 வயது முதியவர் ஹசன் அலி

வயதான காலத்தில் கைக்குட்டைகளை விற்பது அவரது உடல் ரீதியான தேவைக்காக இருந்தபோதிலும், ஹசன் அலி சுறுசுறுப்பாகவும், நம் அனைவருக்கும் உத்வேகமாகவும் இருக்கிறார்’ என்று பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

Update: 2023-04-30 14:39 GMT

பணி ஓய்வு பெற்ற பிறகு வீட்டுக்குள்ளேயே பொழுதைக் கழிக்க விரும்பாமல் விரும்பிய வேலைகளை செய்து கொண்டு தங்களை 'பிசி'யாக வைத்துக்கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'ஓய்வு சோம்பேறியாக்கி விடும். நோய்களை வரவழைத்துவிடும்' என்பதுதான்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள போரிவலி ரெயில் நிலையத்தில் 17 ஆண்டுகளாக கைக்குட்டை விற்பனை செய்து வரும் 74 வயது முதியவர் ஹசன் அலி என்பவரே அதற்கு சாட்சி. ஓய்வை வெறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் பலரையும் சிந்திக்க வைக்கக்கூடியது.

''வாழ்வதற்கென்று சில விதிகள் உள்ளன. 'நீங்கள் இந்த வயது வரை படிக்க வேண்டும், அந்த வயது வரை வேலை செய்ய வேண்டும், இந்த வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும், அந்த வயதிற்குள் எல்லாவற்றையும் பெற்று அனுபவித்து விட வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். நான் பத்தாண்டுகளுக்கு முன்பே 'ஓய்வு' வயதை அடைந்தேன். ஒரு செருப்பு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தேன்.

விற்பது ஒரு கலை. விற்பனையாளரை நாடி வரும் நபர் என்ன விரும்புகிறார் என்பதை அவர் சொல்லாமலேயே விற்பனையாளர் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் விரும்புவதை சரியாக கொடுக்க வேண்டும். நான் பல ஆண்டுகளாக அதை செய்ய கற்றுக்கொண்டேன். ஒரு நபரை ஒருமுறை பார்த்தால் அவர் என்ன விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும்.

அதைத்தான் இன்றும் செய்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக இங்கு கைக்குட்டைகள் விற்பனை செய்து வருகிறேன். இங்கு வந்து செல்பவர்களை அவர்களின் சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். இப்போது அவர்களுக்கு குடும்பங்கள் உள்ளன.

என் குடும்பத்தைப் பொறுத்தவரை, எனக்கு அழகான மனைவி, ஒரு மகன், மருமகள் மற்றும் பேத்தி உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். என் மகன், 'அப்பா இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி வேலை செய்து கொண்டே இருப்பாய்?' என்று கேட்பான். நான் எப்போதும் அவனிடம், 'வீட்டுக்குள் இருந்து நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி விடாமல் சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன்' என்று சொல்வேன்.

தினமும் என் வீட்டில் இருந்து பேருந்தில் ஏறி கைக்குட்டைகளை விற்க வருகிறேன். பல ஆண்டுகளாக விற்பனை செய்வதால் பல நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னை 'காக்கா' என்று அன்புடன் அழைக்கிறார்கள்.

அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் அதே அன்பு எனக்கு கிடைக்கிறது. சிலர் கைக்குட்டைகளை வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது, அவர்களுக்கு தள்ளுபடி விலையில் வழங்குகிறேன். கோவில்களில் கைக்குட்டைகளை பயன்படுத்துவதாக சொல்பவர்களுக்கு இலவசமாகவும் வழங்குகிறேன். இந்த விஷயங்கள் தான் தினமும் இங்கு கைக்குட்டை விற்பதற்கு என்னை வரவழைக்கிறது'' என்கிறார்.

ஹசன் அலியின் அணுகுமுறை பலரையும் கவர்ந்திருக்கிறது. 'குறுகிய காலத்தில் வாழ்க்கையின் சில கடினமான உண்மைகளை கற்றுக் கொடுத்துவிட்டார்'. 'வயதான காலத்தில் கைக்குட்டைகளை விற்பது அவரது உடல் ரீதியான தேவைக்காக இருந்தபோதிலும், ஹசன் அலி சுறுசுறுப்பாகவும், நம் அனைவருக்கும் உத்வேகமாகவும் இருக்கிறார்' என்று பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்