'இரு நல்லாசிரியர்' விருது வென்ற அரசுப்பள்ளி ஆசிரியை..!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றுபவர் மாலதி.
மாலதியை அறிவியல் ஆசிரியை என்பதை விட, தேசிய நல்லாசிரியர் என்றுதான் கூறவேண்டும். ஆம்...! கடந்த 2021-2022-ம் ஆண்டு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், தற்போது தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
ஆசிரியை மாலதி, ஆலங்குளம் அருகே நல்லூரில் வசித்து வருகிறார். இவர் பிறந்த ஊர், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை. செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரை பயின்ற இவர் பின்னர் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்தார். தொடர்ந்து பி.எட். படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தார். சிறப்பாகவும், புதுமையான வழிகளிலும் கல்வி கற்பித்து, இன்று தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது வென்று அசத்தியிருக்கிறார். இரு நல்லாசிரிய விருதுகள் இவரை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. அதனால் உற்சாகத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கும் மாலதியை, சந்தித்து பேசினோம். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
''கொரோனா ஊரடங்கு காலத்தில், இணையவழியில் கணினி மூலம் நேரலையாக மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவித்தேன். ஊரடங்கு காலத்தில், உலகமே முடங்கியிருந்தாலும், மாணவ-மாணவிகள் இணையவழியில் பாடங்கள் பயில்வதற்கு உறுதுணையாக இருந்தேன். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாட விளக்க ஆடியோ, வீடியோக்களையும் தயாரித்து வழங்கினேன்.
இணையதள வசதி உள்ள மாணவர்களுக்கு என்னுடைய யூ-டியூப் சேனல் மூலம் பாடங்களை நடத்தினேன். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் குறைந்த திறன் செல்போனை வைத்து ஆடியோ வடிவிலான பாடங்களை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி, அதனை கேட்டு படிக்க வைத்தேன்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடப்பகுதியையும், ஆடியோ வடிவில் மாற்றி தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி உள்ளேன். இதன் மூலம் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயனடைந்துள்ளனர்'' என்றார்.
அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வியில் இவ்வளவு அக்கறை காட்டுபவருக்கு, தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமே. இவர் பாட கல்வியோடு நின்றுவிடாமல், மாணவ-மாணவிகளுக்கு தேவையான மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார்.
''இன்றைய சூழலில், மாணவ-மாணவிகளுக்கு வெறும் பாடக்கல்வி மட்டும் போதாது. அவர்களுக்கு எல்லா பயிற்சியும் கிடைக்கவேண்டும். குறிப்பாக வாழ்க்கைத்திறன் கல்வி, நேர மேலாண்மை, நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது, பாடங்களை வரைபடங்களாக நினைவில் கொள்வது, ஆங்கில பேச்சுப் பயிற்சி போன்ற வகுப்புகளை நடத்தினேன். மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கினேன்'' என்றவர், 'கோடை கொண்டாட்டம்' என்ற முயற்சியின் மூலம் புத்தக வாசிப்பை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதை பகிர்ந்து கொள்கிறார்.
''பள்ளி விடுமுறை காலத்தில் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் கோடை கொண்டாட்டம் என்ற வகுப்பு நடத்தி அவர்கள் புத்தகங்கள் வாசிக்கவும், கைத்தொழில்கள் கற்கவும் ஏற்பாடு செய்தேன். வேதியியலில் தனிம வரிசை அட்டவணையை எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் பயிற்சி அளித்துள்ளேன்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய வில்லுப்பாட்டு மூலமும் மாணவர்களுக்கு பாடங்களை நன்கு புரியும் வகையில் கற்றுக் கொடுக்கின்றேன். தானியங்கி பொம்மைகள், ரோபோ எந்திரம் செய்வது குறித்தும் பயிற்சி அளித்து மாணவர்களின் திறமைகளை வளர்த்துள்ளேன். இதன் மூலம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி சாதித்து வருகின்றனர்'' என்றார்.
இவருடைய கணவர் ராஜா அந்தோணி, மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் ஜெபா ஷெரின், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். மகன் மெரின்ராஜ், தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாலதி தற்போது மகளுடன் சேர்ந்து வேதியியலில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். சிறப்பான கற்பித்தலுக்காக எண்ணற்ற விருதுகளையும் வென்ற ஆசிரியை மாலதி மாணவர்களின் நல் வழிகாட்டியாக திகழ்கிறார்.
இன்றைய சூழலில், மாணவ-மாணவிகளுக்கு வெறும் பாடக்கல்வி மட்டும் போதாது. அவர்களுக்கு எல்லா பயிற்சியும் கிடைக்கவேண்டும்.