ரூ.5 கோடி செலவில் தாய்க்கு ஒரு தாஜ்மஹால்
இறந்துபோன தாய்க்காக, பிரமாண்ட பொருட்செலவில் தாஜ்மஹால் வடிவில் கல்லறை கட்டிய தங்கமகன் அம்ருதீன் சேக் தாவூது.;
''தாய் என்பவர் வாழும் தெய்வம். கடவுளை நாம் நேரில் பார்த்ததில்லை. எப்படிப்பட்ட உருவம் கொண்டிருக்கும் என்பதும் நம் கண்களுக்கு தெரியாது. நான் கடவுளை தாய் வடிவில் காண்கிறேன். நமக்கு சகோதர, சகோதரிகள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடலாம். சிலருக்கு மனைவி கூட மறுமணம் என்ற ரூபத்தில் மாறுபடலாம். ஆனால் தாய் என்பவர் ஒருவர் மட்டும்தான். தன்னை வருத்தி குடும்ப நலன் காக்க அவர் செய்யும் தியாகம், ஈடு இணையில்லாதது. மதிப்புமிக்கது. அதற்கு விலை நிர்ணயிக்க முடியாது. அவர் தான் வாழ்வின் எல்லாமுமாக இருப்பவர். அதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் நாங்கள் கட்டமைத்திருக்கும் நினைவாலயம்'' என்கிறார், அம்ருதீன் சேக் தாவூது.
யார் இவர் என்கிறீர்களா...?, இவர்தான் இறந்துபோன தாய்க்காக, பிரமாண்ட பொருட்செலவில் தாஜ்மஹால் வடிவில் கல்லறை கட்டிய தங்கமகன். இவர் பற்றிய செய்திகள்தான், கடந்த சில நாட்களாக இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
ஆம்..! திருவாரூர் மாவட்டத்திலுள்ள அம்மையப்பன் கிராமத்தில், தன்னுடைய தாயாரின் கல்லறைக்கு மேலாக, ரூ.5 கோடி செலவில் மார்பிள் கற்களை கொண்டு, தாஜ்மஹாலுக்கு நிகரான கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். 'தென்னகத்து தாஜ்மஹால்' என புகழப்படும், இந்த கட்டமைப்பு உருவாக, அம்ருதீன் சேக் தாவூத்திற்கு பலரும் பக்கபலமாக இருந்துள்ளனர். அதில் அம்ருதீனின் சகோதரிகள் நால்வரும், சித்தி வழி தம்பியான முகமது அப்துல் காதரும் மிக முக்கியமானவர்கள். தங்களுடைய தாய் மீதான அன்பின் வெளிபாடாகவே, இன்று இந்த பிரமாண்டம் மிளிர்கிறது.
தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு உரிய கவுரவம் கொடுக்கும் எண்ணத்துடனும், முதுமைப் பருவத்தை எட்டும் பெற்றோரை தனியாக தவிக்க விடும் இன்றைய தலைமுறையினருக்கு தாய்மையின் மகத்துவத்தை புரியவைக்கும் நோக்கத்துடனும் கட்டமைத்திருக்கும் அம்ருதீன் சேக் தாவூது சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
''எங்களது பூர்வீகம், திருவாரூர். இருப்பினும் சென்னை மண்ணடியில்தான் வளர்ந்தோம். அப்பா சேக் தாவூதின் அரவணைப்பில், எல்லாமும் நன்றாக சென்றுக்கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக அவர் மரணமடைந்துவிட்டார். அவரது மறைவு குடும்பத்தையும், நாங்கள் பார்த்துவந்த ஹார்டுவேர் தொழிலையும் நிலைகுலைய வைத்துவிட்டது. அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் போனதால் ஆரம்பத்தில் அம்மா ஜெயிலானி பீவி அம்மாள் தடுமாறி போனார். பின்பு தனியொரு பெண்மணியாக கஷ்டங்களை சமாளித்து தொழிலை வழிநடத்தினார். அந்த சமயத்தில் நான் சிறுவன். என் சகோதரிகள் நான்கு பேரும் குழந்தைகள். என் தாயாரின் சகோதரி மகன் முகமது அப்துல் காதரும் எங்கள் வீட்டில்தான் வளர்ந்தார். எங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு தாயார் ரொம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் மனவேதனைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எங்களிடம் அன்பையும், பாசத்தையும் பொழிந்து படிக்கவைத்தார். நான்கு சகோதரிகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். நானும், தம்பி அப்துல் காதரும் இணைந்து சொந்த தொழில் தொடங்கினோம்'' என்று வாழ்க்கையின் முதல்பாதியை விவரிக்கும் அம்ருதீன், இரண்டாம்பாதியில் தாயை இழந்த சோகத்தையும், தொழில்முன்னேற்றம் பற்றியும் மனம் திறக்கிறார்.
''எனது தாயார் ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், பணிவு போன்ற வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்றி வாழ்ந்தார். எங்களையும் அதன்படியே வாழ வைத்தார். நான் படிப்பை முடித்ததும் சொந்தமாக தொழில் தொடங்கினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட நான்கு தொழில்களில் நஷ்டத்தை எதிர்கொண்டேன். அப்போதும் கூட தாயார் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. உன் விருப்பத்திற்கு மாறாக நடந்துவிட்டது. இதில் உன் தவறு எதுவும் இல்லை என்று எனக்கு பக்கபலமாக இருந்தார். அவரிடம் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடமும், தன்னம்பிக்கையும் என்னை செம்மைப்படுத்தியது. இறுதியில் அரிசி வியாபாரம் மூலம் என்னை நிலைநிறுத்திக்கொண்டேன்'' என்றவர், அரிசி தொழில் ஆரம்பித்த 6-வது மாதத்திலேயே, நல்ல லாபம் கிடைத்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், தாயாரை இழந்துவிட்டார்.
''எனது அம்மா, கஷ்டப்பட்டு உழைத்து அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையில் முன்னேறி எங்களை கரை சேர்த்தவர். தந்தையின் இழப்பிற்கு பிறகு எங்களுக்காகவே வாழ்ந்தவர். அவரது தியாகத்தில்தான், நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்தோம்; வளர்ந்தோம். எங்களுக்கு புத்தாடை அணிவித்து சந்தோஷப்பட்டாலும், அவர் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். இந்நிலையில், நான் அரிசி தொழிலில் நன்றாக வளர்ந்த வந்த நிலையில், அவரை கொண்டாட ஆசைப்பட்டேன். அவர் வாழ்க்கையில் தொலைத்திருந்த எல்லா சந்தோஷங்களையும் அவருக்கு வழங்கிடும் ஆசை எனக்கும், என் சகோதரர்-சகோதரிகளுக்கும் இருந்தது. ஆனால் விதியின் ஆசை வேறுவிதமாக இருந்தது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர், திடீரென நோய்வாய்பட்டு 18 நாட்கள் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்ற பின் இறந்துபோனார்.
இறுதிநாட்களில், நான் அம்மாவை மூன்று முறை சந்தித்தேன். அப்போது அவர் எங்களை பற்றியே சிந்தித்தார். 'நான் இனி திரும்பி வர மாட்டேன். நீயும், முகமது அப்துல் காதரும் ஒன்றாக வாழ்ந்து குடும்பத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்ல வேண்டும் என்று வேண்டினார். அதுநாள் வரை கஷ்டங்களை எல்லாம் சமாளித்து இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் மனதொடிந்து பேசியது என்னை ரொம்பவே வேதனைப்படுத்திவிட்டது. என்னுடைய கஷ்ட காலங்களில் எல்லாம் என்னுடன் கூடவே பயணித்தவர், நான் நல்ல நிலையில் இருப்பதை பார்க்காமலேயே மறைந்து போய்விட்டார். அவரது திடீர் இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்றவர், தாஜ்மஹால் போன்ற நினைவு மண்டபம் அமைத்தது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
''மாதா, பிதா, குரு, தெய்வம் என எங்களுக்கு எல்லாமுமாக தாயார்தான் இருந்தார். அவர் இறப்புக்கு பிறகும் எங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படிதான், நினைவிடம் அமைக்கும் எண்ணம் தோன்றியது. ஆரம்பத்தில் தாஜ்மஹால் போன்ற கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. அதேபோல, அம்மாவின் நினைவிடத்தை குறிப்பிட்ட பட்ஜெட் தொகைக்குள் முடித்துவிட வேண்டும் என்ற எந்த திட்டமிடுதலும் இன்றிதான், இந்த கட்டமைப்பு வேலைகளை தொடங்கினோம். ஆனால் அது இறுதியில், ரூ.5 கோடி பட்ஜெட்டில் தாஜ்மஹாலின் பிரதிபலிப்பாக வந்துவிட்டது'' என்றவர், நினைவிடம் உருவான கதையை கூறினார்.
''யார் பார்த்தாலும் எங்கள் தாயாரின் நினைவிடம் சட்டென்று மனதில் பதியம்படி அமைந்திருக்க வேண்டும். என் தாயார் யார்? அவர் எத்தகைய வாழ்க்கை கோட்பாடுகளை பின்பற்றி வாழ்ந்தார், எங்களை வாழவைத்தார் என்பதை இந்த உலகத்திற்கு காண்பிக்க விரும்பினேன். அதற்கேற்றபடி நினைவிடம் அமைய வேண்டும் என்று நானும், என் தம்பி முகமது அப்துல் காதரும் முடிவு செய்தோம். மற்றவர்கள் பேசும்படி அமைய வேண்டும் என்றோ, ஆடம்பரமாக காட்சி அளிக்க வேண்டும் என்றோ நாங்கள் எண்ணவில்லை. முகலாய கட்டிடக்கலை அமைப்பில் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்தோம். என் தாயார் தூய்மை மனதோடு வாழ்ந்தார். அவரின் தூய உள்ளத்தை பிரதிபலிக்கும் விதமாக வெண்மை நிறத்தில் காட்சி அளித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினோம்.
திருச்சியை சேர்ந்த ஆர்க்கிடெக்ட் கார்த்திகேயன்தான், வெண்மை நிறம் என்றால் தாஜ்மஹால் மாதிரியிலான கட்டமைப்பு பொருத்தமாக இருக்கும் என்றார். அது எங்களுக்கும் பிடித்துபோகவே அதன்படி வடிவமைக்க சொன்னோம். திருவாரூரை சேர்ந்த பி.டெக் என்ஜினீயர் முத்து ராமலிங்கம் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். ராஜஸ்தானில் இருந்து 80 டன் மார்பிள்களை வாங்கினோம். அங்கிருந்து அதனை நிறுவுவதற்கான வேலை ஆட்களையும் வரவழைத்தோம். இதற்காக வேலை பார்த்தவர்கள் அனைவருக்குமே, இது ஒரு ஸ்பெஷல் புராஜெக்ட். அதாவது அவரவர் தாயாருக்காக ஒரு நினைவிடம் கட்டும் வாய்ப்பு கிடைத்தால், அதில் எவ்வளவு சிரத்தை மேற்கொள்வார்களோ, அந்தளவிற்கு முழு ஈடுபாடு காட்டி, வேலை செய்தனர்.
2021-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து 2023-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திறக்கப்பட்டது வரை அவர்களின் பங்களிப்பு உணர்வுப்பூர்வமாகவே இருந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில் இந்த கட்டமைப்பை நிறுவி இருக்கிறோம். இது அம்மாவின் நினைவிடம் மட்டுமல்ல, அம்மாவின் ஆசைகளையும் தாங்கி நிற்கிறது'' என்றவர், இதை வெறும் நினைவிடமாக மட்டுமின்றி, பசித்தோருக்கு உணவு வழங்கும் இடமாகவும், கல்வி கற்பிக்கும் கல்விக்கூடமாகவும் மாற்றி இருக்கிறார்.
''இந்த நினைவிடத்தில் அம்மா தூங்கிய நிலையில் எங்களோடு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்கிறோம். எங்கள் இன்ப துன்பங்களை அவரின் நினைவிடத்திற்கு சென்று பகிர்ந்து கொள்வோம். அம்மாவின் நினைவிடத்தில் அவரது ஆசைகளுக்கும் எங்களால் முடிந்தவரை உயிர் கொடுத்திருக்கிறோம். ஆம்...! பசித்தோருக்கு உணவு அளி, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய், கல்வி புகட்டு, உயர்ந்த நிலைக்கு சென்றாலும் பணிவோடு நடந்து கொள், உற்றார், உறவினர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்... இப்படி நிறைய கற்றுக்கொடுத்துதான் எங்களை வளர்த்திருக்கிறார். அதனால், அவரது வார்த்தைகளுக்கு, எங்களது செயல் மூலமாக உயிர்ப்பிக்கிறோம். அம்மாவின் இறந்த தினத்தை (மாத பிறை தினம்) அடிப்படையாக வைத்து, மாதந்தோறும் உணவு வழங்குகிறோம். இதுமட்டுமின்றி, இந்த வளாகத்திற்குள் வழிபாட்டு தலத்தையும், கூடவே கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடத்தையும் நிறுவி இருக்கிறோம். இதை சாதி, மத, பேதமின்றி யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்'' என்றவரிடம், அம்மாவின் நினைவிடத்திற்காக ரூ.5 கோடி செலவழித்தது குறித்து விமர்சனங்கள் எழுந்ததா என்ற கேள்வியை முன்வைக்க, பதிலளித்தார்.
''தொழில் நன்றாக நடக்கிறது, எங்களிடம் பணம் இருக்கிறது, அதனால் நினைவிடத்தை எல்லோரும் வியக்கும்படி கட்டவேண்டும் என்ற எண்ணத்தில், இதை கட்டவில்லை. எங்களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய அம்மாவுக்கு, எங்களால் செய்ய முடிந்த நன்றிக் கடனை இதைக் கொண்டு ஈடுசெய்ய முடியுமா..? என்பதன் சிறுமுயற்சிதான், இது. இதில் எந்தவிதமான ஆடம்பர சிந்தனையும் இல்லை. அம்மாவிற்கு செலவு செய்வதில் நாங்கள் கணக்கு வழக்கும் பார்க்க விரும்பவில்லை.
என் குடும்பத்தினர் யாருமே ஏன் இவ்வளவு தொகை செலவு செய்து நினைவிடம் அமைக்கவேண்டும் என்று என்னிடம் கேட்கவில்லை. அதுதான், என்னுடைய அம்மாவின் வளர்ப்பும்கூட. தாய்க்கு செய்யும் செலவு விலை மதிப்பில்லாதது. தாயின் அன்புக்கு எந்த விலையையும் நிர்ணயிக்க முடியாது'' என்றவர், பெற்றோரை இறுதி காலத்தில் பார்த்துக்கொள்ளும் பாக்கியமே, பிள்ளைகளின் மிகப்பெரிய சொத்து என்கிறார்.
''வயதான பெற்றோரை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளும் பாக்கியம், எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்பதற்கு நானும் ஒரு உதாரணம். ஆனால் இத்தகைய பாக்கியம், வாய்க்கப்பெற்ற பலரும், அதை சுமையாகவே கருதுகிறார்கள். பணம், தொழில்... என எல்லாமும் கிடைத்த பிறகும், 'அம்மா' என்ற ஒரு உறவை இழந்ததினால், சோகம் நிரம்பிய நெஞ்சத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
''நீங்கள், அன்புடன் வாங்கி கொடுக்கும் சில நூறு ரூபாய் சேலைகளுக்கு முன்னால் நான் எழுப்பிய நினைவிடம் ஒன்றும் பெரிதில்லை'' என்ற கருத்தை முன்வைப்பதுடன், பெற்றோர்களை அரவணைத்து செல்ல வழிகாட்டுகிறார்.