3 கி.மீ. நடந்து டெலிவரி செய்த நபரும்.. உதவிய உள்ளங்களும்..!

உணவு டெலிவரி செய்வதற்கு இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் நடந்தே சென்று ஆர்டரை ஒப்படைத்திருக்கிறார் சாஹில் சிங்.

Update: 2023-06-18 09:15 GMT

உணவு டெலிவரி செயலிகளின் வருகையால் விரும்பிய உணவகத்தில் உடனடியாக ஆர்டர் செய்து சாப்பிடும் நிலை உண்டாகி இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே உணவு கைகளுக்கு கிடைத்துவிடுகிறது.

ஆனால் அதனை கொண்டு வருவதற்கு டெலிவரி ஊழியர்கள் சாதகமற்ற வானிலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பட்டப்படிப்பை முடித்தும் நல்ல வேலை கிடைக்காத நபர்களும் டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொரோனா ஏற்படுத்தி சென்ற வேலை இழப்பால் வருமானத்திற்கு வழி இல்லாமல் உணவு டெலிவரி செய்யும் பணியிலும் நிறைய பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவரின் கதை சமூகவலைத்தளத்தில் பரவி அவருக்கு வேறு இடத்தில் வேலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த நபர் உணவு டெலிவரி செய்வதற்கு இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் நடந்தே சென்று ஆர்டரை ஒப்படைத்திருக்கிறார்.

அப்படி 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து டெலிவரி செய்த நபர், சாஹில் சிங். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டதாரி. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக வேலையை இழந்திருக்கிறார்.

ஊருக்கு செல்ல மனமில்லாமல் பெங்களூருவிலேயே தங்கி கிடைக்கும் வேலைகளை செய்ய முடிவெடுத்திருக்கிறார். உணவு டெலிவரி செயலி ஒன்றில் வேலையை தொடர்ந்திருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த பிரியான்ஷி சாண்டல் என்பவர் உணவு டெலிவரி செயலியில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். அதனை சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக கொண்டு வந்திருக்கிறார், சாஹில் சிங்.

சில நிமிடங்களில் சாப்பிட வேண்டிய ஐஸ்கிரீம் தாமதமாக வந்த நிலையில் அதனை கொண்டு வந்தவர் சோர்வாக இருப்பதை கண்ட பிரியான்ஷி விசாரித்திருக்கிறார். அப்போது சாஹில் சிங் தன் நிலைமையை கூறி இருக்கிறார்.

''நான் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். கொரோனாவால் அந்த வேலையில் இப்போது இல்லை. என்னிடம் வாகனமும் இல்லை. அதனால் உங்களது ஆர்டரை 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து டெலிவரி செய்துள்ளேன். அடுத்த ஆர்டரை 12 மணிக்குள் எடுத்து டெலிவரி செய்ய வேண்டும். வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தக்கூட என்னிடம் பணம் இல்லை. ஒரு வாரமாக சாப்பிடவில்லை. தண்ணீர் மற்றும் டீ மட்டுமே பருகி உயிர்வாழ்கிறேன்'' என்றிருக்கிறார்.

அவரது நிலைமையை பார்த்து பரிதாபப்பட்ட பிரியான்ஷி இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். சாஹிலுக்கு வேலை வாங்கி கொடுக்க முன்வந்தார். அவரது மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் தாள்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை பகிர்ந்தார்.

சமூகவலைத்தள நண்பர்களிடம் சாஹலுக்கு வேலை கிடைப்பதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆபீஸ் பாய் உள்ளிட்ட எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது அவருக்கு தேவை ஒரு வேலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை பார்த்த பலரும் சாஹிலுக்கு உதவுவதற்கு முன் வந்தனர். சாஹிலுக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும், உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும், அவர்களின் அசாத்தியமான பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பிரியான்ஷி கூறி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்