தெலுங்கில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றிய ஸ்ரீலீலா

ராஷ்மிகாவைப் போலவே, கன்னடத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றி இருக்கிறார்.;

Update: 2023-07-16 06:10 GMT

கன்னடத்தைச் சேர்ந்தவரான ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலமாக சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து மூன்று படங்கள் கன்னடத்தில் நடித்தவருக்கு, 2018-ம் ஆண்டு 'சலோ' திரைப்படத்தின் வாயிலாக தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டு வெளியான 'கீதாகோவிந்தம்' படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற, தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கோலோச்சத் தொடங்கினார். அவரது துள்ளலான நடிப்பும், எப்போதும் புன்னகை புரியும் உதடும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.

பான்இந்தியா படமாக வெளியான 'புஷ்பா' திரைப்படம் அவரை, பாலிவுட்டிற்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர் இந்தியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அங்கு அவருக்கு 'குட்பை', 'மிஷன் மஜ்னு' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து புக் ஆகின. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது 'அனிமல்' என்ற படம் மட்டுமே இந்தியில் அவர் கைவசம் உள்ளது. இந்தப் படம் டிசம்பர் 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்தே, அவருக்கு பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் வருமா வராதா என்பது தெரியவரும். இந்தியில் கவனம் செலுத்தியதன் காரணமாகவும், வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், ராஷ்மிகாவுக்கு தெலுங்கு மொழியில் படங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் ராஷ்மிகாவைப் போலவே, கன்னடத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றி இருக்கிறார். தெலுங்கில் தற்போது அவரது கைவசம் 7 படங்கள் இருக்கின்றன. அத்தனைப் படங்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பிறந்த இந்தியரான ஸ்ரீலீலா, வளர்ந்தது, படித்தது எல்லாம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்தான். மகப்பேறு மருத்து வரான தன் தாயைப் போலவே, தானும் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் 'கே.ஜி.எப்.' பட இயக்குனர் பிரசாந்த் நீலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான புவன் கவுடா, கடந்த 2017-ம் ஆண்டு ஸ்ரீலீலாவின் சில படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களைப் பார்த்த கன்னட இயக்குனர் ஏ.பி.அர்ஜூன், தன்னுடைய படத்தில் நடிக்க ஸ்ரீலீலாவை அணுகினார். அவரும் ஓ.கே. சொல்ல, ஸ்ரீலீலாவின் முதல் படமான 'கிஸ்' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் வெளியானபோது, அவரது வயது 19 தான். முதல் படமே 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் வந்தன.

'பராதே', 'பை டூ லவ்' ஆகிய படங்களில் நடித்தவர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜோடியாக 'ஜேம்ஸ்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. இரண்டாவது படமே, தெலுங்கின் முன்னணி நடிகரான ரவிதேஜாவுடன் ஒப்பந்தமானது. 'டமாக்கா' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

தற்போது தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் 'ஆதிகேசவா' என்ற படத்திலும், மற்றொரு இளம் நடிகரான ராம் பொத்ததேனி நடிக்கும் 'ஸ்கந்தா' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இது தவிர தெலுங்கு சினிமாவின் மூர்த்த நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 'பகவந்த் கேசரி' என்ற படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஜோடியாக 'குண்டூர் காரம்' என்ற படத்திலும், 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் கல்யாண் ஜோடியாகவும் நடிக்கிறார். இதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் படம், தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தெறி' படத்தின் ரீமேக் ஆகும். மேற்கண்ட படங்கள் தவிர தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான நிதின், விஜய் தேவரகொண்டா ஆகியோருடனும் ஒரு படத்தில் ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதே நேரம் தன்னை அறிமுகம் செய்த கன்னட சினிமாவிலும் 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, 'ஆஹா' என்ற ஓ.டி.டி. தளத்தின் விளம்பரம் ஒன்றில், தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லுஅர்ஜூனுடன் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், ஸ்ரீலீலா. இந்த விளம்பரம் ஆந்திராவில் சக்கைபோடு போட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ரவிதேஜா படத்தில் நடித்தபோது ஸ்ரீலீலாவின் சம்பளம் ரூ.1 கோடியாக இருந்தது. இந்த நிலையில் அது படிப்படியாக உயர்ந்து, பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்தில் ரூ.5 கோடியாக உயர்ந்திருப்பதாக, தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் தாக்கத்தால் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி, தெலுங்கில் படவாய்ப்புகளை இழந்து நிற்கும் ராஷ்மிகாவின் இடத்தை, கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார், ஸ்ரீலீலா. தெலுங்கின் முன்னணி நடிகா்களுடன் நடிக்கும் படங்கள் பலவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலையில், நடிகை ஸ்ரீலீலாவின் சினிமா மார்க்கெட் இன்னும் உயர வாய்ப்புள்ளது. தவிர அவரது சினிமா வர்த்தகம், தமிழ், இந்தி, மலையாளம் என்று விரிவடையவும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீலீலா, இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். நடிப்பில் உயர்வான நிலையை எட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீலீலா, மனிதாபிமானத்திலும் உயர்ந்தவராக இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

Tags:    

மேலும் செய்திகள்