மன நிம்மதிக்கு வித்திடும் எளிய வழிகள்

ஏமாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மனதை பழக்கிவிட்டால் மகிழ்ச்சி மறையாது, மன நிம்மதி குலையாது.;

Update:2023-05-28 19:45 IST

எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்து மகிழ்ச்சியை அபகரித்துக்கொள்கிறது. சின்னச்சின்ன விஷயங்களில் கிடைக்கும் திருப்தியை மகிழ்ச்சியாக அனுபவிக்க பழகிவிட்டால் மனம் இறுக்கமடையாது. ஏமாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மனதை பழக்கிவிட்டால் மகிழ்ச்சி மறையாது, மன நிம்மதி குலையாது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தக்கவைத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

புன்னகை

புன்னகைக்கும், மன மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முகபாவங்கள் மனநிலையை பாதிக்கின்றன என்பதையும் உறுதிபடுத்தியுள்ளன. கோபம், ஆத்திரம், ஆக்ரோஷம், சந்தோஷம், துக்கம் போன்றவை முக பாவங்களில் வெளிப்படும். ஒருவருடைய முக பாவங்களை கொண்டே அவருடைய மன நிலையை புரிந்து கொள்ளலாம்.

எப்போதுமே இறுக்கமான மன நிலையில் இருப்பது மன நிம்மதியை குலைத்துவிடும். அவ்வப்போது புன்னகையை வெளிப்படுத்துங்கள். எந்தவொரு சூழலில் இருந்தாலும் சிறிதளவாவது புன்னகை வெளிப்பட வேண்டும். அது சோகத்தின் அடையாளமான புன்னகையாக கூட இருக்கலாம். புன்னகைக்கு மகிழ்ச்சியை தக்கவைக்கும் சக்தி உண்டு. மனமும் நிம்மதி பெறும்.

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி

அமைதியின்மை மற்றும் பதற்றமாக இருப்பதாக உணர்ந்தால், ஆழமாக சுவாசிக்கவும். அத்தகைய ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மனதை அமைதிப்படுத்த உதவும். சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மன அழுத்தம், பதற்ற உணர்வுகள் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும். சுயமரியாதை உணர்வை பேணவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும். மன நிம்மதிக்கும் வித்திடும்.

தூக்கம்

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நல் வாழ்வை பேணவும் குறைந்தது 7 மணிநேர தூக்கம் தேவை. தூக்கம் தடைபட்டால் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிப்படையும். மன அழுத்தம், மனச் சோர்வு எட்டிப்பார்க்கும்.

அது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் குலைத்துவிடும். அதனால் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் அலட்சியமாக இருக்காதீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள்.

ஒப்பிட வேண்டாம்

மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பது கூடாது. அது நாளடைவில் மன நோயாக மாறிவிடும். சுயமரியாதையைக் குறைத்து, நம்மை அதிருப்தி அடையச் செய்துவிடும். மனம் நிம்மதியை இழந்துவிடும். மகிழ்ச்சியை சிதைத்துவிடும்.

நன்றி சொல்லுங்கள்

மற்றவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். அவர்களின் உதவியை என்றென்றும் நினைவில் கொண்டு நன்றி உணர்வுடன் இருங்கள். அது நம் மதிப்பை உயர்த்தும். மற்றவர்களிடம் நற்பெயரை பெற்றுத்தரும்.

மற்றவர்களை பாராட்டுங்கள்

மற்றவர்கள் செய்யும் நற் செயல்களை பாராட்டுவதற்கு தயங்காதீர்கள். நேர்மையான பாராட்டு உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். பாராட்டு பெறுபவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்