புராணமும்.. அறிவியலும் இணைந்த 'புராஜக்ட் கே'
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மூலமாக இந்திய அளவில் அறியப்பட்ட முக்கியமான நடிகராக மாறினார். அந்தப் படம் தந்த வெற்றியின் காரணமாக, அவரது மார்க்கெட் பெரிய அளவில் பரந்து விரிந்ததாக மாறியது.;
'பாகுபலி' திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும், பான் இந்தியா படங்களாகவே வெளிவந்தன. 'சாஹோ', 'ராதேஷ்யாம்', 'ஆதிபுருஷ்' என்று அடுத்தடுத்து வெளிவந்த அனைத்து படங்களும் படுதோல்வியையே சந்தித்திருக்கின்றன.
இந்த நிலையில் பிரபாஸ் நடித்து வரும் இரண்டு படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று 'சலார்'. இந்த திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்ப்பதற்கான காரணம், 'கே.ஜி.எப்.' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இரண்டாவது படம் 'புராஜக்ட் கே'. இந்தப் படத்தை அனைவரும் எதிர்பார்ப்பதற்கான காரணம், இந்தப் படத்தில் பிரபாசுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதுவும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
ஆரம்ப கட்டத்தில் 'புராஜக்ட் கே' என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் தற்போது 'கல்கி கி.பி. 2898' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் இதிகாச புராணத்துடன் நவீன அறிவியலும் கலந்த கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ கதையாகவும் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதிகாச புராணங்களில், தற்போது நடப்பது கலியுகம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் நீதி, நேர்மை தவறி நடப்பார்கள், அல்லது சட்டங்களையும், நீதியையும் மீறுவார்கள். நாணம், வெட்கம் என்றால் என்னவென்று கேட்பார்கள். சமூக நீதியையும், மனிதாபிமானத்தையும் மறந்து நிற்பார்கள். பணம்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் அரசனாக இருக்கும். அதிகாரம் இருப்பவர்களின் சொல்படி சட்டங்கள் வளைக்கப்படும் என்பது போன்ற பல்வேறு செயல்பாடுகள் கலியுகத்தில் நடைபெறும் என்பதை புராணங்கள் சொல்கின்றன.
இவை அனைத்திற்கும் காரணமாக மனிதர்களின் மனங்களில் புகுந்து அவர்களை ஆட்டிப்படைக்கும் மாய அரக்கனாக 'கலி' என்பவர் இருப்பான் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கலி என்னும் அரக்கனை அழிப்பதற்காகவே, மகாவிஷ்ணு கலியுகத்தின் முடிவில் 'கல்கி' என்ற அவதாரத்தை எடுக்கவிருப்பதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரின் மகனாக வந்த அஸ்வத்தாமா தான் கலியுகத்தில் 'வியாசராக' இருப்பார் என்றும், அனுமன் 'பிரம்மதேவனாக' இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வத்தாமாவும், அனுமனும் சிரஞ்சீவியாக வாழும் வரம் பெற்றவர்கள். எனவே அவர்கள் இப்போதும் இந்த கலியுகத்தில் அரூபமாக தவத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
'புராஜக்ட் கே' திரைப்படத்தில், இந்த பிரபஞ்சத்தை நவீன அறிவியலால் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நினைக்கும் ஒருவனை, ஒரு சூப்பர் ஹீரோ எதிர்த்து போராடுவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதனை புராணகாலத்திலும், தற்போதைய காலகட்டத்திலும் நடப்பது போல் காட்சிப்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸ், 'கல்கி' கதாபாத்திரத்திலும், கமல்ஹாசன் 'கலி' என்ற கதாபாத்திரத்திலும், அமிதாப் பச்சன் 'அஸ்வத்தாமா' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாயகியாக தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள நடிகர்களும் இந்தப் படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்தப் படம் ரூ.600 கோடியில் தயாரிக்கப்படுகிறது. இதனை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'வைஜெயந்தி மூவிஸ்' தயாரிக்கிறது. 'எவடே சுப்ரமண்யம்' என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இயக்கு னராக அறிமுகமான நாக் அஸ்வின் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'புராஜக்ட் கே' திரைப்படம் 2024-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி, மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
அதிர்ச்சியும்.. எழுச்சியும்..
'புராஜக்ட் கே' படத்தின் முதல் கிளிப்பிங் கடந்த 20-ந் தேதி அமெரிக்காவிலும், 21-ந் தேதி இந்தியாவிலும் வெளியிடப்பட்டது. இதற்கு சில நாட்கள் முன் வெளியான இந்தப் படத்தின் போஸ்டர் சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்குதலை சந்தித்தது. ஒரு காலின் பாதத்தை நிலத்தில் ஊன்றியும், மற்றொரு காலின் மூட்டுப் பகுதியை தரையில் வைத்தும், வலது கையால் தரையில் ஓங்கி குத்திய நிலையில் பிரபாசின் படம் வெளியிடப்பட்டது. அதில் பிரபாஸ், சூப்பர் ஹீரோக்களுக்கான உடையில், தலையில் நீண்ட முடி வளர்த்திருந்த நிலையில் காட்சியளித்தார்.
இந்தப் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரசிகர்கள், 'பிரபாஸ் தோற்றம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அயன்மேன் உடலையும், 'பதான்' படத்தில் நடித்த ஷாருக்கான் தலையையும் ஒட்டவைத்தது போல் உள்ளது' என்று கிண்டலடித்து பதிவிட்டிருந்தனர். மேலும் 'புராஜக்ட் கே' திரைப்படத்தின் முதல் கிளிப்பிங் வெளியிடப்படும் தேதி என்று வெளியான போஸ்டர் கூட நன்றாக இருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின், முதல் போஸ்டர் வெளியான போதும், இதேபோன்றுதான் எதிர்மறையான விமர்சனங்கள் பல எழுந்தன. இறுதியில் அந்தப் படமே பெரும் தோல்வியை சந்தித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த நிலையில் 21-ந் தேதி வெளியான 'புராஜக்ட் கே' படத்தின் முதல் கிளிப்பிங் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.