பிரசாந்த் நீலின் 'சினிமாட்டிக் யுனிவர்சல்'

‘சினிமாட்டிக் யுனிவர்சல்’ பாணி கதை என்பது, ஹாலிவுட்டில்தான் மிகவும் பிரபலம். அதற்கு சரியான உதாரணம் சொல்வதென்றால், ‘அவென்சர்ஸ்’ வரிசை திரைப்படங்களைச் சொல்லலாம். அந்தப் படத்தில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நடித்திருப்பார்கள்.

Update: 2023-04-30 14:45 GMT

ஆனால் அந்த சூப்பர் ஹீரோக்கள் அனைவருக்கும் தனித்தனியாகவும் கதைகளுடன் (அயன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, அன்ட் மேன், பிளாக் பாந்தர் இப்படி ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் அடங்கியது) கூடிய திரைப்படங்கள் உண்டு. அந்த தனிக் கதை திரைப்படங்களிலும், அனைத்து சூப்பர் ஹீரோக்களும் நடித்திருக்கும் 'அவென்சர்ஸ்' வரிசைப் படங்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திஇருப்பார்கள்.

ஒரு படத்தை தனியாக பார்க்கும் போதும், அது புரிய வேண்டும். மற்றொரு படத்துடன் இணைத்து பார்க்கும் போதும் அந்தப் படத்துடன் அது ஒன்றிப் போக வேண்டும். அப்படி ஒரு சினிமாட்டிக் யுனிவர்சல் திரைப்படங்கள் அமைய, முதலில் தெளிவான கதையும், திரைக்கதையும் அவசியமானது.

அப்படி ஒரு சினிமாட்டிக் யுனிவர்சல் திரைப்பட பாணியை ஹாலிவுட் தவிர வேறு எந்த நாட்டு மொழி சினிமாக்களும் முன்னெடுக்கவில்லை. ஆனால் அந்த பாணியை முதன் முதலில் இந்திய சினிமாக்களில் தமிழ் படங்களின் இயக்குனர் ஒருவர் முன்னெடுத்தது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆம்.. அந்த பாராட்டுக்குச் சொந்தக்காரர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தன்னுடைய இரண்டாவது படமான 'கைதி' யிலேயே, இந்த சினிமாட்டிக் யுனிவர்சல் பாணியை தொட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், 2022-ம் ஆண்டு 'விக்ரம்' படம் வெளியான பிறகு தான், அனைவருக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில், அவரது பெயர் 'விக்ரம்'. ஆனால் அவருக்கு 'ஹோஸ்ட்' என்ற பெயரும் உண்டு.

இந்தப் பெயர், 2019-ம் ஆண்டு வெளியான 'கைதி' படத்திலேயே, போலீஸ் அதிகாரியாக நடித்த நரேனால் உச்சரிக்கப்பட்டிருக்கும். 'கைதி' படம் வெளியான நேரத்தில் விடை கிடைக்காத அந்த பெயருக்கு, 'விக்ரம்' படத்தில் பதில் வைத்திருந்தார், லோகேஷ் கனகராஜ்.

'கைதி' படத்தின் இறுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், கதாநாயகன் டெல்லிக்கும் தொடர்பு இருப்பது போலவும், அதன் இரண்டாம் பாகம் வரும் என்ற ரீதியிலும் படம் முடிக்கப்பட்டிருக்கும். 'விக்ரம்' படத்தின் இறுதிக் காட்சியில், டெல்லி கதாபாத்திரத்தின் குரல் பதிவும், கைதி படத்தில் நடித்த கதாநாயகனின் மகள் மற்றும் காமாட்சி என்ற இளைஞரின் கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படி கிளைத்து பரவும் திரைப்படங்களின் வாயிலாக, இன்னும் எத்தனை கிளைக் கதைகளை லோகேஷ் கனகராஜ் அமைப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்த நிலையில் கே.ஜி.எப். திரைப்படம் மூலமாக கன்னடம் மட்டுமின்றி, இந்தியாவின் முக்கியமான இயக்குனராக மாறி இருக்கும் பிரசாந்த் நீலும், சினிமாட்டிக் யுனிவர்சல் பாணியை கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

'கே.ஜி.எப்.' திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான நிலையில், அதன் மூன்றாம் பாகமும் வெளியாக இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பதை, கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் இறுதியில் இயக்குனரே மறைமுகமாக சொல்லவும் செய்திருக்கிறார்.

அதாவது, கே.ஜி.எப். கதாநாயகன் ராக்கி, தன்னிடம் இருக்கும் மொத்த தங்கத்துடன் இந்திய - சர்வதேச கடல் எல்லையில் சாவை எதிர்நோக்கி பயணிப்பான். அப்போது இந்திய கடற்படையோடு, அவனை நோக்கி அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை கப்பலும் வரும்.

ஏனெனில் கடைசி மூன்று ஆண்டுகள் ராக்கி, அமெரிக்கா உள்பட 16 நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், அந்த நாடுகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படும். அந்த மூன்று வருடத்தில் வெளிநாடுகளில் ராக்கி என்ன செய்தான் என்பதுதான், கே.ஜி.எப். மூன்றாம் பாகத்தின் கதையாக இருக்கும் என்கிறார்கள்.

கே.ஜி.எப். மூன்றாம் பாகத்திற்கு முன்பாக, பிரசாந்த் நீல் 'சலார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப். 2-ம் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்கள்.

முக்கியமாக கே.ஜி.எப். படத்தை தயாரித்த 'ஹாம்பல் பிலிம்ஸ்'தான் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக 'பாகுபலி' புகழ் பிரபாஸ் நடிக்கிறார். வில்லனாக மலையாளத்தில் முன்னணி நாயகனாக இருக்கும் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

இந்த 'சலார்' படம்தான், பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்சலில் இணையப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. கே.ஜி.எப். திரைப்படத்தின் ஒளிப்பதிவு பாணியில்தான், 'சலார்' படத்தின் ஒளிப்பதிவு பாணியும் இருக்கும் என்பதை, அந்தப் படத்தின் முதல் போஸ்டரே அனைவருக்கும் பறைசாற்றி விட்டது. அடுத்ததாக கே.ஜி.எப். படத்தின் உயிர்நாடியான தாய்-மகன் சென்டிமெண்ட். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும், அதன் அடிப்படையே ஒரு தாயின் கண்ணீரில் இருந்துதான் தொடங்கியிருக்கும். கே.ஜி.எப். திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் அது ஆழமாக பேசப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில் கே.ஜி.எப். 2-ம் பாகத்தில் இன்னொரு தாய்-மகன் பாசமும் பதிவு செய்யப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். அது பாத்திமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஈஸ்வரிராவ், அவரது மகனாக பர்மான் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சரண் சக்தி. தன் பிள்ளை துப்பாக்கி தூக்குவதைக் கண்டு பரிதவிக்கும் தாயாக ஈஸ்வரிராவும், தன் மக்களை தலைமிரச் செய்த ராக்கிக்காக உயிரை இழக்கத் தயாரான போராளியாக சரண்சக்தியும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சரண் சக்திக்கு, வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் அளிக்கப்படாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

கே.ஜி.எப். 2 படத்தின் முக்கிய வில்லனான சஞ்சய் தத்துடன் நேருக்கு நேர் வீரமாக எதிர்த்து நிற்கும் கதாபாத்திரம் சரண்சக்திக்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சஞ்சய்தத்தை எதிர்த்து நின்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக மட்டுமே சொல்லப்படும். அவர்களின் உடலும் கூட கூட்டம் கூட்டமாகதான் காட்டப்படும். சரண்சக்தியை, சஞ்சய்தத் கொல்வது போன்றோ, சரண்சக்தியின் உடலைப் பார்த்து ஈஸ்வரிராவ் அழுவது போன்றோ எந்த காட்சியும் படத்தில் வைக்கப்படவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், கழுகுகளால் கொத்திக் குதறப்பட்டதால், துணியால் மூடப்பட்ட உடல்களில் எது யாருடையது என்பதை தெரிந்துகொள்ள முடியாத சூழல்தான் அங்கே நிலவியிருக்கும்.

இவற்றை வைத்துப்பார்க்கும்போது, கே.ஜி.எப். 2-ம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த சரண்சக்தியின் கதாபாத்திரம் தான், 'சலார்' படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரம் என்று பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். அதோடு கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தில் நடித்த ஈஸ்வரிராவ், 'சலார்' படத்தில் நடிப்பதும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில், 'சலார்' படம் பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்சல் படமாக அமைந்துவிடும். அதோடு இந்தப் படம் அடுத்து தயாராகப் போகும், கே.ஜி.எப். மூன்றாம் பாகத்திற்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.

'சலார்' படம் பிரசாந்த் நீலின் சினிமாட்டிக் யுனிவர்சல் படமாக இருக்கும் பட்சத்தில், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்சல் படங்களுக்கு, ரசிகர்களிடம் இருக்கும் பலமான எதிர்ப்பார்ப்பைப் போல, கன்னட மொழியில் இருந்தும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சினிமாட்டிக் யுனிவர்சல் படம் ஒன்று தரமாக தயாராகப் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்