மலையேற்ற பிரியர்களை குஷிப்படுத்தும் இடங்கள்

மகாராஷ்டிராவில் உள்ள லோனாவாலாவிற்கு அருகில், ராஜ்மச்சி அமைந்துள்ளது. பசுமையான காடுகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளின் வழியாக நடந்து செல்லும் அனுபவம் அலாதியானது. மழைக்காலத்தில் இந்த பாதை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

Update: 2023-06-18 09:38 GMT

நாட்டின் பல பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்து மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சூரிய கதிர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் வியர்வை மழையில் நனைந்த நிலை மாறி குளிர்ச்சியான மழைச்சாரலில் நனைந்து மகிழும் சூழலை யார் தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் மலையேற்ற பயணம் மேற்கொள்பவர்கள் இந்த தருணத்திற்காகவே காத்திருந்திருப்பார்கள். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் பசுமையான நிலப்பரப்புகளையும், பொங்கி வழியும் நீர்வீழ்ச்சிகளையும், பரவசமான மலையேற்ற சாகச அனுபவங்களையும் தரும் இடங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு....

மலர் பள்ளத்தாக்கு:

'பிளவர்ஸ் வேலி' என்று அழைக்கப்படும் இந்த தேசிய பூங்கா உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கு இமயமலை அடிவார பகுதியில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகுற மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு மழைக்காலத்தில் பூக்கும் பூக்கள் மனதை பரவசப்படுத்தும். அந்த இடத்திற்கு செல்லும் மலையேற்ற பயணமும், அங்கு மலர்ந்திருக்கும் பூக்களும் இனிமையான இயற்கை சூழலை உணர வைக்கும்.

இந்த தேசியப் பூங்காவில் பல வகையான கரடிகள், பனி சிறுத்தைகள், நீல நிற ஆடுகள் உட்பட பல அரிதான விலங்கு களை காணலாம். இயற்கை அதன் சாயலில் இருந்து மாறாமல் அழகுற காட்சி அளிக்கும் இந்த இடம் யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

துத்சாகர் நீர்வீழ்ச்சி:

இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகிலுள்ள பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோவாவில் இருந்து வழிந்தோடும் மண்டோவி ஆற்றில் இந்த அருவி பிறப்பெடுக்கிறது. கோடை காலத்தில் இந்த அருவி சாதாரணமாக தோற்றமளிக்கும்.

மழைக்காலத்தில் கண்கவர் காட்சியாக மாறிவிடும். பசுமையான காடுகளின் வழியாக மலையேற்றம் செய்தால் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். எனினும் இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலில் இருந்து நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக அமையும்.

ஹம்ப்டா பாஸ்:

மலையேற்ற பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மலை வாழிடம் அழகான நிலப்பரப்பு, பசுமையான பள்ளத்தாக்குகள், பனி மூடிய சிகரங்கள் என வித்தியாசமான சூழலை கொண்டது.

இந்த மலையேற்ற பயணம் ஒரு நாளில் முழுமை அடையாது. நான்கு நாட்கள் வரை நீடிக்கும். அவரவர் விருப்பத்தை பொறுத்து இந்த மலையேற்ற பயணத்தை ரசித்து அனுபவிக்கலாம்.

செம்ப்ரா சிகரம்:

இது கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மலைகளுள் ஒன்று. வயநாடு மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் (6,890 அடி) உயரத்தில் உள்ள இது தமிழகத்தின் நீலகிரி மலைகளையொட்டி அமைந்துள்ளது.

இந்த மலையேற்ற சிகரத்திற்கு பயணிப்பது மனதை மயக்கும் அனுபவத்தை கொடுக்கும். பருவ மழை தூறலும், கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் பசுமையும் அந்த இடத்தை சொர்க்கபுரியாக மாற்றி இருக்கின்றன.

ஆகும்பே:

கர்நாடக மாநிலத்திலுள்ள சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இது 'தென்னிந்தியாவின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பருவமழை காலத்தின்போது அதிக மழை பொழியும் இடமாக விளங்குகிறது. பல்லுயிர்களால் சூழப்பட்ட நிலப்பகுதியாக உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஈரப்பதமான பகுதியில் அமைந்துள்ளது. இதன் புவியியல் அமைப்பு அழகிய இயற்கைக்காட்சிகளால் சூழப்பெற்றது. மலையேற்றத்திற்கு ஏற்றது. மேலும், இந்த பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. அதனால் மலையேற்றம் செய்பவர்களுக்கு உற்சாகமான சூழலை கொடுக்கும்.

குத்ரேமுக்:

இது கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள மலைத்தொடராகும். கர்நாடகாவின் 2-வது மிக உயர்ந்த சிகரமாகவும் இது விளங்குகிறது. அடர்ந்த காடுகள், மழைக்காலங்களில் பனி மூடிய பாதைகள் என இங்கு மலையேற்ற பயணம் செய்வது திரிலிங்கான அனுபவத்தை கொடுக்கும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது. உலகளவில் பல்லுயிர் பெருக்கத்திற்காக அடையாளம் காணப்பட்ட 34 இடங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்