தாயின் கஷ்டத்தை விரட்டிய சிறுவனின் பரிசு

தாய்க்கு உதவும் நோக்கத்தில் 14 வயது சிறுவன் கிணறு தோண்டி இருக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.;

Update:2023-05-07 19:10 IST

கோடை காலம் மட்டுமின்றி மற்ற சமயங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் நிலவுகிறது. அதிலும் கடற்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடும் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அங்கு பெரும்பாலும் கடலின் வீரியத்தால் தண்ணீரில் உப்பின் தாக்கம் அதிகம் கலந்திருக்கும் என்பதால் அன்றாட தேவைக்கு பயன்படுத்துவதிலும் சிரமம் இருக்கிறது.

அப்படி தண்ணீருக்காக தினமும் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு தண்ணீரை சுமந்து வரும் தாய்க்கு உதவும் நோக்கத்தில் 14 வயது சிறுவன் கிணறு தோண்டி இருக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பால்கர் தாலுகாவில் உள்ள கெல்வே பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் பெயர், பிரணவ் ரமேஷ் சல்கர். அருகில் உள்ள தவங்கேபாடா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்கிறார்கள்.

தாவாங்கேபாடா பகுதியில் வாரத்தில் மூன்று நாட்கள் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த தண்ணீரைதான் அந்த பகுதி மக்கள் குடிநீருக்கும், வீட்டு தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். பிரணவ் வசிக்கும் கிராமம் கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதனால் அங்கு பெரும்பாலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதில்லை.

நிலத்தடி நீரில் உப்புவின் வீரியம் அதிகம் இருக்கும் என்பதால் அந்த நீரை பருக முடியாது. குடிநீருக்கு மட்டுமின்றி அன்றாட தேவைக்கும் போதுமான தண்ணீர் இல்லாமல் பிரணவின் தாயார் சிரமப்பட்டு வந்தார். விவசாய கூலிவேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புபவர் தினமும் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தார். விவசாய வேலைபார்த்துவிட்டு உடல் களைப்படைந்து சோர்வாக வீடு திரும்பும் தாயார் மீண்டும் தண்ணீருக்காக நடந்து சென்று தண்ணீரை சுமந்து வந்து கஷ்டப்படுவதை பார்த்து பிரணவ் வேதனை அடைந்தார்.

தாயாரின் சிரமத்தை போக்குவதற்கு வீட்டு அருகிலேயே கிணறு தோண்ட முடிவு செய்தார். அதற்கு தந்தையும் அனுமதி அளிக்கவே கிணறு தோண்டும் பணியை தொடங்கி இருக்கிறார். சுமார் 2.5 அடி விட்டம் கொண்ட அந்த கிணற்றை 5 நாட்களில் தோண்டி முடித்திருக்கிறார். சில அடி தூரம் தோண்டியபோது பாறை குறுக்கிட்டுள்ளது. அதனால் பிரணவ் எதிர்பார்த்தபடி எளிதாக கிணறு தோண்ட முடியவில்லை. தனது தந்தையின் உதவியை நாடி இருக்கிறார். அவர் பாறையை உடைத்து கல் அடுக்குகளை அப்புறப்படுத்தி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு பிரணவ் தானே ஏணி ஒன்று தயார் செய்து கிணற்றுக்குள் இறங்கி வேலையை தொடர்ந்து இருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக 15 மீட்டர் ஆழம் வரை தோண்டி இருந்தபோது ஊற்றுநீர் பெருக்கெடுத்து வந்திருக்கிறது. அந்த நீர் மளமளவென நிரம்பி விட்டது. அதனால் அவர் கிணறு தோண்டும் வேலை எளிமையாகிவிட்டது. இன்னொரு அதிர்ஷ்டமும் பிரணவ்வுக்கு கைகூடி இருக்கிறது. பொதுவாக கடலோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் நீர் உவர்ப்பு தன்மையுடன் இருக்கும். அதில் உப்பு சுவை கலந்திருக்கும். அந்த தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அந்த பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினாலும் அதில் இருந்து பெறப்படும் நீரில் அதிக அளவு கனிமம் மற்றும் உப்பு கலந்துள்ளது. ஆனால் பிரணவ் தோண்டிய கிணற்றில் இயல்பாகவே ஊற்று நீர் வந்ததால் உப்பின் தன்மை குறைவாக இருக்கிறது. 20 மீட்டருக்கு மேல் தோண்டியிருந்தால் தண்ணீர் உவர்ப்பாக இருந்திருக்கும்.

அதற்கு முன்பாகவே ஊற்று நீர் பெருக்கெடுத்துவிட்டது. அந்த நீரை பிரணவ்வின் தாயார் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறார். அந்த நீர் பருகுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. அதனால் பிரணவ் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். தண்ணீர் எடுப்பதற்கு கஷ்டப்பட்ட தாயாருக்கு கிணறு தோண்டி அதை பரிசாக வழங்கி இருப்பதை கிராம மக்கள் பாராட்டி இருக்கிறார்கள். பஞ்சாயத்து நிர்வாகமும் பிரணவ்வை பாராட்டி 11 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்