கனரக வாகனங்களை இயக்கும் 'காவல் ராணி'

Update:2023-04-27 22:56 IST

எங்களால் முடியும் என்று... இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஆனால் கனரக வாகனங்களை இயக்குவதற்கு இன்னும் பலர் முன்வருவதில்லை. ஆனால் காவல்துறையில் சிங்கப்பெண்ணாய், ஒரு பெண் காவலர் போலீஸ் ஜீப், கார், கலவரக்காரர்களை ஒடுக்க பயன்படும் தண்ணீர் பீரங்கி வாகனம் மற்றும் கனரக வாகனங்களையும் ஓட்டி அனைவரையும் வியக்க வைக்கிறார். இவர் கோவை காவல்துறையில் கனரக வாகனங்களில் வலம் வரும் சிங்கப்பெண்ணாக திகழ்கிறாார்.

ஆம்...!, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செல்வராணி (வயது 31) என்பவர்தான் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர். இவருடைய பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம். திருமணம் செய்துகொடுத்தது தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணி கிராமம். இவர் தற்போது கோவை மாநகர போலீசின் கனரக வாகனங்களை இயக்கி அசத்துகிறார்.

போலீஸ் வேன் ஒன்றின் டிரைவர் இருக்கையில் அமா்ந்துகொண்டு புறப்பட தயாராக இருந்த செல்வராணி, நம்முடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

போலீஸ் பணியில் எப்போது சேர்ந்தீர்கள்?

நான் முதல் முறையாக கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி போலீஸ் பணியில் சேர்ந்தேன். மதுரை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளியில் தான் முதல்முறையாக போலீஸ் பணிக்கான பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு தற்போதைய கோவை மாநகர போலீஸ் கமிஷனா் பாலகிருஷ்ணன் சார் தான் பயிற்சி கொடுத்தார். பெண் போலீசார் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும் என்று தைரியத்தை கொடுத்தார்.

அவரை ரோல் மாடலாக கொண்டு தான் நான் இதுவரை சிறப்பாக பணியாற்றி வருகிறேன். நான் போலீஸ் ஓட்டுனராக பயிற்சி பெற்றதும் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான். மதுரையில் பயிற்சியை முடித்துக்கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி திகார் சிறையில் பணியாற்றினேன். அதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனதால் சென்னை ஆயுதப்படை பிரிவுக்கு வந்தேன். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு கோவை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறேன்.

ஓட்டுனராக ஆர்வம் வந்தது எப்படி?

பள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில் எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது. ஆனால் சிறுவயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. அது நிறைவேறி உள்ளது. இதையடுத்து டெல்லியில் பணியாற்றியபோது சக ஆண் போலீகாரர்கள் ஜீப், வேன், வஜ்ரா வாகனம் என்று அனைத்து வாகனத்தையும் இயக்குவதை பார்ப்பேன். அப்போது எனக்குள் நாமும் இந்த வாகனங்களை இயக்கி பெண் டிரைவரானால் என்ன? என்று தோன்றியது. ஆனால் எனது முதல் டிரைவிங் 2017-ம் ஆண்டு கோவையில் தான் அரங்கேறியது.

டெல்லியில் பணியாற்றியபோது ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்து வந்து தூத்துக்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து அதை பெற்றேன். தற்போது கனரக வாகனங்களை இயக்குவதற்காக கோவையில் ஹெவி எனப்படும் ஓட்டுனர் உாிமம் பெற இருக்கிறேன்.

உங்களது படிப்பு பற்றி?

கல்லூரியில் பட்டப்படிப்பை படித்துவிட்டு போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது கனவு. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக 8-ம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டேன். வேலையில் ஈடுபட்டாலும் எனக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் போலீஸ் வேலைக்கு தேர்வானேன். பின்னர் டெல்லியில் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இயக்கம் மூலம் பி.காம், எம்.காம் படிப்பை முடித்தேன்.

போலீஸ் வாகனங்களை இயக்கும் அனுபவம் எப்படி உள்ளது?



நான் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முன்பு கார் உள்ளிட்ட வாகனங்களை நன்றாக ஓட்டினேன். ஆனால் முதல்முறையாக போலீஸ் வாகனத்தை இயக்கும்போது எனக்குள் சிறிது பயம் இருந்தது. 10 நாட்கள் தான் பயிற்சி எடுத்தேன். அதன்பிறகு நானே போலீஸ் வாகனத்தை மிகவும் தைரியமாக இயக்கினேன். இதனால் பயம் என்பது நாட்கள் செல்லச்செல்ல பனிபோல் காணாமல் போனது. மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் என்னை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது கூடுதல் உந்துசக்தியாக இருக்கிறது.

உங்களை சக ஆண் போலீஸ் வாகன டிரைவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

தற்போது கோவையில் நான் மட்டுமே போலீஸ் பெண் டிரைவராக பணியாற்றி வருவதால் என்னை சக ஆண் போலீஸ் டிரைவர்கள் 'சிங்கப்பெண்ணே' என்று அன்போடு அழைக்கிறார்கள். மேலும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து எனக்கு மிகுந்த தைரியத்தை கூறி இந்த அளவுக்கு என்னை உயர்த்தி உள்ளார்கள். போலீஸ் வாகனத்தை இயக்கிக்கொண்டு வெளியே செல்லும் போது பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவிக்கிறார்கள். சிக்னல்களில் நிற்கும்போது சிலர் வாகனத்தை விட்டு இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்து செல்கிறார்கள்.

எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானால் எப்படி சமாளிப்பீர்கள்?

பஸ், வேன், கார், ஜீப் போன்ற வாகனங்கள் பஞ்சரானால் எப்படி ஸ்டெப்பினியை கழற்றி மாற்றுவது என்ற பயிற்சியை ஆயுதப்படை பிரிவில் அளித்து உள்ளார்கள். இதுதவிர சிறிய சிறிய அளவிலான ரிப்பேர் ஏதேனும் ஏற்பட்டால் அதை சரிசெய்யவும், தினமும் ஆயில், தண்ணீர் சரிபார்க்கவும் பயிற்சி பெற்று உள்ளேன். இதுவரை நான் வாகனம் ஓட்டியபோது பஞ்சரானதோ, ரிப்பேர் ஆனதோ நடந்தது இல்லை.

மற்ற பெண் போலீசாருக்கு சொல்ல விரும்புவது என்ன?

பெண்கள் திறமையானவர்கள். ஆனால் அவர்கள் முதல் அடி எடுத்து வைப்பதுதான் கஷ்டம். தற்போது நான் தைரியமாக போலீஸ் வாகனங்களை இயக்க வந்து உள்ளதால் என்னைப்பார்த்து 4 பேர் வருவார்கள். அவர்களை பார்த்து 40 பேர் வரை வாகனம் இயக்க வருவார்கள்.

போலீஸ் துறையில் காலம் காலமாக ஆண்கள் மட்டுமே போலீஸ் ஜீப், கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுகின்றனர். தற்போது அரசு, பெண் போலீசாருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அத்துடன் கோவை மாநகரில் தற்போது பெண் போலீசாரின் 50-வது ஆண்டு விழாவையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் 30 பெண் போலீசாருக்கு முதல் கட்டமாக போலீஸ் வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு, பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியை பெண் போலீசாா் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பயிற்சி மூலம் பெண் போலீசாரும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதை காணும் மற்ற பெண் போலீசாருக்கும் டிரைவிங் மீது ஆர்வம் ஏற்படும்.

திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்களேன்?



எனது சிறுவயதில் தந்தை இறந்துவிட்டாா். தாயார் மட்டும் உள்ளார். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. கணவர் சதீஷ். எங்களுக்கு 7 வயதில் ஸ்ரீயாஸ், 4 வயதில் ஸ்ரீஜன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவர் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

உங்களிடம் பிடித்தது என்ன?

நான் புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதும் என்னிடம் பிடித்ததாகும்.

ஒரே நாளில் 1000 கிலோ மீட்டர் வரை கார் இயக்கியது எப்படி?

நான் சொந்த ஊருக்கு செல்வதற்காக எனது சொந்த காரில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவந்தேன். ஒரே நாளில் 1,000 கிலோ மீட்டர் வரை காரை ஓட்டியது எனது கணவர் உள்பட சக காவலர்களை பிரமிக்க வைத்தது.

எனக்கு போலீஸ் வாகனத்தை இயக்கிய அனுபவம் இருந்ததால் 1,000 கிலோமீட்டர் வரை காரை இயக்கியது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஏற்கனவே நான் வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைதுசெய்ய போலீஸ் ஜீப்பில் கோவையில் இருந்து திருப்பூருக்கு பல முறை சென்று வந்து உள்ளேன்.

Tags:    

மேலும் செய்திகள்