அணிலின் தாகம்

தாகத்தோடு அமர்ந்திருக்கும் அணிலுக்கு பாட்டிலில் ஒரு நபர் தண்ணீர் வழங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

Update: 2023-06-18 09:28 GMT

கோடை காலம் முடிவுக்கு வந்தாலும் அதன் சுவடுகள் மறையவில்லை. பல இடங்களில் வெப்ப தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வறண்ட பூமியில் வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். பருவ காலம் மாறினாலும் அங்கு வறட்சியின் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும்.

அங்கு வாழும் மக்கள் தண்ணீருக்கே கஷ்டப்படும் நிலை இருக்கும். அப்படி இருக்கையில் அங்கு வசிக்கும் உயிரினங்களில் நிலை பரிதாபம்தான். ஒரு மரத்தில் தாகத்தோடு அமர்ந்திருக்கும் அணிலுக்கு பாட்டிலில் ஒரு நபர் தண்ணீர் வழங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

வன அதிகாரி சுசந்தா நந்தா அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு நபர் தண்ணீர் பாட்டிலுடன் மரத்தை நெருங்குகிறார். மரக்கிளையில் ஒரு அணில் சோர்வாக இருக்கிறது. அந்த நபர் தண்ணீர் கொண்டு செல்வதை பார்த்ததும் வேகமாக முன்னங்கால்களை நீட்டி தண்ணீர் பாட்டிலை பிடித்துக்கொள்கிறது.

பின்பு தண்ணீரை வேகவேகமாக பருக தொடங்குகிறது. சில விநாடிகளுக்கு பிறகு தண்ணீரை போதுமான அளவுக்கு அணில் பருகி இருக்கும் என்று நினைத்து அந்த நபர் பாட்டிலை எடுக்கிறார். ஆனால் அணிலோ முன்னங்கால்களால் பாட்டிலை இறுக பற்றிக்கொண்டு தனக்கு தண்ணீர் வேண்டும் என்பதுபோல் பாவனை செய்கிறது.

இதையடுத்து மீண்டும் தண்ணீர் பாட்டிலை அதன் அருகில் கொண்டு செல்கிறார். அது தாகம் தீராத அளவுக்கு மீண்டும் வேகவேகமாக பருகிறது. அந்த அணிலின் செய்கையும், தண்ணீருக்காக ஏங்கிய நிலைமையும் வீடியோ பார்ப்பவர்கள் மனதை வருத்திவிட்டது.

தாகத்தில் தவித்த அணிலுக்கு உதவிய கருணை உள்ளம் கொண்டவருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். கடும் வெயிலில் வாடும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அனைவரும் எந்த அளவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்சிப்படுத்திவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்