கோடையில் கொசுக்கடித்தால்...
டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.;
வெப்பம் மிகுந்த கோடை கால மாதங்களிலும் கொசுக்கள் வீட்டுக்குள் படையெடுக்கக்கூடும். கொசு கடித்தால் சருமத்தில் அரிப்பு, வலி, சருமம் சிவப்பு நிறத்துக்கு மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். அதன் குளிர்ச்சித்தன்மை கொசு கடித்த இடத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவும். வீக்கத்தையும் குறைக்கும். ஐஸ்கட்டியை சருமத்தில் நேரடியாக வைக்கக்கூடாது. அதனை துணியில் பொதிந்து கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுப்பதுதான் சரியானது.
கொசு கடித்தால் ஏற்படும் அரிப்பு, வீக்கத்தை போக்க கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். கற்றாழை இலையில் இருக்கும் ஜெல்லை எடுத்து கொசு கடித்த இடத்தில் நேரடியாக தடவலாம். கொசுக்கடியின் வீரியத்தை குறைக்க உதவும்.
தேனும் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இயற்கை கிருமி நாசினியாகவும் செயல்படக்கூடியது. கொசு கடித்த இடத்தில் தேனை தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து அப்புறப்படுத்திவிடலாம். மேலும் கொசு கடிக்கு பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். அதன் இயற்கையான கார குணங்கள் சருமத்தின் பி.எச் அளவை சமநிலைப்படுத்த உதவும். எரிச்சல் மற்றும் அரிப்புகளை நீக்க உதவும். பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கொசு கடித்த இடத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
ஓட்ஸ்சில் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்பும் கொசு கடித்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் அரிப்புகளை குறைக்கும். சிறிதளவு ஓட்ஸுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொசு கடித்த இடத்தில் தடவி விட்டு, 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
டீ பேக்குகளையும் கொசு கடிக்கு பயன்படுத்தலாம். அதில் இருக்கும் டானின்கள் வீக்கத்தைக் குறைக்க உதவும். டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
கொசு கடித்தால் ஏற்படும் அரிப்பு மற்றும் வீக்கத்தை போக்க இயற்கை முறையில் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. அவை கொசுக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்தக்கூடியவை.