விமான பயணத்தை தவிர்த்து உலகை வலம் வரும் ஜோடி

ஜோஸ்வா கியான் - சாரா மோர்கன் தம்பதியர் தனித்துவமானவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விமான பயணத்தை அறவே தவிர்த்து மற்ற போக்குவரத்துகளை பயன்படுத்தியே 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.

Update: 2023-05-02 15:17 GMT

உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் சுற்றுலா திட்டங்களை வடிவமைக்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் தாண்டி எளிதில் செல்வதற்கு சவுகரியமானது விமான பயணம்தான். ஆனால் அதுவே பயணத்தின் பெரும் பகுதி பணத்தை ஆக்கிரமித்துக்கொள்வதால் சிலர் மாற்று வழிமுறைகளை தேர்வு செய்கிறார்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள்தான் அவர்களின் விருப்ப தேர்வாக இருக்கும்.

பொது போக்குவரத்தை சார்ந்திருந்து உற்சாகமாக வலம் வரும் ஜோடிகளும் இருக்கிறார்கள். அவர்களுள் ஜோஸ்வா கியான் - சாரா மோர்கன் தம்பதியர் தனித்துவமானவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விமான பயணத்தை அறவே தவிர்த்து மற்ற போக்குவரத்துகளை பயன்படுத்தியே 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். விமானங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதற்கான காரணம் என்கிறார்கள்.

ஜோஸ்வா-சாராவின் பூர்வீகம் இங்கிலாந்து. 2017-ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் இருந்து இங்கிலாந்துக்கு செல்வதற்கு விமானத்தில் ஏறி இருக்கிறார்கள். ''அதுதான் எங்களின் கடைசி விமான பயணமாக அமையும் என்று நினைக்கவேவில்லை. விமானத்தில் ஏறி அமர்ந்ததும் வான் வெளியில் இருந்து இயற்கையை ரசித்தோம். அப்போது விமான எரிபொருட்கள் உமிழும் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிந்தித்தோம். இனி விமான பயணத்தை தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். அதனை திட்டவட்டமாக பின்பற்ற வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் எங்களின் ஒவ்வொரு பயணமும் விமானம் அல்லாத பயணமாக மாறியது'' என்கிறார்கள்.

6 ஆண்டுகளாக இந்த தம்பதியர் ஒருமுறை கூட விமானத்தில் செல்லவில்லை. ஆனால் உலகின் பல்வேறு இடங்களுக்கு பயணித்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிள், ரெயில், படகு போன்ற போக்குவரத்துகளை நாடி இருக்கிறார்கள். பல இடங்களுக்கு லிப்ட் கேட்டும் சென்றிருக்கிறார்கள்.

இந்தோனேசியா, இலங்கை, பாலி உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். இவர்களின் உலக சுற்றுப்பயணம் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. விமானத்தை பயன்படுத்தாததால் எந்தவொரு அசவுகரியத்தையும் எதிர்கொள்ளவில்லை என்கிறார்கள். எப்போதும் போலவே தங்கள் பயணம் இனிமையாக அமைந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இருவருமே சாகச பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். ''இயற்கையின் மீதான எங்களின் அன்பே உலகின் எல்லா இடங்களையும் பார்வையிடும் ஆவலை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது'' என்கிறார்கள்.

பயணம் சுமுகமாக தொடருவதற்கு ஏதுவாக 8 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவு முறைக்கு மாறி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்