டெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) அமைப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2023-04-21 14:15 GMT

இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களுள் ஒன்றான டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் கடந்த 2022-ம் ஆண்டில் உலகின் பரபரப்பான 10 விமான நிலையங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. 2022-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 கோடியே 94 லட்சத்து 90 ஆயிரத்து 74 பயணிகளை டெல்லி விமான நிலையம் கையண்டுள்ளது. இதன் மூலம் பரபரப்பான 10 விமான நிலையங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது 10-வது இடத்தில் உள்ள பாரிஸ் விமான நிலையம் 5.7 கோடி பயணிகளை கையாண்டுள்ளது.

இது 2021-ம் ஆண்டு 31-வது இடத்துக்கு சரிந்திருந்தது. 8-வது இடத்தை 6.2 கோடி பயணிகளுடன் இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் பிடித்துள்ளது. 2021-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் 51-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் (6.4 கோடி பயணிகள்) 7-வது இடத்தையும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் (6.5 கோடி) 6-வது இடத்தையும், 6.6. கோடி பயணிகளுடன் துபாய் விமான நிலையம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு துபாய் விமான நிலையம் 27-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையம் 6.8 கோடி பயணிகளுடன் 4-வது இடத்தையும், டென்வர் விமான நிலையம் (6.9 கோடி) 3-வது இடத்தையும், டாலஸ் போர்ட் வொர்த் விமான நிலையம் 7.3 கோடி பயணிகளுடன் 2-வது இடத்தையும், அட்லாண்டா விமான நிலையம் 9.4 கோடி பயணிகளுடன் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் 10 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்கள் அமெரிக்காவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்