எண்ணங்களை வளமாக்கும் வண்ணக் கோலங்கள்

கோலம் போடுவதில் வாழ்க்கை ரகசியமும் உள்ளடங்கி இருக்கிறது. வளைந்து, வளைந்து கோலங்கள் போடுகிறோமே! போட்டி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பெண்கள் தங்கள் கைவண்ணத்தை புள்ளிகளாக தரையில் முத்தமிட்டு கோலத்திற்கு அழகுஉருவம் கொடுக்க தொடங்கிவிட்டனர்.;

Update: 2023-05-07 13:14 GMT

''கோலம் என்பது அழகும், மரபும் இரண்டற கலந்த கலை. வாசல் தேடி வந்தவரை வரவேற்கும் மங்கல சின்னம். காலத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு சங்க காலங்களிலேயே தமிழ் இலக்கிய நூல்களில் கோலங்களின் மரபு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கோலம் போடுவதில் வாழ்க்கை ரகசியமும் உள்ளடங்கி இருக்கிறது. வளைந்து, வளைந்து கோலங்கள் போடுகிறோமே! காரணம், மனிதா நீ நேராகவே நிமிர்ந்தே போக முடியாது. எங்கு வளைந்து கொடுக்க வேண்டுமோ அங்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதை சொல்வதுதான் கோலத்தின் சிறப்பு.

இரட்டை கோடுகளில் கோலம் போடுவதுதான் சுபம் என்றும் சொல்வார்கள். அப்படி நேரான கோலம் போல் நேர்கோட்டில் சென்று வாழ்க்கையில் ஒருவர் நேர்மையாகவும் இருந்து வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்தும் கொடுத்தால் இந்திய பாரம்பரியத்தின் பழமை அடையாளமான கோலம் எப்படி பெருமைப்படுகிறதோ அதுபோலவே அவருடைய வாழ்க்கையும் பெருமைப்படும்'' என்று கோலத்தை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, கோலப்போட்டியில் பங்கேற்க வந்தவர்களை உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார், வில்லுப்பாட்டு கலைஞர் பாரதி திருமகன்.

போட்டி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பெண்கள் தங்கள் கைவண்ணத்தை புள்ளிகளாக தரையில் முத்தமிட்டு கோலத்திற்கு அழகுஉருவம் கொடுக்க தொடங்கிவிட்டனர். அடுத்த அரை மணி நேரத்திற்குள் திரும்பிய திசையெல்லாம் கண்கவர் அணிவகுப்புகளாக விதவிதமான கோலங்கள் மிளிர தொடங்கிவிட்டன. கோலத்தின் பிரதான நிறமான வெண்மையுடன் வண்ண வண்ண நிறங்களும் ஒன்றிணைந்து கோடை வெயிலுக்கு இதமாக கண்களை குளிர வைத்துவிட்டன.

புள்ளி கோலம், சிக்கு கோலம், பச்சரிசி மாவு கோலம், ரங்கோலி கோலம், புள்ளி, சிக்கு, ரங்கோலி ஆகியவை ஒருசேர கலந்த கோலம், 3டி கோலம், பூக்கோலம், உப்பு கோலம் உள்பட கோலங்களின் அத்தனை வகைகளையும் ஒருசேர காட்சிப்படுத்தி அசத்திவிட்டார்கள். இப்படியெல்லாம் கோலம் போட முடியுமா? என கண்களுக்கு விருந்துபடைக்கும் விதத்தில் நுட்பமான வேலைப்பாடுகளாலும் கோலங்களை ஜொலிக்க வைத்துவிட்டார்கள்.

வி.ஜி.பி.யும், தினத்தந்தியும் இணைந்து நடத்திய இந்த கோலப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் சிக்கு கோலமே வென்றது. கோலத்தின் மரபையும், அழகையும் ஒருசேர பிரதிபலிக்கும் வகையில் அவற்றை அற்புதமாக காட்சிப்படுத்தி இருந்தார்கள், போட்டியாளர்கள். முதல் பரிசை பரிசை வென்றவர், சென்னையை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்த சுமதி. இவர் சிக்கு கோலத்தில் தேர் போன்ற கட்டமைப்பை காட்சிப்படுத்தி இருந்தார்.

''எனக்கு சிக்கு கோலம் போடுவது ரொம்ப பிடிக்கும். இந்த கோலத்தை அதிகமாக போடும் பெண்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சுலபமாக தீர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். கோலங்களில் எத்தனை வகைகள் இருந்தாலும் புள்ளி கோலத்திற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அது நம் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்தது. புள்ளி வைத்துதான் கோலத்தை தொடங்க வேண்டும். கோல கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பெண்களுக்கும் உண்டு. தங்கள் மகள்களை கோலம் போட்டு பழகுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இரண்டாவது பரிசை வென்ற சிக்கு கோலத்தை சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த ரமணி வடித்திருந்தார். இவர் தமிழ் பாரம்பரிய கோல மரபு மாறாமல் நேர்த்தியான வலை பின்னல் போல் அழகுற தீட்டி இருந்தார். பூக்களால் அழகுபடுத்தி நிறைவு செய்திருந்தார்.

''கோலங்களில் சிக்கு கோலம் போடுவது சவாலானது. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்கும் இடையே தொடர்பு இருக்காது. எங்கு புள்ளி தொடங்கி எங்கு முடியும் என்று தெரியாது. அதனால் இதனை போடுவது சிக்கலானது என்பதால் சிக்கு கோலம் என்கிறார்கள். சிறிது கவனம் சிதறினாலும் கோல வரிசை மாறிவிடும். தவறு நடந்துவிட்டால் அதனை மாற்ற முடியாது. என்ன தவறு செய்திருக்கிறோம் என்பது பளிச்சென்று தெரிந்துவிடும். அதனால் இந்த கோலத்தை போடுவது சிரமமானது.

இந்த கோலத்தை போட தொடங்கிவிட்டால் கவன சிதறல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக் காது. கோலத்தை தவறில்லாமல் போட்டு முடிக்க வேண்டும் என்ற எண்ணமே கோலத்தை அழகுபடுத்தி கொடுத்துவிடும். இந்த கோலத்தை போடுபவர்கள் மனதளவில் தைரியமானவர்களாகவும், தெளிவான சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எந்தவொரு பிரச்சினைகளையும் சாதுரியமாக எதிர்கொள்வார்கள். பெண்கள் கட்டாயம் சிக்கு கோலம் போடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது சிறந்த மன பயிற்சியாக அமையும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும்'' என்கிறார்.

மூன்றாவது பரிசை வென்ற சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த வெள்ளையம்மாளின் சிக்கு கோலம் தமிழ் கோல மரபை அச்சு அசலாக பிரதிபலிக்க செய்தது. பெண்கள் ஏன் கோலம் போட வேண்டும் என்பதற்காக காரணத்தை அவர் சொல்ல கேட்போம்.

''ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை விட கோலம் போடுவது எளிதானது. உடற்பயிற்சி செய்வதற்கு உடலை வளைத்து, நெளித்து கடுமையாக பயிற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். கோலம் போடுவதற்கும் உடலை வளைத்து, நெளிக்க வேண்டியிருக்கும் என்றாலும் இயல்பாகவே உடல் வளைந்து கொடுக்கும். ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டும்தான் வலியை உணர முடியும்.

உடற்பயிற்சி அப்படிப்பட்டதல்ல. அதற்கென்று நேரம் ஒதுக்கி தினமும் பயிற்சி பெற வேண்டும். கோலத்தை சில நிமிடங்கள் போட்டாலே அதுவே சிறந்த உடற்பயிற்சியாக அமைந்துவிடும். உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சிறந்த பயிற்சியாக மாறிவிடும். ஏதாவதொரு மனக்குழப்பத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதற்கு தோன்றாது. ஆனால் கோலம் அப்படிப்பட்டதல்ல. அதனை போட தொடங்கிவிட்டாலே கவனம் முழுவதும் புள்ளியில் குவிந்துவிடும். சில நிமிடங்களிலேயே மனம் தெளிந்த நீரோடைபோல் மாறிவிடும்.

அந்த சமயங்களில் சிக்கு கோலம் சிறந்த தேர்வாக இருக்கும். எங்கு புள்ளி வைத்து தொடங்குகிறோமோ அங்குதான் முடிக்க வேண்டும் என்பதால் கவனம் முழுவதும் கோலத்திலேயே பதிந்துவிடும்'' என்பவர் மார்கழி மாதத்தில் கோலம் போடும் மரபு பின்பற்றப்படுவதின் பின்னணியில் அறிவியல்பூர்வமான உண்மை இருப்பதை சுட்டிக்காட்டினார்.

''சிறு வயது முதலே நான் மார்கழி மாதத்தில் என் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட பழகிவிட்டேன். நடுவர் கோலத்தின் சிறப்புகளை பற்றி கூறும்போது மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் மண்டலம் பரிசுத்தமாக இருக்கும். அந்த சமயத்தில் ஆக்சிஜன் மாசற்று தூய்மையாக இருக்கும் என்று கூறினார். அதனை நான் உணர்வுப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் பெண்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது அவர்களின் ஆரோக்கியம் இன்னும் மேம்படும். ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். கோலம் போடுவது மனதை ஒருமுகப்படுத்தும் கலை என்பதால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையேயுமே பாதுகாக்கும்'' என்றார்.

போட்டி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பெண்கள் தங்கள் கைவண்ணத்தை புள்ளிகளாக தரையில் முத்தமிட்டு கோலத்திற்கு அழகுஉருவம் கொடுக்க தொடங்கிவிட்டனர். புள்ளி கோலம், சிக்கு கோலம், பச்சரிசி மாவு கோலம், ரங்கோலி கோலம், புள்ளி, சிக்கு, ரங்கோலி ஆகியவை ஒருசேர கலந்த கோலம், 3டி கோலம், பூக்கோலம், உப்பு கோலம் உள்பட கோலங்களின் அத்தனை வகைகளையும் ஒருசேர காட்சிப்படுத்தி அசத்திவிட்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்