டெல்லியில் உருவாகும் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா
ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா, உலகின் இரண்டாவது பெரிய பூங்கா அமைந்துள்ள இடம் என்ற சிறப்பை டெல்லி பெறப்போகிறது.;
பதர்பூரில் மிகப் பிரமாண்டமான பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவுக்கு 'சுற்றுச்சூழல் பூங்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூங்காவை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் சிறப்பம்சங்கள் உங்கள் பார்வைக்கு..
* இந்த பூங்கா 885 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
* அதன் கட்டுமானத்திற்கு சுமார் ரூ.450 கோடி செலவிடப்படுகிறது.
* டெல்லி மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முனைப்போடு ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவாக இது கட்டப்பட்டு வருகிறது.
* தேசிய அனல் மின் நிறுவனத்தின் (என்.டி.பி.சி) கட்டுப்பாட்டில் இந்த இடம் இருந்தது. அதன் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டன. அது சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுத்தது. இதையடுத்து 2018-ம் ஆண்டு அந்த இடம் மூடி சீல் வைக்கப்பட்டது. அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி பசுமையான இடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அது இப்போது உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்காவாக உருவெடுத்துள்ளது.
* இந்த பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை கொண்ட சுமார் 76 ஆயிரம் மரங்கள் நடப்படுகின்றன.
* 3 லட்சத்துக்கும் மேற்பட்ட செடி, கொடிகள் மற்றும் மலர் செடிகள் நடப்பட்டு வருகின்றன.
* அதிக அளவில் மரம், செடி, கொடிகள் நடப்படுவதால் பல்வேறு அமைப்புகள் இந்த பூங்கா திட்டத்தில் இணைந்துள்ளன. டெல்லி-மும்பை திட்டத்தின் ஒரு பகுதியாக, 25 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* இந்த பூங்காவில் நான்கு நீர்நிலைகளும் உருவாக்கப்படுகின்றன. இந்த நீர்நிலைகள் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும்.
* குழந்தைகள் விளையாடும் பகுதி உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த பூங்காவில் இடம் பெற்றிருக்கும்.
* சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்கள் மூலம் பூங்காவை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
* பூங்காவில் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும். அந்த மின்சாரம் பூங்கா முழுமைக்கும் உபயோகப்படுத்தப்படும்.
* தேசிய அனல் மின் நிறுவனம் (என்.டி.பி.சி) மூலம் மறுசுழற்சி செய்யப்படும் நீர் பூங்காவில் நடப்படும் மரம், செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.