ஆசியாவின் மிகப்பெரிய வாழைப்பழ சந்தை

உலகம் முழுவதும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகவும், ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழமாகவும் இருப்பது வாழைப்பழம்.

Update: 2023-07-02 05:54 GMT

அதனால் உலகம் முழுவதும் வாழைப்பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது. வாழைப்பழங்களை சந்தைப்படுத்தும் மார்க்கெட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் ஆசியாவிலேயே மிகப்பெரிய வாழைப்பழ சந்தை அசாம் மாநிலம் தரங்கிரியில் அமைந்துள்ளது. இந்த இடம் கவுகாத்தியில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 40 முதல் 50 லாரி வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாதந்தோறும் ரூ.4 கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

இங்கிருந்து வாழைப்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாழைப்பழங்களை வாங்கிச் செல்கிறார்கள். பூடான், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சாதாரண சந்தைகள் நடக்கும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தரங்கிரி மார்க்கெட் விழா கோலம் பூண்டுவிடும். அந்த சமயங்களில் வாழைப்பழங்கள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருக்கும். வழக்கத்தை விட இந்த மாதங்களில் வாழைப்பழ விளைச்சல் அமோகமாக நடப்பதுதான் அதற்கு காரணமாகும்.

வாழை மரம் வெப்ப மண்டலமான பகுதியில் அதே சமயம் ஈரப்பதமான சூழலில் வளரும் தன்மை கொண்டது. இதன் வளர்ச்சிக்கு 15 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவ வேண்டும். 75 முதல் 85 சதவீதம் வரை மண்ணில் ஈரப்பதம் நிலவ வேண்டும். அத்தகைய சூழலில்தான் வாழை மரம் நன்கு வளரும். வாழை சாகுபடிக்கு ஏற்ற மண் மற்றும் சாதகமான தட்பவெப்ப நிலை அசாமில் நிலவுகிறது. அதனால் அங்கு வாழை சாகுபடி அமோகமாக நடக்கிறது. அதுவே ஆசியாவின் மிகப்பெரிய வாழைப்பழ சந்தை அமைவதற்கு வித்திட்டிருக்கிறது.

அசாமில் சுமார் 15-20 வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அவற்றுள் சில ரக வாழைகள் தனித்துவ தன்மை கொண்டவை.

ஜஹாஜி: இந்த ரக வாழை மரங்கள் குட்டையாக வளரும். இந்த மரத்தில் விளையும் வாழைப்பழங்கள் பழுப்பதற்கு 350 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார் ஜஹாஜி: இந்த வாழை மரங்கள் உயரமாக வளரக்கூடியவை. அதில் வாழை பூ பூத்து பழமாக மாறுவதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகிவிடும்.

செனிச்சம்மா: இந்த மரங்கள் குட்டையாகவோ, உயரமாகவோ இருக்காது. இந்த ரக வாழை மரங்கள் எல்லாமே குறிப்பிட்ட உயரம் வரையே வளரும். வாழைப்பழங்கள் ஒரு வருடத்தில் முழுமையாக பழுத்து விடும்.

மல்போக்: இந்த ரக வாழை மரங்கள் நடுத்தர உயரம் கொண்டவை. வாழைப்பழங்கள் பழுப்பதற்கு 370 நாட்கள் வரை ஆகிவிடும். இந்த வாழை மர சாகுபடிக்கு களிமண் ஏற்றது.

தரங்கிரி சந்தையில் வாழைப்பழங்கள் குவியல் குவியலாக குவிந்தாலும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையே நீடிக்கிறது. குளிர்பதன கிடங்கு இல்லாதது, மோசமான சாலை, போதிய கல்வி அறிவின்மை போன்ற காரணங்கள் விவசாயிகள் விளைவிக்கும் வாழைப்பழங்களுக்கு சரியான விலை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்