பேஷன் துறையில் புதுமைகள் படைக்கும் பெண்மணி

கோயம்புத்தூரை சேர்ந்த கவிதா செந்துராஜ், பேஷன் டிசைனிங் துறையில் பேரார்வம் கொண்டவர். பேஷன் துறையில் பல புதுமைகளை புகுத்தி வருவதுடன், தேசிய அளவிலான பேஷன் மாநாடுகளிலும் கலந்துகொண்டு அசத்துகிறார்.

Update: 2023-04-30 13:32 GMT

அந்தவகையில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பேஷன் மாநாட்டில் பங்கேற்றதுடன், தமிழ்நாட்டு ஆடை பாரம்பரியத்தை எல்லோரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தி பலரது பாராட்டுகளை அள்ளியிருக்கிறார். அதுபற்றி, கவிதா பகிர்ந்து கொண்டவை இதோ....

* பேஷன் துறையில் ஆர்வம் பிறந்தது எப்படி?

சிறுவயதில் இருந்தே, எனக்கு கற்பனைத் திறன் அதிகம். குறிப்பாக, வழக்கமான கண்ணோட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் புதுமையான கண்ணோட்டத்தில் சிந்திப்பேன். அதேசமயம், பேஷன் டிசைனிங் துறைக்கு தேவையான ஓவியம் வரைதல், கிராப்டிங் திறன் ஆகியவை இயல்பாகவே என்னிடம் இருந்ததால், பேஷன் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன். பேஷன் டிசைனிங்கில் பி.டெக் முடித்திருப்பதுடன், 'நிப்ட்' எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் 'ஸ்டைலிங்' படிப்பையும் முடித்திருக்கிறேன்.

* பேஷன் துறையில் எத்தகைய புதுமைகளை படைத்திருக்கிறீர்கள்?

புதுப்புது டிரெண்டுகளுக்கு ஏற்ப, நம்மை நாமே அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். அதற்காக, தேசிய-சர்வதேச அளவில் நடக்கும் பேஷன் நிகழ்வுகள் மற்றும் பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நடப்பு உலகின் பேஷன் டிரெண்டுகளை கற்று உணர்ந்திருக்கிறேன். அதே பேஷன் மேடைகளில், என்னுடைய கைவண்ணத்திலும் சில ஆடைகளை தயாரித்து, காட்சிப்படுத்தி பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். குறிப்பாக, தாஜ் மஹா உத்சவ் நிகழ்வில், தவறாமல் கலந்து கொள்வது வழக்கம்.

* அது என்ன தாஜ் மஹா உத்சவ் நிகழ்வு?

இது உத்தர பிரதேச அரசாங்கத்தால் நடத்தப்படும் பேஷன் மற்றும் கலாசார நிகழ்ச்சி. இந்த வருடம் தேசிய அளவில் வெகுவிமரிசையாக நடத்தி இருந்தனர். அதனால் இந்தியா முழுவதும் இருந்து பல பேஷன் டிசைனர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இதில் அந்தந்த மாநில கலாசாரங்களை பெருமைப்படுத்தும் விதமாக, 'பேஷன் ஷோ' நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில்தான், நான் தமிழக கலாசார பெருமைகளை புகுத்தி, நவ-நாகரிக உடைகளை வடிவமைத்து காட்சிப்படுத்தி இருந்தேன்.

* என்ன செய்தீர்கள்?

1960-ம் ஆண்டுகளில் மிக பிரபலமாக இருந்த தமிழ்நாட்டு கலாசார உடைகளை, மையப்படுத்தி ஆடைகளை வடிவமைத்தேன். குறிப்பாக, காதி காட்டன் மற்றும் பட்சத்திரா எனப்படும் கலம்காரி கைவேலைப்பாடுகள் கலைவண்ணத்தில், பாவாடை தாவணியில் நம் தமிழக உடை பாரம்பரியத்தோடு இழைந்தோட செய்து ஆடைகளை உருவாக்கி இருந்தேன். அதை பேஷன் ஷோவில் காட்சிப்படுத்தியபோது, எல்லோரும் கைத்தட்டி வரவேற்று ரசித்தனர். என்னை பெரிதும் பாராட்டினர்.

* பேஷன் துறையில் குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்றிருக்கிறீர்களா?

ஆம்..! பசுமை உலகிற்கு ஏதுவான துணி வகைகளை தேர்ந்தெடுத்து உடை தயாரித்து, காட்சிப்படுத்தியதற்காக இந்த வருடம் நடைபெற்ற தாஜ் மஹா உத்சவ் நிகழ்வில் எனக்கு தேசிய டிசைனர் விருது கிடைத்தது. பேஷன் உலகின் இது தனிப்பெரும் அடையாளமாக கருதப்படும்.

* உங்களுடைய ஆசை என்ன?

நிறையவே இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பேஷன் துறையில் கோலோச்சுவது மிக அரிதாகவே இருக்கிறது. இந்த கருத்தை உடைத்தெறிந்து, தென்னிந்தி யாவிலும் நிறைய பேஷன் டிசைனர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும் பேஷன் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்வதே என்னுடைய ஆசை. லட்சியம். மேலும் மேற்கத்திய நாடுகளில் உலாவும் பேஷன் டிரெண்டுகளை, இந்தியாவிற்குள்ளும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் புகுத்த ஆவலாக இருக்கிறேன்.

* பேஷன் உலகில் உங்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத அனுபவத்தை பற்றி கூறுங்கள்?

சமீபத்திய நிகழ்வின்போது பிரபல மாடலுக்கு நான் செய்து கொடுத்திருந்த உடை அலங்காரத்தை, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மற்ற அரசு அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். மேலும், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு நான் செய்துகொடுத்த உடை அலங்காரம், பேஷன் உலகிலும், உத்தர பிரதேசத்திலும் வைரலாகியது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பேஷன் துறையில் கோலோச்சுவது மிக அரிதாகவே இருக்கிறது. இந்த கருத்தை உடைத்தெறிந்து, தென்னிந்தியாவிலும் நிறைய பேஷன் டிசைனர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும் பேஷன் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்வதே என்னுடைய ஆசை. லட்சியம்.

Tags:    

மேலும் செய்திகள்