தோல் பாவைக்கூத்தில் புதுமை புகுத்தும் கலைஞர்
அன்றைய கால கட்டத்தில் கிராமங்களில் பாவைக்கூத்துகள் பல நாட்கள் நடப்பது வழக்கம். அப்போது ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை தொடர்ச்சியாக நடத்துவார்கள்.;
இன்றைக்கும் நம் அனைவரையும் கட்டிப்போட்டு இருக்கும் திரைப்படத்தின் முன்னோடி தோல் பாவைக்கூத்து. அன்றைய தினம் வெண் திரைக்கு பின்னால் இருந்த ஒளியில் கண்களுக்கு விருந்து கொடுத்தவை தோலால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள். அது பிற்காலத்தில் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட படச்சுருளில் இருந்து பாயும் ஒளியில் திரைப்படமாக ஜொலித்தது வெண்திரையில்.
அன்றைய கால கட்டத்தில் கிராமங்களில் பாவைக்கூத்துகள் பல நாட்கள் நடப்பது வழக்கம். அப்போது ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை தொடர்ச்சியாக நடத்துவார்கள்.அன்றைய கால கட்டத்தில் கிராமங்களில் பாவைக்கூத்துகள் பல நாட்கள் நடப்பது வழக்கம். அப்போது ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை தொடர்ச்சியாக நடத்துவார்கள். அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பார்கள். அன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது தோல் பாவைக்கூத்து. ராமாயணத்தில் இடம்பெற்ற ராமர், லட்சுமணன், 10 தலை ராவணன் ஆகியோரை கண்முன் காட்டியது இந்த தோல்பாவை கூத்து தான். குறிப்பாக புராண காவியங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை தோல் பாவைக் கூத்துக்கும் உண்டு.
காலமாற்றம் இன்றைக்கு தோல்பாவைக்கூத்தை நலிவடைந்த நிைலக்கு கொண்டு சென்றுவிட்டது. மாறிவரும் நவீன யுகத்துக்கு ஏற்ற வகையில் புதுமையை புகுத்தி தோல்பாவைக் கூத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சில கலைஞர்கள் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் குமாி மாவட்டத்தை சேர்ந்த முத்துசந்திரன். தனது கலை சேவையால் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற அவருக்கு வயது 48.
தோல்பாவைக் கூத்து மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முத்துசந்திரன் நடத்தி வருவதால் இது மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தோல்பாவைக் கூத்தை ரசிக்க தொடங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது பாரம்பரியம் மிக்க தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியை கடல்தாண்டி அமெரிக்காவுக்கு சென்று முத்துசந்திரன் நடத்த இருப்பதுதான் 'ைஹலைட்'டான விஷயம்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மண்ணும் மரபும் என்று தலைப்பில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை வருகிற 30-ந் தேதி முதல் 3 நாட்கள் நடத்துகின்றன. அதில் முத்துசந்திரன் தன் குடும்பத்துடன் சென்று பங்கேற்று தமிழரின் கலையை உலகுக்கு பறைசாற்ற உள்ளார். அவர் தனது தோல் பாவைக் கூத்து அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை பற்றி?
எனது சொந்த ஊர் எது என்று எனக்கே தெரியாது. ஏனெனில் நாங்கள் நாடோடிகள். கிராமம் கிராமமாக சென்று தோல்பாவைக் கூத்து நடத்தி பிழைத்து வந்தோம். ஒரு ஊர் சென்றால் அங்கு 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை கூத்து நடக்கும். அதுவரை அந்த ஊர்தான் சொந்த ஊர். எங்களது முன்னோர்கள் தஞ்சாவூரில் இருந்ததாக என் தாத்தா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் வசித்து வருகிறோம்.
எனக்கு மனைவியும், 4 மகன்களும் உண்டு. என்னுடன் தம்பி முத்து முருகன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். எனது 3-வது தம்பி வெளியூரில் வசிக்கிறார். என் தாயாரும் எங்களுடன் உள்ளார். நாங்கள் 12 பேர் வசிக்கிறோம். எங்களுக்கு தோல்பாவை கூத்து தான் பிரதான தொழில். சொந்த வீடு இல்லை என்றாலும் அங்கு பாசத்துக்கு பஞ்சம் இ்ல்லை. கூத்து நாட்களில் அனைவரும் குடும்பமாக சென்று நிகழ்ச்சி நடத்துவோம். கூத்து இல்லாத நாட்களில் என் மூத்த மகன் கிடைக்கும் வேலைக்கு செல்கிறார். தாயார் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மண் வெட்ட செல்வார். இப்படி கிடைக்கும் வேலைகளை செய்து குறைவான வருமானத்தை வைத்து நிறைவாக வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
எத்தனை ஆண்டுகளாக கூத்து நடத்துகிறீர்கள்?
தோல்பாவைக் கூத்து எங்களுக்கு குடும்ப கூத்து ஆகும். அதன் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு பற்று உண்டு. என் அப்பாவை பார்த்தாலே பயம் மேலிடும். அதனால் இந்த கூத்தை என் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். 7-வது தலைமுறையாக நான் கூத்து நடத்தி வருகிறேன். எனக்கு அனைத்து விதமான புராணங்களும் தெரியும். ராமாயணத்தில் மட்டும் 8 காண்டம் தெரியும். 31 குரல்களில் கூத்து நடத்தி பொதுமக்களை மகிழ்விப்பேன். நான் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். அதுபோல சிறுவயதில் இருந்தே தோல்பாவைக் கூத்து எனக்கு பழக்கப்பட்டு விட்டது.
தோல்பாவைக் கூத்தில் குடும்பத்தாரின் பங்கு என்ன?
தோல்பாவைக் கூத்து நடத்த மூளை, வாய், கைகள் மற்றும் கால்கள் சேர்ந்து செயல்பட வேண்டும். கைகள் அசைவுக்கு ஏற்றார் போல குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு குரல் கொடுக்க வேண்டும். நன்கு கைதோ்ந்தவர்களால் தான் தோல்பாவைக் கூத்தை நடத்த முடியும். நான் நிகழ்ச்சியை நடத்துவேன். என் தாயார் பின்னால் இருந்து இசை கொடுப்பார். என் தம்பி தோல் பொம்மைகளை தயார் செய்து வண்ணம் தீட்டுவார். மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப் பினர்களுக்கும் சிறு சிறு வேலைகள் இருக்கும்.
தற்போதைய நவீன காலத்தில் தோல்பாவைக் கூத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா?
2000-ம் ஆண்டில் இருந்தே தோல்பாவைக் கூத்து நலிவடைய தொடங்கி விட்டது. 2006-க்கு பிறகு 2 ஆண்டுகளாக நான் தோல்பாவை கூத்தை விட்டுவிட்டேன். ஏெனனில் குடும்பத்தை கவனிக்க போதிய வருமானம் இல்லாததால் கிடைத்த வேலைக்கு சென்று வந்தேன். இத்தோடு என் கூத்து வாழ்கை முடிந்துவிட்டதோ என்று எண்ணினேன். அப்போது தான் ஆராய்ச்சியாளர் அ.க.பெருமாளின் அறிமுகம் கிடைத்தது. அவரது சந்திப்புக்கு பிறகு தான் என் வாழ்வில் மீண்டும் தோல்பாவைக் கூத்து துளிர்விட்டது.
அவரது அறிவுரைகளின்படி தோல்பாவை கூத்தின் தோற்றத்தை மாற்றி அமைத்தேன். தற்போதைய 5ஜி காலத்துக்கு ஏற்றார்போல சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தடுப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வை தோல்பாவைக் கூத்து மூலம் மக்களுக்கு ஏற்படுத்தினேன். இதற்காக அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்றார் போல ேதால் பொம்மைகளை தயார் செய்தோம். நகைச்சுவையுடன் கலந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது எங்கள் நிகழ்ச்சிக்கு நிறைய கூட்டம் வருகிறது.
புராண காலத்து கதைகளுக்கு வரவேற்பு உள்ளதா?
உள்ளங்கையில் உலகை பார்க்கும் தற்போதைய நவீன காலத்தில் பழமையான புராண கதைகளை யாரும் கண்டுகொள்வது இல்லை. ராமாயணம், மகாபாரத கதைகளை அடிப்படையாக கொண்டு கூத்து நடத்துவதை யாரும் விரும்புவது இல்லை. புராண கதைகள் என்றாலே மக்களுக்கு சலிப்பு தட்டுகிறது. ஆனால் சுதந்திரத்துக்கு முன்பும், அதன்பிறகும் ராமாயண கதைகளை கொண்டு மட்டும் 10 நாட்கள் கூத்து நடக்கும்.
போதிய வருமானம் கிடைக்கிறதா?
தற்போது மாதத்துக்கு 3 அல்லது 4 நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது. கூத்து நடத்த இவ்வளவு தான் கட்டணம் என்று நிர்ணயித்தது இல்லை. கூத்து நடத்த அழைப்பவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வோம். குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கூத்துக்கு கூலி கொடுத்து இருக்கிறார்கள். கூத்து நடக்கும் நேரத்தை கணக்கில் கொண்டு கூலி கொடுப்பார்கள்.
எங்கெல்லாம் கூத்து நடத்தி இருக்கிறீர்கள்?
நான் மத்திய பிரதேசம், கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மும்ைப ஆகிய இடங்களுக்கு சென்று தமிழரின் பாரம்பரியமான தோல்பாவைக் கூத்தை நடத்தி இருக்கிறேன். கலைமாமணி, கலை சுடர் மணி, மரபு காவலர், நாட்டார் கலை கோன் ஆகிய விருதுகளை வாங்கி இருக்கிறேன். சென்னையில் 68 மாணவர்களுக்கு தோல்பாவைக் கூத்து நடத்துவது எப்படி? என்று 3 நாட்கள் பயிற்சி வழங்கி இருக்கிறேன்.
அமெரிக்க பயணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழிலே இல்லை என்ற நிலையில் இருந்த எனக்கு தற்போது மீண்டும் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. குமரி மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்த வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் என்னை அணுகினார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா பற்றி நாங்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது. கிராமங்களிலும், வெளி மாநிலங்களிலும் தான் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். ஆனால் தற்போது வெளிநாடு செல்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அமெரிக்கா சென்று தமிழ் கலையை எடுத்துரைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களது ஆசை என்ன?
நான் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். பல்வேறு விருது வாங்கி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன். ஆனால் எங்களுக்கு என்று சொந்தமாக வீடு கிடையாது. சொந்த வீடு எங்கள் நெடுநாளைய கனவு. எங்களுக்கு வேறு தொழிலும் கிடையாது, தெரியவும் செய்யாது. எனவே அரசு சார்பில் சொந்த வீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
விளக்கொளியில் மிளிர்ந்த கூத்து
நாள் எல்லாம் உழைத்து சோர்ந்து போன பொதுமக்கள் களைப்பு போக கூத்து பார்த்து மகிழ்ந்தனர். கஷ்டமான சூழ்நிலைகளில் கூட தோல்பாவைக் கூத்து மக்களை சிரிக்க வைத்துள்ளது. இதுபற்றி முத்துசந்திரன் கூறுகையில், "தோல்பாவை கூத்தை இரவில் மட்டுமே நடத்த முடியும். கூத்து தொடங்கிய காலத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கூத்து நடந்தது. அதன்பிறகு 2.30 மணி நேரம் நடத்தினோம். அது தற்போது 20, 30 மற்றும் 45 நிமிடங்கள் முறையே நடக்கிறது. அதற்கு மேல் கூத்து நடத்தினால் மக்களின் கவனம் சிதறி கூட்டம் கலைந்துவிடும். எனவே அதற்கு ஏற்றார் போல குறிப்பிட்ட நேரத்தில் கதையை சொல்லி வருகிறோம். தோல்பாவைக் கூத்து 3 பரிமாண வளர்ச்சியை கண்டுள்ளது. அதாவது மின்சார சப்ளைக்கு முன் விளக்கொளியில் நடந்து வந்த கூத்து பின்னர் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் மூலம் நடத்தப்பட்டது. தற்போது நவீன முறையில் எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தி கூத்து நடத்துகிறோம். ஆமணக்கு விளக்குகளில் தொடங்கி எல்.இ.டி. விளக்குகள் வரை அனைத்து விதமான ஒளி மூலமும் கூத்து நடத்தி இருக்கிறோம். விளக்கு பயன்படுத்தியபோது புன்னங்கொட்டை எண்ணெய்யை பயன்படுத்தினோம். அந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது" என்றார்.
106 ஆண்டுகள் பழமையான தோல் பொம்மை
எல்லா தந்தையும் தன் குழந்தைகளுக்கு வீடு, நிலம் என்று சொத்து சேர்த்து வைத்து இருப்பார்கள். ஆனால் முத்துசந்திரனின் தந்தை அவருக்கு சொத்தாக வழங்கியது தோல்பொம்மைகள் தான். அதை வைத்து கூத்து நடத்தி பிழைத்துக்கொள் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "தோல் பொம்மைகள் தான் எங்களது சொத்து. அது தான் எங்களுக்கு சோறு போடுகிறது. தோல்பொம்மைகள் உருவாக்க ஆட்டின் தோலை பயன்படுத்துவோம். ஏெனனில் ஆட்டு தோலில் மட்டும் தான் விளக்கொளியில் பிரகாசமாக உருவம் தெரியும்.
என் தாத்தா காலத்தில் உள்ள தோல் பொம்மைகளும் என்னிடம் உள்ளது. அந்த மொம்மைகள் 106 ஆண்டுகள் பழமையானது. அப்போது தயார் செய்யப்பட்ட பொம்மைகளில் கருப்பு, லேசான மஞ்சள் போன்ற நிறங்கள் மட்டும் தான் பயன்படுத்தி இருப்பார்கள். ஏனெனில் அந்த காலத்தில் வண்ண நிறங்கள் பெரிய அளவில் கிடைக்காது. விளக்கு எாிந்த இடத்தில் உள்ள கரியை தான் கருப்பு நிறமாக பயன்படுத்தினோம். சப்பாத்திக்கள்ளி செடியில் இருந்தும், வாடாத்தி செடியில் இருந்தும் நிறங்களை தயார் செய்தோம்" என்றார்.