ஒரே மரத்தில் 165 வகை மாம்பழங்கள்

மாம்பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வளர்ப்பது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு மண்ணின் தன்மையும், காலநிலையும் ஈடு கொடுக்காது. இருப்பினும் கலப்பினம், ஒட்டு முறை மூலம் அந்தந்த காலநிலைக்கு ஏற்ற சூழலில் மாம்பழ வகைகளை வளர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.;

Update: 2023-06-06 15:03 GMT

ஒட்டு முறையை பயன்படுத்தி ஒரே மரத்தில் பல வகையான மாம்பழங்களை விளைவிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அப்படி மாம்பழ விளைச்சலில் புரட்சி செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுள் தனித்துவமானவராக திகழ்கிறார், குஷால் கோஷ். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர் ஒரே மரத்தில் ஒட்டு முறையைப் பயன்படுத்தி 165 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்து அசத்தி இருக்கிறார்.

கோஹிதூர், பம்பாய், ஹிம்சாகர், லாங்க்ரா, சாரங்கா, பிம்லி, பீரா, சம்பா, ராணி பசந்த், அன்னாசி, அல்போன்சா, பாஸ்லி, கோலப்காஸ், பஞ்சவர்ணம் உள்பட விதவிதமான மாம்பழ ரகங்கள் அந்த மரத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட வடிவங்கள், அளவுகளில் காய்த்து குலுங்குவது அந்த மரத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சாதனை படைப்பதற்காக ஒரே மரத்தில் 165 மாம்பழ வகைகளை விளைவிக்கவில்லை என்கிறார், குஷால் கோஷ்.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வசிக்கும் குஷால் கோஷ் மாம்பழ ஆராய்ச்சியாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். சிறு வயது முதலே மா மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டி இருக்கிறார். அவரது மாம்பழ ஆர்வம் அங்குள்ள பாக்தோஹர் பகுதியில் மாம்பழ தோட்டத்தை கட்டமைக்க வைத்துவிட்டது.

அந்த பகுதியில் இவரை போலவே பலரும் மாம்பழ தோட்டங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த பகுதியில் குடியிருப்புகள் பெருகியதால் பல மாமர தோட்டங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சில மாம்பழத்தோட்டங்கள் இன்னும் இருந்தாலும் அங்கு எல்லா வகையான மா மரங்களும் காணப்படவில்லை.

குறிப்பாக அந்த காலத்தில் நவாப்கள் விரும்பி ருசித்த மாம்பழங்கள் மறைந்தே போய்விட்டன. நவாப் காலத்து மாம்பழங்களை பாதுகாக்கும் முயற்சியில் களம் இறங்கிய கோஷ், தனது தோட்டத்தில் எல்லா வகையான மாம்பழங்களும் விளைய வேண்டும் என்றும் தீர்மானித்தார். அதற்கு பழ தோட்டத்தில் இட பற்றாக்குறை ஏற்படவே ஒட்டு முறையில் ஒரே மரத்தில் பல மாமர வகைகளை வளர்க்க முடிவு செய்தார்.

அவரது ஈடுபாடு ஒரே மா மரத்தில் 165 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்ய வைத்துவிட்டது. மேலும் கலப்பினம் மூலம் லாம்போ, ஷியாம்போக் போன்ற புதிய ரக மாம்பழங்களையும் அறிமுகம் செய்துள்ளார். இந்த கலப்பு வகை மாம்பழங்கள் சுவையிலும், நறுமணத்திலும் அபாரமாக இருப்பதாக கூறுகிறார்.

"முர்ஷிதாபாத் மண்ணில் இருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் படிப்படியாக மறைந்து வருகின்றன. இந்த விஷயம் என்னை சிந்திக்க வைத்தது. மாம்பழ வகைகள் அழிந்து கொண்டிருப்பது கவலையையும் ஏற்படுத்தியது. பல்வேறு வகையான மாம்பழங்களை பாதுகாக்க, தோட்டக்கலை அதிகாரியை அணுகினேன். அவரிடம் ஒட்டுதல் மூலம் ஒரே மரத்தில் பல வகையான மாம்பழங்களை வளர்ப்பதற்கான நேரடி பயிற்சி பெற்றேன்.

கடந்த 2000-ம் ஆண்டு முதல், ஒட்டு முறையில் ஒரே மரத்தில் பல்வேறு வகையான ஒட்டு செடிகளை நடும் பணியை தொடங்கினேன். இரண்டு ஆண்டுகளில் சில ரக மாம்பழங்கள் விளைய தொடங்கின. அது கொடுத்த ஊக்கம் ஒட்டு முறையை விரிவாக்கம் செய்ய தூண்டியது.

இப்போது ஒரே மரத்தில் 165 வகையான மாம்பழங்களை விளைவிக்கிறோம். இந்த ஆண்டு இரண்டு மரங்களில் மாம்பழங்கள் விளைந்துள்ளன. சில புதிய வகை மாம்பழங்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் பல புதிய வகை மா மரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இன்னும் கூடுதல் ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று நம்புகிறோம்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்