இந்திய ஓட்டப்பந்தய அணிக்கு பயிற்சி அளிக்கும் தமிழர்..!

இந்திய ஓட்டப்பந்தய அணியினருக்கு (ஸ்பிரிண்டர், ஹர்டில் மற்றும் ரிலே) கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருபவர் பிரேம் ஆனந்த்.

Update: 2023-09-03 02:40 GMT

சென்னையை சேர்ந்த பிரேம் ஆனந்த், முன்னாள் தடகள வீரர். ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில், ஸ்பிரிண்டர், 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்பிரிவுகளில் பங்கேற்று, பதக்கமும் வென்றிருக்கிறார். இவர், காயம் காரணமாக தடகளப் போட்டிகளில் இருந்து மிக விரைவிலேயே ஓய்வு பெற்றாலும், தன்னுடைய வாழ்க்கையை தடகளப் பயிற்சியாளராக மேம்படுத்திக்கொண்டு, இப்போது இந்திய அணியினருக்கு பயிற்சியளித்து வருகிறார். இவரது பயிற்சி, நிறைய இளம் வீரர்-வீராங்கனைகளை சர்வதேச தரத்திலான வெற்றியாளர்களாக மாற்றியிருக்கிறது.

தமிழக ஓட்டப்பந்தய நட்சத்திரங்களான ராஜேஷ் ரமேஷ், மோகன் குமார்... உட்பட பலருக்கும், பயிற்சி அளித்து அவர்களை 'தடகள சிங்கங்களாக' மாற்றிய பெருமை, இவரையே சாரும்.

அவர் நம்முடைய கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே, சென்னையின் கொண்டிதோப்பு போலீஸ் குடியிருப்பில்தான். அம்மாவும், அப்பாவும் போலீசாக பணியாற்றியவர்கள். இதில் அப்பாவுக்கு தடகளத்தில் ஆர்வம் அதிகம் என்றாலும், தேசிய அளவில் பதக்கம் வென்றதில்லை. அதனால் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த ஆர்வம், மாவட்ட அளவிலான போட்டிகளை தாண்டி மாநிலம், தேசியம், ஆசிய அளவிலான போட்டிகள் வரை நீண்டது. நிறைய அனுபவங்களும், பதக்கங்களும் கிடைத்தது. ஒருகட்டத்தில் தொடர் காயத்தினால் தடகளத்தை தொடர முடியாத சூழலில், விளையாட்டு கோட்டா அடிப்படையில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டராக பணி கிடைக்கவே, அதில் இருந்து வெளியேறி விட்டேன்.

* ஓட்டப்பந்தய வீரர், ஓட்டப்பந்தய பயிற்சியாளராக மாறியது எப்படி?

ஓட்டப்பந்தய களத்திலேயே, அதிக நாட்களை கழித்த என்னால், அதிலிருந்து திடீரென முழுமையாக வெளிவர முடியவில்லை. செய்து முடிக்கப்படாத வேலைகள் மிஞ்சம் இருப்பதை போல உணர்ந்ததால், லயோலா கல்லூரி மற்றும் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவர்களுக்கு, இலவசமாகவே ஓட்டப்பயிற்சிகளை வழங்கினேன். இன்று தமிழகத்தின் ஓட்டப்பந்தய நட்சத்திரமாக கருதப்படும் ராஜேஷ் ரமேஷ், மோகன் போன்றவர்கள், 2016-ம் ஆண்டிலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்றனர். 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, தனிப்பட்ட பயிற்சியாளராக செயல்பட்டு நிறைய இளம் வீரர்களை, ஓட்டப்பந்தய சாம்பியன்களாக பட்டை தீட்டினேன். 2018-ம் ஆண்டு முதல் தமிழக விளையாட்டு அணிக்கு 'எக்ஸ்பெர்ட்' ஆக செயல்பட்டேன். 2021-ம் ஆண்டில், இந்திய ஓட்டப்பந்தய அணிக்கு பயிற்சி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அன்றிலிருந்து இன்று வரை இந்திய ஜூனியர், சீனியர், பெண்கள் அணிக்கு என தேசிய அளவில் வீரர்களை தயாராக்குகிறேன். குறிப்பாக, விரைவு ஓட்டம் (ஸ்பிரிண்ட்), தடை தாண்டும் ஓட்டம் (ஹர்டில்) மற்றும் தொடர் ஓட்டம் (ரிலே) ஆகியவற்றின் தலைமை பயிற்சியிடமான திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுக்கிறேன்.

* கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ஓட்டப்பந்தய வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். என்ன 'மேஜிக்' நடக்கிறது?

என்னை போன்ற முன்னாள் இந்திய ஓட்டப்பந்தய வீரர்களின் அனுபவமும், சர்வதேச பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும் வெற்றிக்கான 'மேஜிக்'கை நிகழ்த்துகிறது. ஆம்..! மின்னல் வேக வீரர்களான உசேன் போல்ட், யோகன் பிளேக்... ஆகியோரின் தாய்நாட்டில் (ஜமைக்கா) இருந்து, ஜாசன் டாவ்சன் என்ற பயிற்சியாளரை நியமித்திருக்கிறார்கள். அவரது பயிற்சிக்கு பிறகு, இந்திய அணிக்கு புதுநம்பிக்கை கிடைத்திருப்பதை போல உணர்கிறேன்.

* சமீப காலமாக நிறைய தமிழக வீரர்களை, ஓட்டப்பந்தய களத்தில் பார்க்க முடிகிறதே, எப்படி?

பொதுவாகவே, தமிழக தடகள வீரர்களுக்கு திறமை அதிகம். குறிப்பாக, தமிழ்நாட்டில் 'விளையாட்டு விடுதி' கட்டமைப்பு அதிகம் என்பதால், தமிழ்நாட்டை சேர்ந்த பல இளம் வீரர்களை பந்தய களத்தில் பார்க்க முடிகிறது. மேலும், ஸ்பிரிண்டர் எனப்படும் குறுகிய தூர பந்தயத்தில் தமிழகம், கேரளா மற்றும் பஞ்சாப் வீரர்களே அதிகமாக தென்படுவார்கள். ஏனெனில் நமக்கு, வேகமாக ஓடும் திறன் இயற்கையாகவே உண்டு.

* இந்திய அணியின் பயிற்சியாளராக உங்களது லட்சியம், ஆசை என்ன?

ஓட்டப்பந்தய வீரர்களாக இருந்தாலும், பயிற்சியாளர்களாக இருந்தாலும்... நாங்கள் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றைதான். அது, ஒலிம்பிக் போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்வது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இது வெறும் ஆசையாகவே இருந்தது. ஆனால் இப்போது தீவிரமாக முயற்சி செய்தால், கிடைக்கக்கூடிய பரிசாக இருக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் என்ற ஒற்றை குறிக்கோளுடன்தான் நாங்கள் ஒட்டுமொத்தமாக பயணிக்கிறோம்.

* இந்திய தடகள வீரர்கள், சிறப்பாக முன்னேறி வருவதற்கு எதை உதாரணமாக சொல்வீர்கள்?

சமீபத்தில் புதாபெஸ்ட் நகரில் நடந்து முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணி 5-வது இடத்தில் நிறைவு செய்தது. நூலிழையில்தான், 4-வது இடத்தை தவறவிட்டோம். அதேபோல கொலாம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட் பட்டோருக்கான கலப்பு தொடர் ஓட்டத்தில் என் தலைமையிலான இளம் படை வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறது. இதே உத்வேகம் எதிர்காலத்திலும் தொடரும்.

* ஓட்டப்பந்த வீரர்களின் எதிரி என நீங்கள் எதை குறிப்பிடுவீர்கள்?

'காயம்' என்பதுதான் என்னுடைய பதில். காயம் காரணமாக, திறமையான வீரர்களும், பல முக்கியமான சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறார்கள். அதனால்தான், சொல்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்